ஏழு உலகங்களையும் தன் வயிற்றிலே அடக்கிய திருமால், பிரமன், ஜோதிமயமான ருத்திரன், ஆகிய மூவருக்கும் மற்ற தேவர்களுக்கும் தலைவியான ஆதி பராசக்தியின் திருமார்பிலிருந்து சுரந்த அமிர்தமாம் ஞானப்பால் மணக்கும் கனி போன்ற வாயை உடையவனே, புனுகு வாசனை வீசும் சீர்காழிப் பகுதியில் கவுணியர் குடியில் ஞானசம்பந்தனாக அவதரித்து தமிழ்ப்பாசுர மகிமையாலே ஏடு வைகை ஆற்றின் நீரில் எதிர் ஏற்றத்தில் செல்லவும், சமணர்கள் கழுவில் ஏறவும், தமிழினால் வாதப் போர் புரிந்த கவிவீரன் ஞானசம்பந்தனே, குருநாதனே, கோடரியையும், மானையும், பிரம கபாலத்தையும், உடுக்கையையும், திரிசூலத்தையும் ஏந்திய கரங்கள் கொண்ட அற்புதமூர்த்தி சிவபிரான் அருளிய திருக்குமாரனே, தாமரை மலரில் உள்ள பிரமனை பெருஞ்சிறையில் அடைத்து, அவனது படைப்புத் தொழிலைச் செம்மையாகச் செய்தருளிய முருகக் கடவுளே, கழுகுகள் தொழுகின்ற வேதமலையின் உச்சியில் விளங்கும், ஒளிவீசும் வாசலில் நிறைந்த தேவர்கள் கடலின் அலை ஓசை போன்று ஓம் என்று வேதமந்திரங்களையும் தமிழ் மறைகளையும் ஓதுகின்ற, கதலிவனம் (என்ற திருக்கழுக்குன்றத்தில்) வாழுகின்ற பெருமாளே.