கொடிய மறலியும் அவனது கடகமு மடிய
ஒருதினம் இருபதம் வழிபடு
குதலை அடியவன
நினதருள் கொடு
பொரும் அமர்காண
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமும்
அறுமுகமும் வெகு நயனமும்
ரவியுமிழ் கொடியும்
அகிலமும் வெளிபட
இருதிசை யிருநாலும்
படியு நெடியன எழுபுண ரியும்
முது திகிரி
திகிரியும் வருகென வருதகு
பவுரி வருமொரு மரகத துரகத மிசையேறி
பழய அடியவருடன்
இமையவர்கணம் இருபுடையும்
மிகு தமிழ்கொடு மறைகொடு பரவ
வரும் அதில் அருணையில்
ஒருவிசை வரவேணும்
சடிலதர விடதர
பணிதர தரபரசுதர
சசிதர சுசிதர
இத தமருக மிருக தர
வனிதர சிரதர
பாரத் தரணிதர
தநுதர
வெகு முககுல தடினி தர
சிவ சுத
குண தர
பணி சயில
விதரண
தருபுர சசிதரு
மயில்வாழ்வே
நெடிய வுடலுரு இருளெழ
எயிறு நிலவெழ
சுழல்விழி தழலெழ
எழுகிரி நெரிய
அதிர்குரல் புகையெழ இடியெழ
நெடுவானும் நிலனும் வெருவர
வருநிசிசரர்தள
நிகில சகலமு மடிய
ஓர் படைதொடு நிருப
குருபர
சுரபதி பரவிய பெருமாளே.
கொடியவனான யமனும், அவனது யமப்படையும் இறக்க, ஒருநாள் உன் இரண்டு திருவடிகளையும் வழிபட்டு நிற்கும் மழலைச் சிறுவனாகிய நான் உன் திருவருளையே துணையாகக்கொண்டு யமனோடு சண்டை செய்யும் போரினைக் காண்பதற்கு, குறமகள் வள்ளி கட்டித் தழுவும் பன்னிரு புயமலைகளும், ஆறு திருமுகங்களும், பலவான (பதினெட்டு) கண்களும், சூரியனைக் கூவி வெளிப்படுத்தும் சேவல் இருக்கும் கொடியும், இவையாவும் பிரத்யக்ஷமாக, மேல் கீழ் என்ற இரு திசைகளோடு எட்டுத் திசைகளையும், பூமியையும், நீண்ட ஏழு கடல்களையும், பழமையான சக்ரவாளகிரியையும், வலம் செய்து வருக என்று ஆணையிட்டதும் உடனேயே ஆடிவந்து கூத்தாடுகின்ற ஒரு பச்சைமயில் வாகனத்தின் மீது ஏறி, பழமையான அடியார்களுடன், தேவர் கூட்டம் இருபுறமும் மிகுந்த தமிழ்ப் பாடல்களையும் வேதகீதங்களையும் பாடி வணங்க, முன்னொருமுறை திருவண்ணாமலையில் என்முன் வந்ததுபோல இன்னொரு முறை வந்தருளல் வேண்டும். ஜடாமுடியைத் தாங்குபவரும், ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், பாம்புகளை ஆபரணங்களாகப் பூண்டவரும், மேன்மையான மழுவைத் தாங்கியவரும், சந்திரனை முடியில் தரித்தவரும், தூய்மையே உருவாக நிற்பவரும், இதமாய் ஒலிக்கும் உடுக்கையையும், மானையும் திருக்கரங்களில் ஏந்தியவரும், பார்வதிதேவியை இடப்பாகத்தில் தாங்கியவரும், பிரம்மனின் சிரத்தைத் தாங்கியவரும், சுமையான இந்த பூமியைத் தாங்கியவரும், மேருமலையையே வில்லாகத் தரித்தவரும், ஆயிரம் முகங்களை உடைய சிறந்த கங்காதேவியைச் சிரத்தில் தாங்கியவரும் ஆகிய சிவ பெருமானுடைய திருப்புதல்வனே, அரும் குணங்களை உடையவனே, நாகமலை என்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளி இருப்பவனே, தயாள மூர்த்தியே, கற்பகத் தருவுள்ள தேவநாட்டின் இந்திராணி மகள் மயிலை ஒத்த அழகி தேவயானையின் வாழ்வாக இருப்பவனே, அசுரர்களின் நீண்ட உடம்பின் கரிய வடிவத்திலிருந்து இருள் வீசவும், அவர்களின் பற்களிலிருந்து ஒளி வீசவும், சுழல்கின்ற கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறக்கவும், ஏழு குலகிரிகள் நெரிந்து பொடிபடவும், அதிர்கின்ற குரலிலிருந்து புகை எழவும், இடி போன்ற பேரொலி எழவும், விசாலமான ஆகாயமும், பூமியும் அச்சப்படவும் வருகின்ற அசுரர்களின் சேனைகள் சிறிதும் மீதமில்லாமல் முழுவதும் அழிந்தொழிய ஒப்பற்ற சர்வ சம்கார வேற்படையை ஏவிய தலைவனே, மேலான குருநாதனே, தேவர் கோமான் இந்திரனால் துதிக்கப் பெற்ற பெருமாளே.