சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம்சலம் என்பு திண் பொருந்திடு மாயம்
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு
செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி
விரைவின் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன்
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி
நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர்கண்டு அமர் அஞ்ச
மண்டி வந்திடு சூரன் அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட
அன்று உடன்று கொன்றிடும் வேலா
மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற
மந்தி சந்துடன் ஆடும் வரையின் கண் வந்து வண் குற மங்கை
பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே.
தலை என்னும் உறுப்பு, அழகிய கை, கண், காது, வஞ்சகத்துக்கு இடமான மனம், இரத்தம், எலும்பு இவை நன்றாகப் பொருந்தியுள்ள மாயமான இந்த உடல் சில துயரங்களும் இன்பங்களும் பொருந்தி, இறப்பு வந்து சேர்ந்த பின்னர், சிவந்த நெருப்பில் வெந்து உயிர் பிரிதல் உறும்படி, சீக்கிரத்தில் நமன் போரிட வந்து விட்டான் என்று மிக்க துயரமுற்று நிலை குலைந்து அழிவதற்கு முன்பு தீவினை யாவும் தொலைந்து நல்ல வினைகளே சேர, உனது திருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்து அருள் புரிவாயாக. (ஆதிசேஷனாகிய) பாம்பின் மேல் முன்பு அறி துயில் கொண்டு (உயிர்களை) அருள் பாலிக்கும் மேக நிறத்தினனாகிய திருமாலும் தேவர்களும் பார்த்து போருக்கு அஞ்சும்படி, நெருங்கி வந்த சூரனுடைய அகன்ற மார்பைப் பிளந்து, பொருந்திய உலகில் (எல்லா இடங்களிலும் அவன் விழும் ஒலி) பரந்து ஒலிக்க, அன்று கோபித்து (அவனைக்) கொன்ற வேலனே, தாமரை மலர்கள் அழகிய குளங்களில் மலர்ந்து விளங்கிட, வண்டின் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து இசை ஒலிக்க, குரங்குகள் சந்தன மரங்களில் விளையாடும் (வள்ளி) மலைக்கு வந்து, வளப்பமுள்ள குறப்பெண்ணாகிய வள்ளியின் பாதத் தாமரை வரக் கண்டு நின்று, (அவளைக்) கும்பிட்ட பெருமாளே.
சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம்சலம் என்பு திண் பொருந்திடு மாயம் ... தலை என்னும் உறுப்பு, அழகிய கை, கண், காது, வஞ்சகத்துக்கு இடமான மனம், இரத்தம், எலும்பு இவை நன்றாகப் பொருந்தியுள்ள மாயமான இந்த உடல் சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு ... சில துயரங்களும் இன்பங்களும் பொருந்தி, இறப்பு வந்து சேர்ந்த பின்னர், செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி ... சிவந்த நெருப்பில் வெந்து உயிர் பிரிதல் உறும்படி, விரைவின் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன் ... சீக்கிரத்தில் நமன் போரிட வந்து விட்டான் என்று மிக்க துயரமுற்று நிலை குலைந்து அழிவதற்கு முன்பு வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி ... தீவினை யாவும் தொலைந்து நல்ல வினைகளே சேர, நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே ... உனது திருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்து அருள் புரிவாயாக. அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர்கண்டு அமர் அஞ்ச ... (ஆதிசேஷனாகிய) பாம்பின் மேல் முன்பு அறி துயில் கொண்டு (உயிர்களை) அருள் பாலிக்கும் மேக நிறத்தினனாகிய திருமாலும் தேவர்களும் பார்த்து போருக்கு அஞ்சும்படி, மண்டி வந்திடு சூரன் அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட ... நெருங்கி வந்த சூரனுடைய அகன்ற மார்பைப் பிளந்து, பொருந்திய உலகில் (எல்லா இடங்களிலும் அவன் விழும் ஒலி) பரந்து ஒலிக்க, அன்று உடன்று கொன்றிடும் வேலா ... அன்று கோபித்து (அவனைக்) கொன்ற வேலனே, மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற ... தாமரை மலர்கள் அழகிய குளங்களில் மலர்ந்து விளங்கிட, வண்டின் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து இசை ஒலிக்க, மந்தி சந்துடன் ஆடும் வரையின் கண் வந்து வண் குற மங்கை ... குரங்குகள் சந்தன மரங்களில் விளையாடும் (வள்ளி) மலைக்கு வந்து, வளப்பமுள்ள குறப்பெண்ணாகிய வள்ளியின் பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே. ... பாதத் தாமரை வரக் கண்டு நின்று, (அவளைக்) கும்பிட்ட பெருமாளே.