அழுது அழுது ஆசார நேசமும் உடையவர் போலே பொய் சூழ்வுறும் அசடிகள்
மால் ஆன காமுகர் பொன் கொடா நாள் அவருடன் வாய் பேசிடாமையும் முனிதலும் மாறாத தோஷிகள்
அறுதி இல் காசு ஆசை வேசைகள்
நஞ்சு தோயும் விழிகளினால் மாட வீதியில் முலைகளை ஓராமல் ஆரோடும் விலை இடு மா மாய ரூபிகள்
பண்பிலாத விரகிகள் வேதாளமோ என முறையிடு கோமாள மூளிகள்
வினை செயலாலே என் ஆவியும் உயங்கலாமோ
வழியினில் வாழ் ஞான போதக பரம சுவாமீ வரோதய
வயலியில் வேலாயுத வரை எங்கும் ஆனாய்
மதுரையின் மீது ஆலவாயினில் எதிர் அமணர் ஓரோர் எ(ண்)ணாயிரர் மறி கழு மீது ஏற நீறு பரந்து உலாவ
செழியனும் ஆளாக வாது செய் கவி மத சீகாழி மாமுனி
சிவசிவ மா தேவ கா என வந்து பாடும் திரு உடையாய்
தீது இலாதவர் உமை ஒரு பாலான மேனியர் சிர கிரி வாழ்வான தேவர்கள் தம்பிரானே.
மேலும் மேலும் அழுது ஒழுக்கம் வாய்ந்த நட்பு உள்ளவர்கள் போல் பொய் வழியிலேயே சூழ்ச்சி செய்யும் மூடப் பெண்கள், தம் மீது ஆசைப்படும் காமாந்தகர்கள் தமக்குப் பொருள் கொடுக்காத நாளில் அவர்களோடு வாய் பேசாதிருத்தலும் கோபித்தலும் நீங்காத குற்றம் உடையவர்கள், எல்லை இல்லாத பொருள் ஆசை கொண்ட பொது மகளிர், விஷம் தோய்ந்துள்ள கண்களால் மாட வீதிகளில் தம் மார்பகங்களை ஆராயாமல் எவர்க்கும் விலைக்கு விற்கும் மகாமாய உருவினர், நற் குணம் இல்லாத காமிகள், பேய் பிசாசு என்று சொல்லும்படி கூச்சலிட்டுக் கூத்தடிப்பவர், விகாரத்தினர், (இத்தகையோரின்) சூழ்ச்சிச் செயல்களால் என் உயிர் வருந்தலாமோ? நன்வழியில் வாழ்வதற்கான ஞானோபதேசம் செய்யவல்ல பரம சுவாமியே, தேவர்கள் பெற்ற வரத்தால் தோன்றியவனே, வயலூரில் அமர்ந்த வேலாயுதனே, மலைத்தலம் எங்கும் மகிழ்வுடன் வீற்றிருப்பவனே, மதுரையாகிய திருவாலவாய்த் தலத்திலே எதிர்த்து வந்த சமணர் சுமார் எண்ணாயிரம் பேர் அழிபட்டு கழுவின் மீது ஏற, திருநீறு பரந்து விளங்க, பாண்டிய அரசனும் அடிமைப்பட, வாது செய்து கவி மதத்தைப் பொழிந்த சீகாழிப் பெரிய முனிவரும், சிவசிவ மகாதேவா, காத்தருள் என்று (சிவபெருமானிடம்) சென்று பாடின பெருஞ் செல்வம் பெற்றவருமான ஞானசம்பந்தரே, தீது இல்லாதவரும், உமையை ஒரு பாகத்தில் வைத்த திருமேனியரும் ஆன சிவபெருமானது திரிசிர மலையில் வாழ்வு கொண்டிருப்பவனே, தேவர்களின் தம்பிரானே.
அழுது அழுது ஆசார நேசமும் உடையவர் போலே பொய் சூழ்வுறும் அசடிகள் ... மேலும் மேலும் அழுது ஒழுக்கம் வாய்ந்த நட்பு உள்ளவர்கள் போல் பொய் வழியிலேயே சூழ்ச்சி செய்யும் மூடப் பெண்கள், மால் ஆன காமுகர் பொன் கொடா நாள் அவருடன் வாய் பேசிடாமையும் முனிதலும் மாறாத தோஷிகள் ... தம் மீது ஆசைப்படும் காமாந்தகர்கள் தமக்குப் பொருள் கொடுக்காத நாளில் அவர்களோடு வாய் பேசாதிருத்தலும் கோபித்தலும் நீங்காத குற்றம் உடையவர்கள், அறுதி இல் காசு ஆசை வேசைகள் ... எல்லை இல்லாத பொருள் ஆசை கொண்ட பொது மகளிர், நஞ்சு தோயும் விழிகளினால் மாட வீதியில் முலைகளை ஓராமல் ஆரோடும் விலை இடு மா மாய ரூபிகள் ... விஷம் தோய்ந்துள்ள கண்களால் மாட வீதிகளில் தம் மார்பகங்களை ஆராயாமல் எவர்க்கும் விலைக்கு விற்கும் மகாமாய உருவினர், பண்பிலாத விரகிகள் வேதாளமோ என முறையிடு கோமாள மூளிகள் ... நற் குணம் இல்லாத காமிகள், பேய் பிசாசு என்று சொல்லும்படி கூச்சலிட்டுக் கூத்தடிப்பவர், விகாரத்தினர், வினை செயலாலே என் ஆவியும் உயங்கலாமோ ... (இத்தகையோரின்) சூழ்ச்சிச் செயல்களால் என் உயிர் வருந்தலாமோ? வழியினில் வாழ் ஞான போதக பரம சுவாமீ வரோதய ... நன்வழியில் வாழ்வதற்கான ஞானோபதேசம் செய்யவல்ல பரம சுவாமியே, தேவர்கள் பெற்ற வரத்தால் தோன்றியவனே, வயலியில் வேலாயுத வரை எங்கும் ஆனாய் ... வயலூரில் அமர்ந்த வேலாயுதனே, மலைத்தலம் எங்கும் மகிழ்வுடன் வீற்றிருப்பவனே, மதுரையின் மீது ஆலவாயினில் எதிர் அமணர் ஓரோர் எ(ண்)ணாயிரர் மறி கழு மீது ஏற நீறு பரந்து உலாவ ... மதுரையாகிய திருவாலவாய்த் தலத்திலே எதிர்த்து வந்த சமணர் சுமார் எண்ணாயிரம் பேர் அழிபட்டு கழுவின் மீது ஏற, திருநீறு பரந்து விளங்க, செழியனும் ஆளாக வாது செய் கவி மத சீகாழி மாமுனி ... பாண்டிய அரசனும் அடிமைப்பட, வாது செய்து கவி மதத்தைப் பொழிந்த சீகாழிப் பெரிய முனிவரும், சிவசிவ மா தேவ கா என வந்து பாடும் திரு உடையாய் ... சிவசிவ மகாதேவா, காத்தருள் என்று (சிவபெருமானிடம்) சென்று பாடின பெருஞ் செல்வம் பெற்றவருமான ஞானசம்பந்தரே, தீது இலாதவர் உமை ஒரு பாலான மேனியர் சிர கிரி வாழ்வான தேவர்கள் தம்பிரானே. ... தீது இல்லாதவரும், உமையை ஒரு பாகத்தில் வைத்த திருமேனியரும் ஆன சிவபெருமானது திரிசிர மலையில் வாழ்வு கொண்டிருப்பவனே, தேவர்களின் தம்பிரானே.