இளையவர் நெஞ்சத் தளையம் எனும் சிற்றிடை கொடு வஞ்சிக் கொடி போல்வார் இணை அடி கும்பிட்டு
அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரக் களப சுகந்தப் புளகித இன்பக் கன தன கும்பத்து இடை மூழ்கும் கலவியை நிந்தித்து
இலகிய நின் பொன் கழல் தொழும் அன்பைத் தருவாயே
தளர்வு அறும் அன்பர்க்கு உளம் எனும் மன்றில் சது மறை சந்தத் தொடு பாட
தரிகிட தந்தத் திரிகிட திந்தித் தகுர்தி எனும் கொட்டுடன் ஆடித் தெளிவுற வந்துற்று ஒளிர் சிவன் அன்பில் சிறுவ அலங்கல் திரு மார்பா
செழு மறை அம் சொல் பரிபுர சண்ட திரிசிர குன்ற பெருமாளே.
வாலிபர்களுடைய மனதுக்கு விலங்கு என்று சொல்லத் தக்க சிற்றிடையைக் கொண்ட வஞ்சிக் கொடியைப் போன்ற பொது மகளிருடைய பாதங்களை வணங்கி, அழகிய பெண்குறியைக் கிளர்ச்சியுறச் செய்து, வாய் இதழ் அமுதைப் பருகி அனுபவித்து, அணியான முத்து மாலையும் கலவைச் சாந்தின் நறு மணமும் புளகிதம் கொண்ட இன்பம் தருவதுமான கனத்த மார்பகக் குடத்தின் மத்தியில் முழுகும் புணர்ச்சி செய்வதை வெறுத்துத் தள்ளி, விளங்குகின்ற உனது அழகிய திருவடியை வணங்கும் அன்பைத் தந்தருளுக. சோர்வு இல்லாத அடியார்களுடைய மனம் என்னும் நடன சாலையில் நான்கு வேதங்களும் சந்தத்துடன் முறையாகப் பாட, தரிகிட தந்தத் திரிகிட திந்தித் தகுர்தி என்னும் கொட்டு முழக்கத்துடன் நடனம் செய்து, தெளிவு பெறும் வண்ணம் வந்து இருந்து விளங்கும் சிவபெருமானுடைய அன்புக்கு உரிய குழந்தையே, மாலை அணிந்த அழகிய மார்பனே, செழுமையான மறைகளை அழகாகச் ஒலிக்கின்ற சிலம்பை அணிந்தவனே, வலிமை வாய்ந்த திரிசிராப்பள்ளி மலையில் உறையும் பெருமாளே.
இளையவர் நெஞ்சத் தளையம் எனும் சிற்றிடை கொடு வஞ்சிக் கொடி போல்வார் இணை அடி கும்பிட்டு ... வாலிபர்களுடைய மனதுக்கு விலங்கு என்று சொல்லத் தக்க சிற்றிடையைக் கொண்ட வஞ்சிக் கொடியைப் போன்ற பொது மகளிருடைய பாதங்களை வணங்கி, அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரக் களப சுகந்தப் புளகித இன்பக் கன தன கும்பத்து இடை மூழ்கும் கலவியை நிந்தித்து ... அழகிய பெண்குறியைக் கிளர்ச்சியுறச் செய்து, வாய் இதழ் அமுதைப் பருகி அனுபவித்து, அணியான முத்து மாலையும் கலவைச் சாந்தின் நறு மணமும் புளகிதம் கொண்ட இன்பம் தருவதுமான கனத்த மார்பகக் குடத்தின் மத்தியில் முழுகும் புணர்ச்சி செய்வதை வெறுத்துத் தள்ளி, இலகிய நின் பொன் கழல் தொழும் அன்பைத் தருவாயே ... விளங்குகின்ற உனது அழகிய திருவடியை வணங்கும் அன்பைத் தந்தருளுக. தளர்வு அறும் அன்பர்க்கு உளம் எனும் மன்றில் சது மறை சந்தத் தொடு பாட ... சோர்வு இல்லாத அடியார்களுடைய மனம் என்னும் நடன சாலையில் நான்கு வேதங்களும் சந்தத்துடன் முறையாகப் பாட, தரிகிட தந்தத் திரிகிட திந்தித் தகுர்தி எனும் கொட்டுடன் ஆடித் தெளிவுற வந்துற்று ஒளிர் சிவன் அன்பில் சிறுவ அலங்கல் திரு மார்பா ... தரிகிட தந்தத் திரிகிட திந்தித் தகுர்தி என்னும் கொட்டு முழக்கத்துடன் நடனம் செய்து, தெளிவு பெறும் வண்ணம் வந்து இருந்து விளங்கும் சிவபெருமானுடைய அன்புக்கு உரிய குழந்தையே, மாலை அணிந்த அழகிய மார்பனே, செழு மறை அம் சொல் பரிபுர சண்ட திரிசிர குன்ற பெருமாளே. ... செழுமையான மறைகளை அழகாகச் ஒலிக்கின்ற சிலம்பை அணிந்தவனே, வலிமை வாய்ந்த திரிசிராப்பள்ளி மலையில் உறையும் பெருமாளே.