பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுககில் சந்து ...... பனிநீர்தோய் புளகித கொங்கை யிளகவ டங்கள் புரளம ருங்கி ...... லுடைசோர இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து இணைதரு பங்க ...... அநுராகத் திரிதலொ ழிந்து மனதுக சிந்து னிணையடி யென்று ...... புகழ்வேனோ மருள்கொடு சென்று பரிவுட னன்று மலையில்வி ளைந்த ...... தினைகாவல் மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த ...... முருகோனே தெருளுறு மன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் ...... முதனாளில் தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் ...... பெருமாளே.
பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள்
புழுகு அகில் சந்து பனி நீர் தோய்
புளகித கொங்கை இளக வடங்கள்
புரள மருங்கில் உடை சோர
இருள் வளர் கொண்டை சரிய இசைந்து
இணை தரு பங்க அநுராகத்
திரிதல் ஒழிந்து மனது கசிந்து
உன் இணை அடி என்று புகழ்வேனோ
மருள் கொடு சென்று பரிவுடன் அன்று
மலையில் விளைந்த தினை காவல்
மயிலை மணந்த அயிலவ எங்கள்
வயலியில் வந்த முருகோனே
தெருள் உறும் அன்பர் பரவ விளங்கு
திரி சிர குன்றில் முதல் நாளில்
தெரிய இருந்த பெரியவர் தந்த
சிறியவ அண்டர் பெருமாளே.
பொருளை அபகரிப்பதையே மனத்தில் கொண்ட (விலை) மாதர்களுடைய, புனுகு, அகில், சந்தனம், பன்னீர் ஆகிய வாசனைப் பண்டங்கள் தோய்ந்த புளகாங்கிதம் கொண்ட மார்பகங்கள் குழைந்து அசைய, முத்து மாலைகள் புரள, இடுப்பில் ஆடை நெகிழ, இருள் நிறைந்த (கரிய) கூந்தல் அவிழ்ந்து புரள, மனம் ஒத்து இணைகின்ற குற்றத்துக்கு இடமான காமப் பற்றில் அகப்படும் கெடுதல் நீங்கி, என் மனம் நெகிழ்ந்து உருகி உனது திருவடிகளை என்று நான் புகழ்வேனோ? மோகத்துடன் சென்று அன்புடன் அன்று, (வள்ளி) மலைக் காட்டில் உள்ள தினைப் புனத்தைக் காவல் செய்த மயில் போன்ற வள்ளியை மணம் புரிந்த வேலவனே, எங்கள் வயலூரில் எழுந்தருளியுள்ள முருகனே, தெளிந்த அறிவை உடைய அன்பர்கள் போற்ற சிறப்புற்று விளங்கும் திரிசிரா மலையில், ஆதி நாள் முதலாக விளங்க வீற்றிருக்கும் சிவபெருமான் (தாயுமானவர்) அருளிய குழந்தையே, தேவர்களின் பெருமாளே.
பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுகு அகில் சந்து பனி நீர் தோய் ... பொருளை அபகரிப்பதையே மனத்தில் கொண்ட (விலை) மாதர்களுடைய, புனுகு, அகில், சந்தனம், பன்னீர் ஆகிய வாசனைப் பண்டங்கள் தோய்ந்த புளகித கொங்கை இளக வடங்கள் புரள மருங்கில் உடை சோர ... புளகாங்கிதம் கொண்ட மார்பகங்கள் குழைந்து அசைய, முத்து மாலைகள் புரள, இடுப்பில் ஆடை நெகிழ, இருள் வளர் கொண்டை சரிய இசைந்து இணை தரு பங்க அநுராகத் திரிதல் ஒழிந்து ... இருள் நிறைந்த (கரிய) கூந்தல் அவிழ்ந்து புரள, மனம் ஒத்து இணைகின்ற குற்றத்துக்கு இடமான காமப் பற்றில் அகப்படும் கெடுதல் நீங்கி, மனது கசிந்து உன் இணை அடி என்று புகழ்வேனோ ... என் மனம் நெகிழ்ந்து உருகி உனது திருவடிகளை என்று நான் புகழ்வேனோ? மருள் கொடு சென்று பரிவுடன் அன்று மலையில் விளைந்த தினை காவல் மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த முருகோனே ... மோகத்துடன் சென்று அன்புடன் அன்று, (வள்ளி) மலைக் காட்டில் உள்ள தினைப் புனத்தைக் காவல் செய்த மயில் போன்ற வள்ளியை மணம் புரிந்த வேலவனே, எங்கள் வயலூரில் எழுந்தருளியுள்ள முருகனே, தெருள் உறும் அன்பர் பரவ விளங்கு திரி சிர குன்றில் முதல் நாளில் ... தெளிந்த அறிவை உடைய அன்பர்கள் போற்ற சிறப்புற்று விளங்கும் திரிசிரா மலையில், ஆதி நாள் முதலாக தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமாளே. ... விளங்க வீற்றிருக்கும் சிவபெருமான் (தாயுமானவர்) அருளிய குழந்தையே, தேவர்களின் பெருமாளே.