எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு
இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய
விழி இணை ஆடித் தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள் சந்தேகம் அறவெ பறி கொளும் மானார்
சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட
தண்பு ஆரும் உனது அருளை அருள்வாயே
சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு(ம்) நிரை பிறகு சந்து ஆரும் வெதிர் உரு குழல் அது ஊதி
தன் காதல் தனை உகள என்று ஏழு மடவியர்கள் தம் கூறை கொடு மரமில் அது ஏறும் சிங்கார அரி மருக
பங்கேருகனும் மருள சென்று ஏயும் அமரருடை சிறை மீள செண்டு ஆடி அசுரர்களை
ஒன்றாக அடியர் தொழும் தென் சேரி கிரியில் வரும் பெருமாளே.
எங்கேயாவது ஒருவர் வரக் கண்டால் அங்கே கண் கொண்டு இனிமையாகப் பார்த்து, இங்கு யார் தான் உன் மீது மோகம் கொள்ள மாட்டார்கள் என்று கூறி, இதோ என்னுடைய இனிமையான வாயிதழ் கொடுக்கின்றேன், என்னைப் பொருந்தித் தழுவுவாயாக என்று ஆசை மொழிகளை மனம் குழையக் கூறி, இரண்டு கண்களையும் உருட்டி அசைத்து, சற்றும் தயங்காமல் வந்தவர்களிடம் உள்ளதான பொருளையும், உயிரையும் சந்தேகம் இல்லாமல் அபகரித்துக் கொள்ளும், மான் போன்ற விலை மகளிருடைய சங்கீதமும் சேர்க்கையும் நித்யசுகம் தரும் என்று எண்ணி மூழ்குகின்ற காமக் கடலினின்று நான் கரை ஏறுவதற்கு, குளிர்ச்சி பொருந்திய உனது திருவருளைத் தந்து அருள்வாயாக. சங்கும் சக்கரமும் கைகளின் ஏந்தியவனும், பொருந்திய பசுக் கூட்டங்களின் பின்னே (கண்ணனாகச்) சென்று தொளைகள் நிரம்பிய, மூங்கில் புல்லாங்குழலை ஊதியவனும், தம் மேல் கொண்ட ஆசையை கடக்க மனம் எழுச்சியைக் கொண்ட பெண்களின் ஆடையை எடுத்துக் கொண்டு (குருந்த) மரத்தின் மேல் ஏறியவனும், அழகிய உருவம் கொண்டவனுமாகிய திருமாலின் மருகனே, தாமரை மலரில் வாழும் பிரமனும் மயங்கி அச்சமுற, சென்று முறையிட்ட தேவர்களுடைய சிறையை நீக்கி, அசுரர்களைச் சிதற அடித்து, யாவரும் ஒன்று கூடி அடியார்கள் அனைவரும் தொழுது வணங்க, தென் சேரி கிரியில் வீற்றிருக்கும் பெருமாளே.
எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு ... எங்கேயாவது ஒருவர் வரக் கண்டால் அங்கே கண் கொண்டு இனிமையாகப் பார்த்து, இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று ... இங்கு யார் தான் உன் மீது மோகம் கொள்ள மாட்டார்கள் என்று கூறி, இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய ... இதோ என்னுடைய இனிமையான வாயிதழ் கொடுக்கின்றேன், என்னைப் பொருந்தித் தழுவுவாயாக என்று ஆசை மொழிகளை மனம் குழையக் கூறி, விழி இணை ஆடித் தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள் சந்தேகம் அறவெ பறி கொளும் மானார் ... இரண்டு கண்களையும் உருட்டி அசைத்து, சற்றும் தயங்காமல் வந்தவர்களிடம் உள்ளதான பொருளையும், உயிரையும் சந்தேகம் இல்லாமல் அபகரித்துக் கொள்ளும், மான் போன்ற விலை மகளிருடைய சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட ... சங்கீதமும் சேர்க்கையும் நித்யசுகம் தரும் என்று எண்ணி மூழ்குகின்ற காமக் கடலினின்று நான் கரை ஏறுவதற்கு, தண்பு ஆரும் உனது அருளை அருள்வாயே ... குளிர்ச்சி பொருந்திய உனது திருவருளைத் தந்து அருள்வாயாக. சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு(ம்) நிரை பிறகு சந்து ஆரும் வெதிர் உரு குழல் அது ஊதி ... சங்கும் சக்கரமும் கைகளின் ஏந்தியவனும், பொருந்திய பசுக் கூட்டங்களின் பின்னே (கண்ணனாகச்) சென்று தொளைகள் நிரம்பிய, மூங்கில் புல்லாங்குழலை ஊதியவனும், தன் காதல் தனை உகள என்று ஏழு மடவியர்கள் தம் கூறை கொடு மரமில் அது ஏறும் சிங்கார அரி மருக ... தம் மேல் கொண்ட ஆசையை கடக்க மனம் எழுச்சியைக் கொண்ட பெண்களின் ஆடையை எடுத்துக் கொண்டு (குருந்த) மரத்தின் மேல் ஏறியவனும், அழகிய உருவம் கொண்டவனுமாகிய திருமாலின் மருகனே, பங்கேருகனும் மருள சென்று ஏயும் அமரருடை சிறை மீள செண்டு ஆடி அசுரர்களை ... தாமரை மலரில் வாழும் பிரமனும் மயங்கி அச்சமுற, சென்று முறையிட்ட தேவர்களுடைய சிறையை நீக்கி, அசுரர்களைச் சிதற அடித்து, ஒன்றாக அடியர் தொழும் தென் சேரி கிரியில் வரும் பெருமாளே. ... யாவரும் ஒன்று கூடி அடியார்கள் அனைவரும் தொழுது வணங்க, தென் சேரி கிரியில் வீற்றிருக்கும் பெருமாளே.