நாணல் வனம் சூழ்ந்த பொய்கையில் அவதரித்தவனே, போற்றி போற்றி, கருணை எல்லை கடந்த பொருளே, போற்றி போற்றி, நூறு இதழ்கள் கொண்ட தாமரை போன்ற திருவடி உடையவனே, போற்றி போற்றி, மிக்க பேரழகு கொண்டவனே, இளமையும் தைரியமும் உடையவனே, போற்றி போற்றி, தலைமைச் சேனாதிபதியாகிய போர் வீரனே, போற்றி போற்றி, போருக்குரிய சேனைகள் உள்ள ஊராகிய திருப்போரூரானே, போற்றி போற்றி, உலகங்கள் அனைத்திற்கும் இறைவனே, உயர்ந்த ஞான வடிவு கொண்டவனே, போற்றி போற்றி, தேவர்கள் தலைவனாம் இந்திரனுக்கும் அரசனே, போற்றி போற்றி, நறுமணம் வீசும் கடம்பமாலையை அணிந்தவனே, போற்றி போற்றி, உமை, காளி, பகவதி எனப்படும் பார்வதி மைந்தா, போற்றி போற்றி, இம்மைக்கும் மறுமைக்கும் மூலகாரணமாக இருப்பவனே, போற்றி போற்றி, ஆண்மையும் குணநலன்களும் உடையவனே, போற்றி போற்றி, உன் திருவருளைத் தந்தருள்வாயாக. சூரிய மண்டலமும், ஆகாயமண்டலமும், பூமியும் தூசுகள் கலந்து படிந்து மறையுமாறும், தேவர்கள் அனைவரும் உய்ந்து உயர் பதவி அடையுமாறும், ஏழு சமுத்திரங்களும் துன்புற்று இது முறையோ என்று கதறவும், பெரிய மேருமலை இடிபட்டு பொடிபடவும், இரவிலே அலையும் அசுரர்கள் தங்கள் வலிமை கெடவும், வெகு வேகமாக நீண்ட வேலாயுதத்தை விடுத்தருளியவனே, மரகதப் பச்சை நிறம்கொண்ட ஆயர்குலக் கொழுந்தாகிய திருமாலும், பொன்னிறம் கொண்ட பிரம்ம தேவனும், நெருப்பு நிறத்தை உடைய ருத்திர மூர்த்தியும் திருவடியைப் போற்ற மயில் வாகனத்தில் எழுந்தருளி வரும் இறைவனே, விநாயக மலை (பிள்ளையார்பட்டி) யில் வாழும் வேலாயுதக் கடவுளே, மலைகளில் வசிக்கும் காட்டு வேடர்களுக்கு ஆதாரமான பெருமாளே.