குமுத வாய்க் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான குழைகள் தாக்கிய விழிகளால்
களி கூரா வீறாது ஈரா மாலாய் அவரோடே உமது தோள்களில் எமது வேட்கையை ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் எனவே நின்று
உடை தொடாப் பணம் இடை பொறாத் தனம் ஊடே வீழ்வேன் ஈடேறாதே உழல்வேனோ
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதாவே மா ஞாதாவே தோகையில் ஏறி
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே
திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை பாலா
திரிசிராப்ப(ள்)ளி மலையின் மேல் திகழ் தேவே கோவே வேளே வானோர் பெருமாளே.
குமுத மலர் போன்ற வாயினின்றும், பழம் போலவும் அமுதம் போலவும் (இனிமை தரும்) பேச்சுக்களை உடையவர்கள். அம்பு, வேல், சேல் மீன் இவற்றைப் போல அழகான, குண்டலங்கள் தாக்குகின்ற, கண்களால், நான் மகிழ்ச்சி மிகுந்து பெருமையுடன், முடிவு இல்லாத மோகத்துடன் அந்தப் பொது மகளிரோடு உம்முடைய தோள்களில் எமக்கு உள்ள ஆசையை நீர் அறிய மாட்டீரோ, என்னைப் பார்க்க மாட்டீரோ, எம்மிடம் வரமாட்டீரோ, எம்மோடு சேர மாட்டீரோ என்றெல்லாம் கூறி நின்று, (அவர்களுடைய) ஆடையைத் தொட்டும், அவர்களுடைய பெண்குறி இடத்தும், இடை தாங்க முடியாத கனமுடைய மார்பகங்களின் இடத்தும் விழுகின்ற நான், ஈடேறும் வழியைக் காணாமல் இவ்வாறு திரிவேனோ? ஒலி செய்யும் (துதிச்) சொற்களுடனே தேவர்கள் வாழ்த்துகின்ற பெரிய வள்ளலே, சிறந்த ஞானவானே, தோகை உடைய மயில் வாகனனே, மலை நாட்டுக்குத் தலைவனே, வயலூர் நாட்டுக்குத் தலைவனே, இறப்பும் மூப்பும் இல்லாதவனே, அருள நீ வருக இளைய தேவனே, இருள் போல் கரிய அசுரர்களுடன் போர் செய்ய வல்ல வேலாயுதம் ஏந்திய கையனே, தீரனே, வீரனே, நேர்மை உள்ளவனே, தோல்வி இல்லாதவனே, உமா தேவியின் குழந்தையே, திரிசிராப்பள்ளி மலையின் மேல் விளங்கும் தேவனே, அரசே, முருகவேளே, தேவர்கள் பெருமாளே.
குமுத வாய்க் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான குழைகள் தாக்கிய விழிகளால் ... குமுத மலர் போன்ற வாயினின்றும், பழம் போலவும் அமுதம் போலவும் (இனிமை தரும்) பேச்சுக்களை உடையவர்கள். அம்பு, வேல், சேல் மீன் இவற்றைப் போல அழகான, குண்டலங்கள் தாக்குகின்ற, கண்களால், களி கூரா வீறாது ஈரா மாலாய் அவரோடே உமது தோள்களில் எமது வேட்கையை ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் எனவே நின்று ... நான் மகிழ்ச்சி மிகுந்து பெருமையுடன், முடிவு இல்லாத மோகத்துடன் அந்தப் பொது மகளிரோடு உம்முடைய தோள்களில் எமக்கு உள்ள ஆசையை நீர் அறிய மாட்டீரோ, என்னைப் பார்க்க மாட்டீரோ, எம்மிடம் வரமாட்டீரோ, எம்மோடு சேர மாட்டீரோ என்றெல்லாம் கூறி நின்று, உடை தொடாப் பணம் இடை பொறாத் தனம் ஊடே வீழ்வேன் ஈடேறாதே உழல்வேனோ ... (அவர்களுடைய) ஆடையைத் தொட்டும், அவர்களுடைய பெண்குறி இடத்தும், இடை தாங்க முடியாத கனமுடைய மார்பகங்களின் இடத்தும் விழுகின்ற நான், ஈடேறும் வழியைக் காணாமல் இவ்வாறு திரிவேனோ? தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதாவே மா ஞாதாவே தோகையில் ஏறி ... ஒலி செய்யும் (துதிச்) சொற்களுடனே தேவர்கள் வாழ்த்துகின்ற பெரிய வள்ளலே, சிறந்த ஞானவானே, தோகை உடைய மயில் வாகனனே, சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே ... மலை நாட்டுக்குத் தலைவனே, வயலூர் நாட்டுக்குத் தலைவனே, இறப்பும் மூப்பும் இல்லாதவனே, அருள நீ வருக இளைய தேவனே, திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை பாலா ... இருள் போல் கரிய அசுரர்களுடன் போர் செய்ய வல்ல வேலாயுதம் ஏந்திய கையனே, தீரனே, வீரனே, நேர்மை உள்ளவனே, தோல்வி இல்லாதவனே, உமா தேவியின் குழந்தையே, திரிசிராப்ப(ள்)ளி மலையின் மேல் திகழ் தேவே கோவே வேளே வானோர் பெருமாளே. ... திரிசிராப்பள்ளி மலையின் மேல் விளங்கும் தேவனே, அரசே, முருகவேளே, தேவர்கள் பெருமாளே.