கோழையும், அதனால் ஏற்படும் பல நோய்களும், மோகங்களும், ஆசைகளைத் தூண்டும் ஐம்பொறிகளும், பல கலை நூல்களும், அவற்றின் சூழ்ச்சிகளும் ஆகிய சேற்றைத் தாண்டாது, துள்ளி அவைகளுக்கு உள்ளேயே விழுந்து இறந்து போகிற உள்ளமும், மனை வாழ்க்கையையே எண்ணுகின்ற ஆசையும், பொய்யும் நீங்காத இந்த உடலை வளர்க்கின்ற உயிர் உய்யும்படியான நல்ல யோக வழிகளை நான் அணுகாமல், இழிவான அறிவுப் பேச்சுக்களைப் பேசித் துன்பம் அடைகின்ற என்னை உனது நல்ல திருவடிகளில் சேர்த்தருள்வாயாக. மெய்யனே, வள்ளிமலைச் சோலையில் நீண்ட நேரமாக வள்ளியை உன் பன்னிரு சிவந்த புயங்களாலும் இறுகத் தழுவுவோனே, வெள்ளையானை ஐராவதத்தின் மீது ஏறும் இந்திரனின் சுற்றமாகிய தேவர்கள் வாழ, கடலினிடையே பல காலம் முதுமையான மாமரமாக நின்ற சூரனுடன் போர் புரிந்தவனே, உலகெல்லாம் முழுமையாக ஆளும் ஐயனே, மயில் வீரனே, வல்லம் என்னும் திருத்தலத்தில் உள்ள முருகனே, முத்தமிழ்க் கடவுளே, வள்ளிக் கொடி படரும் மலைச்சாரல் உள்ள வள்ளிமலையில் வாழும் வள்ளியின் மணவாளப் பெருமாளே.
ஐயும் உறு நோயும் மையலும் ... கோழையும், அதனால் ஏற்படும் பல நோய்களும், மோகங்களும், அவாவின் ஐவரும் ... ஆசைகளைத் தூண்டும் ஐம்பொறிகளும், உபாயப் பலநூலின் அள்ளல் கடவாது ... பல கலை நூல்களும், அவற்றின் சூழ்ச்சிகளும் ஆகிய சேற்றைத் தாண்டாது, துள்ளியதில் மாயும் உள்ளமும் ... துள்ளி அவைகளுக்கு உள்ளேயே விழுந்து இறந்து போகிற உள்ளமும், இல் வாழ்வைக் கருதாசைப் பொய்யும் ... மனை வாழ்க்கையையே எண்ணுகின்ற ஆசையும், பொய்யும் அகலாத மெய்யைவளர் ஆவி உய்யும்வகை ... நீங்காத இந்த உடலை வளர்க்கின்ற உயிர் உய்யும்படியான யோகத்து அணுகாதே ... நல்ல யோக வழிகளை நான் அணுகாமல், புல்லறிவு பேசி யல்லல் படுவேனை ... இழிவான அறிவுப் பேச்சுக்களைப் பேசித் துன்பம் அடைகின்ற என்னை நல்லஇரு தாளிற் புணர்வாயே ... உனது நல்ல திருவடிகளில் சேர்த்தருள்வாயாக. மெய்ய பொழில் நீடு தையலை ... மெய்யனே, வள்ளிமலைச் சோலையில் நீண்ட நேரமாக வள்ளியை மு(ந்)நாலு செய்யபுய மீதுற்று அணைவோனே ... உன் பன்னிரு சிவந்த புயங்களாலும் இறுகத் தழுவுவோனே, வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ ... வெள்ளையானை ஐராவதத்தின் மீது ஏறும் இந்திரனின் சுற்றமாகிய தேவர்கள் வாழ, வெள்ள முது மாவைப் பொருதோனே ... கடலினிடையே பல காலம் முதுமையான மாமரமாக நின்ற சூரனுடன் போர் புரிந்தவனே, வையமுழுதாளும் ஐய மயில் வீர ... உலகெல்லாம் முழுமையாக ஆளும் ஐயனே, மயில் வீரனே, வல்லமுருகா முத் தமிழ்வேளே ... வல்லம் என்னும் திருத்தலத்தில் உள்ள முருகனே, முத்தமிழ்க் கடவுளே, வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு ... வள்ளிக் கொடி படரும் மலைச்சாரல் உள்ள வள்ளிமலையில் வாழும் வள்ளிமணவாளப் பெருமாளே. ... வள்ளியின் மணவாளப் பெருமாளே.