அல் அசல் அடைந்த வில் அடல் அநங்கன் அல்லி மலர் அம்பு தனை ஏவ
பிள்ளை மதி அள்ளி எரி சிந்த தென்றல் ஐயம் அது கிண்ட
அணையூடே சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று
தொல்லை வினை என்று முனியாதே
துய்ய வரி வண்டு செய்ய மது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும்
கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே
வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில் வீரா
வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே.
மாலைப் பொழுதினில் வந்து சேர்ந்த, வில்லை ஏந்திய வெற்றி பொருந்திய, மன்மதன் தனது அல்லி மலர்ப் பாணத்தைச் செலுத்த, பிறைச்சந்திரனும் நெருப்பை அள்ளி வீச, தென்றற் காற்றும் (அங்ஙனம் நெருப்பு வீசுவதால்) தலைவன் அருள் புரிவானோ என்ற ஐயத்தைக் கிளப்ப, படுக்கையில் (ஊராரின் அலர்ப் பேச்சுக்களால்) பேசப்படுபவளும், தாமரையில் வசிக்கும் லக்ஷ்மி போன்றவளுமான இப்பெண் தனிமையில் இருந்து, என் பழ வினையால் இங்ஙனம் வாடுகிறேன் என்று தன்னைத் தானே வெறுக்காமல், பரிசுத்தமான ரேகைகளை உடைய வண்டு சிவந்த தேனை உண்டு துள்ளுகின்ற (உனது) கடப்ப மாலையைத் தர வேண்டும். (இமய) மலை மகளான பார்வதி அளவு இல்லாத கல்விப் போட்டியில் தலை இடம் பெற்ற சகல கலா வல்லவன் நீதான் என்னும்படி விளங்கிய புலவனே, தேன் ஒழுகும் கொன்றையைச் சடையில் சூடிய வள்ளலாகிய சிவபெருமான் அன்று வணங்கி நிற்க, ஐயம் இல்லாதபடி ஒப்பற்ற பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே, வன்மை வாய்ந்த அசுரர்கள் பயப்பட, நற்குணம் படைத்த தேவர்கள் மகிழ்ச்சி அடைய, உனது சாமர்த்தியத்தைக் காட்டிய மயில் வீரனே. வள்ளிக் கொடிகள் படர்கின்ற வள்ளி மலைக்குப் போய், வள்ளி நாயகியை அங்கு மணம் புரிந்த பெருமாளே.
அல் அசல் அடைந்த வில் அடல் அநங்கன் அல்லி மலர் அம்பு தனை ஏவ ... மாலைப் பொழுதினில் வந்து சேர்ந்த, வில்லை ஏந்திய வெற்றி பொருந்திய, மன்மதன் தனது அல்லி மலர்ப் பாணத்தைச் செலுத்த, பிள்ளை மதி அள்ளி எரி சிந்த தென்றல் ஐயம் அது கிண்ட ... பிறைச்சந்திரனும் நெருப்பை அள்ளி வீச, தென்றற் காற்றும் (அங்ஙனம் நெருப்பு வீசுவதால்) தலைவன் அருள் புரிவானோ என்ற ஐயத்தைக் கிளப்ப, அணையூடே சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று ... படுக்கையில் (ஊராரின் அலர்ப் பேச்சுக்களால்) பேசப்படுபவளும், தாமரையில் வசிக்கும் லக்ஷ்மி போன்றவளுமான இப்பெண் தனிமையில் இருந்து, தொல்லை வினை என்று முனியாதே ... என் பழ வினையால் இங்ஙனம் வாடுகிறேன் என்று தன்னைத் தானே வெறுக்காமல், துய்ய வரி வண்டு செய்ய மது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும் ... பரிசுத்தமான ரேகைகளை உடைய வண்டு சிவந்த தேனை உண்டு துள்ளுகின்ற (உனது) கடப்ப மாலையைத் தர வேண்டும். கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே ... (இமய) மலை மகளான பார்வதி அளவு இல்லாத கல்விப் போட்டியில் தலை இடம் பெற்ற சகல கலா வல்லவன் நீதான் என்னும்படி விளங்கிய புலவனே, கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே ... தேன் ஒழுகும் கொன்றையைச் சடையில் சூடிய வள்ளலாகிய சிவபெருமான் அன்று வணங்கி நிற்க, ஐயம் இல்லாதபடி ஒப்பற்ற பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே, வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில் வீரா ... வன்மை வாய்ந்த அசுரர்கள் பயப்பட, நற்குணம் படைத்த தேவர்கள் மகிழ்ச்சி அடைய, உனது சாமர்த்தியத்தைக் காட்டிய மயில் வீரனே. வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே. ... வள்ளிக் கொடிகள் படர்கின்ற வள்ளி மலைக்குப் போய், வள்ளி நாயகியை அங்கு மணம் புரிந்த பெருமாளே.