அரிவையர் நெஞ்சு உருகாப் புணர் தரு விரகங்களினால் பெரிது அவசம் விளைந்து விடாய்த்து
அடர் முலை மேல் வீழ்ந்து அகிலொடு சந்தன சேற்றினில் முழுகி எழுந்து எதிர் கூப்பு கை அடியில் நகம் பிறை போல் பட விளையாடி
பரிமளம் விஞ்சிய பூக்குழல் சரிய மருங்கு உடை போய்ச் சில பறவைகளின் குரலாய்க் கயல் விழி சோரப் பனி முகமும் குறு வேர்ப்பு எழ
இதழ் அமுது உண்டு இரவாய்ப் பகல் பகடியிடும்படி தூர்த்தனை விடலாமோ
சரியை உடன் க்ரியை போற்றிய பரம பதம் பெறுவார்க்கு அருள் தரு க(ண்)ணன் ரங்க புரம் உச்சிதன் மருகோனே
சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை ஆட்கொளல் சகம் அறியும்படி காட்டிய குருநாதா
திரி புவனம் தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள் தெருவில் விளங்குச் சிராப் ப(ள்)ளி மலைமீதே தெரிய இருந்த பராக்ரம
உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு திலதம் எனும் படி தோற்றிய பெருமாளே.
(விலை) மாதர்கள் மீது மனம் உருகி கலவி இச்சை தருகின்ற விரகதாபத்தால் மிகவும் தன்வசம் அழிதல் ஏற்பட்டு, காம தாகம் அதிகரித்து, நெருங்கிய மார்பகங்களின் மேல் விழுந்து, அகில், சந்தனம் இவற்றின் கலவைச் சேற்றில் முழுகியும் எழுந்தும், எதிரே கூப்பிய கையடியில் உள்ள நகம் பிறைபோல (உடலில்) படும்படி பதித்து விளையாடி, நறு மணம் மிக்க பூ நிறைந்த கூந்தல் சரிந்து விழ, இடையில் இருந்த சேலை விலக, சில பறவைகளின் ஒலிகள் எழ, கயல் மீன் போன்ற கண்கள் சோர்வு அடைய, குளிர்ந்திருந்த முகத்தில சிறு வியர்வை எழ, வாயிதழ் அமுதை உண்டு, பகலிலும் இரவிலும் கலவிக் கூத்தாடும்படி செய்த இந்தக் கொடியவனை கைவிடலாமோ? சரியை, கிரியை ஆகிய மார்க்கங்களை கைப்பிடிக்கும் மேலான பதத்தைப் பெற விரும்புவோர்க்கு அருளைத் தருகின்ற கண்ணன் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட மேன்மையாளனாகிய (ரங்கநாதனாம்) திருமாலின் மருகனே, கிரெளஞ்ச மலை பொடிபடச் செலுத்திய கை வேலை விளங்க ஏந்தி மயில் மீது வந்து என்னை ஆட்கொண்ட திருவருளை உலகம் முழுவதும் அறியும் வண்ணம் காட்டிய குரு நாதனே, மூன்று உலகங்களும் வணங்கும் பல்லவ அரசனால் கட்டப்பட்ட மண்டபங்களும் கோபுரங்களும் தெருவிலே தோற்றம் தரும் திரிசிராப்பள்ளி மலையின் மேல் விளக்கமுற வீற்றிருந்த வீரனே, அழகிய உருவுடன் திரிசிராமலைக் குன்று உடையவராகிய தாயுமானவரான சிவபெருமானின் நெற்றிப் பொட்டுப் போலச் சிறந்து விளங்கிய பெருமாளே.
அரிவையர் நெஞ்சு உருகாப் புணர் தரு விரகங்களினால் பெரிது அவசம் விளைந்து விடாய்த்து ... (விலை) மாதர்கள் மீது மனம் உருகி கலவி இச்சை தருகின்ற விரகதாபத்தால் மிகவும் தன்வசம் அழிதல் ஏற்பட்டு, காம தாகம் அதிகரித்து, அடர் முலை மேல் வீழ்ந்து அகிலொடு சந்தன சேற்றினில் முழுகி எழுந்து எதிர் கூப்பு கை அடியில் நகம் பிறை போல் பட விளையாடி ... நெருங்கிய மார்பகங்களின் மேல் விழுந்து, அகில், சந்தனம் இவற்றின் கலவைச் சேற்றில் முழுகியும் எழுந்தும், எதிரே கூப்பிய கையடியில் உள்ள நகம் பிறைபோல (உடலில்) படும்படி பதித்து விளையாடி, பரிமளம் விஞ்சிய பூக்குழல் சரிய மருங்கு உடை போய்ச் சில பறவைகளின் குரலாய்க் கயல் விழி சோரப் பனி முகமும் குறு வேர்ப்பு எழ ... நறு மணம் மிக்க பூ நிறைந்த கூந்தல் சரிந்து விழ, இடையில் இருந்த சேலை விலக, சில பறவைகளின் ஒலிகள் எழ, கயல் மீன் போன்ற கண்கள் சோர்வு அடைய, குளிர்ந்திருந்த முகத்தில சிறு வியர்வை எழ, இதழ் அமுது உண்டு இரவாய்ப் பகல் பகடியிடும்படி தூர்த்தனை விடலாமோ ... வாயிதழ் அமுதை உண்டு, பகலிலும் இரவிலும் கலவிக் கூத்தாடும்படி செய்த இந்தக் கொடியவனை கைவிடலாமோ? சரியை உடன் க்ரியை போற்றிய பரம பதம் பெறுவார்க்கு அருள் தரு க(ண்)ணன் ரங்க புரம் உச்சிதன் மருகோனே ... சரியை, கிரியை ஆகிய மார்க்கங்களை கைப்பிடிக்கும் மேலான பதத்தைப் பெற விரும்புவோர்க்கு அருளைத் தருகின்ற கண்ணன் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட மேன்மையாளனாகிய (ரங்கநாதனாம்) திருமாலின் மருகனே, சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை ஆட்கொளல் சகம் அறியும்படி காட்டிய குருநாதா ... கிரெளஞ்ச மலை பொடிபடச் செலுத்திய கை வேலை விளங்க ஏந்தி மயில் மீது வந்து என்னை ஆட்கொண்ட திருவருளை உலகம் முழுவதும் அறியும் வண்ணம் காட்டிய குரு நாதனே, திரி புவனம் தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள் தெருவில் விளங்குச் சிராப் ப(ள்)ளி மலைமீதே தெரிய இருந்த பராக்ரம ... மூன்று உலகங்களும் வணங்கும் பல்லவ அரசனால் கட்டப்பட்ட மண்டபங்களும் கோபுரங்களும் தெருவிலே தோற்றம் தரும் திரிசிராப்பள்ளி மலையின் மேல் விளக்கமுற வீற்றிருந்த வீரனே, உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு திலதம் எனும் படி தோற்றிய பெருமாளே. ... அழகிய உருவுடன் திரிசிராமலைக் குன்று உடையவராகிய தாயுமானவரான சிவபெருமானின் நெற்றிப் பொட்டுப் போலச் சிறந்து விளங்கிய பெருமாளே.