மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர் வாந்தவிய மாக ...... முறைபேசி வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி வாழ்ந்தமனை தேடி ...... உறவாடி ஏந்துமுலை மீது சாந்துபல பூசி ஏங்குமிடை வாட ...... விளையாடி ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல் ஏய்ந்தவிலைமாதர் ...... உறவாமோ பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி தாஞ்செகண சேசெ ...... எனவோசை பாங்குபெறு தாள மேங்கநட மாடு பாண்டவர்ச காயன் ...... மருகோனே பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு பூங்கதலி கோடி ...... திகழ்சோலை பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு பூம்பறையின் மேவு ...... பெருமாளே.
மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர் வா (பா)ந்தவியமாக முறை பேசி
வாஞ்சை பெரு மோக சாந்தி தர நாடிவாழ்ந்த மனை தேடி உறவாடி
ஏந்து முலை மீது சாந்து பல பூசி ஏங்கும் இடை வாட விளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனை இல்லாமல் ஏய்ந்த விலைமாதர் உறவாமோ
பாந்த(ள்) முடி மீது தாந்த திமி தோதி தாஞ் செகண சேசெ என ஓசை
பாங்கு பெற தாளம் ஏங்க நடமாடும் பாண்டவர் சகாயன் மருகோனே
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை
பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும் பெருமாளே.
மாந்தளிர் போல் நிறமுள்ள தோலால் மூடப்பட்ட உடலை உடைய விலைமாதர்கள் (காமுகரிடம்) உறவு முறைகள் பலவற்றை உரிமையுடன் பேசிக் காட்ட வல்லவர். அவர்கள் மீது விருப்பமும், பெருத்த மோகமும் ஏற்பட்டு, அதற்கு அமைதியைத் தர வேண்டி (அப்பொது மகளிர்) வாழ்ந்த வீடுகளைத் தேடி, அவர்களோடு உறவாடி, உயர்ந்து நிற்கும் மார்பில் சந்தனம் முதலிய பல நறு மணங்களைப் பூசி, இளைத்து நிற்கும் இடை ஒடுங்க சரசமாக விளையாடிப் (பின்னர்), உபத்திரவங்கள் (ஹிம்சைகள்) உண்டாக, வெட்கம் இன்றிக் கூடிய வேசையர்களின் உறவு நன்றோ? (காளிங்கன் என்ற) பாம்பின் முடியின் மேல் தாந்த திமிதோதி தாஞ் செகண சேசெ என்ற இவ்வாறான தாள ஒத்துக்களோடு ஓசைகளை அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க நடனம் ஆடியவனும், பாண்டவர்களின் துணைவனுமாகிய கண்ணனுடைய மருகனே, பூக்களும் தளிர்களும் விளங்கும் வேங்கை மரங்களும், பலா மரங்களும், அழகிய வாழை மரங்களும் கோடிக் கணக்காகத் திகழும் சோலைகளுடன், அழகிய குளமும், உலவித் திரியும் கோம்பை நாய்களும் இருக்கும் பூம்பறையில் வீற்றிருக்கும் பெருமாளே.
மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர் வா (பா)ந்தவியமாக முறை பேசி ... மாந்தளிர் போல் நிறமுள்ள தோலால் மூடப்பட்ட உடலை உடைய விலைமாதர்கள் (காமுகரிடம்) உறவு முறைகள் பலவற்றை உரிமையுடன் பேசிக் காட்ட வல்லவர். வாஞ்சை பெரு மோக சாந்தி தர நாடிவாழ்ந்த மனை தேடி உறவாடி ... அவர்கள் மீது விருப்பமும், பெருத்த மோகமும் ஏற்பட்டு, அதற்கு அமைதியைத் தர வேண்டி (அப்பொது மகளிர்) வாழ்ந்த வீடுகளைத் தேடி, அவர்களோடு உறவாடி, ஏந்து முலை மீது சாந்து பல பூசி ஏங்கும் இடை வாட விளையாடி ... உயர்ந்து நிற்கும் மார்பில் சந்தனம் முதலிய பல நறு மணங்களைப் பூசி, இளைத்து நிற்கும் இடை ஒடுங்க சரசமாக விளையாடிப் (பின்னர்), ஈங்கிசைகள் மேவ லாஞ்சனை இல்லாமல் ஏய்ந்த விலைமாதர் உறவாமோ ... உபத்திரவங்கள் (ஹிம்சைகள்) உண்டாக, வெட்கம் இன்றிக் கூடிய வேசையர்களின் உறவு நன்றோ? பாந்த(ள்) முடி மீது தாந்த திமி தோதி தாஞ் செகண சேசெ என ஓசை ... (காளிங்கன் என்ற) பாம்பின் முடியின் மேல் தாந்த திமிதோதி தாஞ் செகண சேசெ என்ற இவ்வாறான தாள ஒத்துக்களோடு ஓசைகளை பாங்கு பெற தாளம் ஏங்க நடமாடும் பாண்டவர் சகாயன் மருகோனே ... அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க நடனம் ஆடியவனும், பாண்டவர்களின் துணைவனுமாகிய கண்ணனுடைய மருகனே, பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை ... பூக்களும் தளிர்களும் விளங்கும் வேங்கை மரங்களும், பலா மரங்களும், அழகிய வாழை மரங்களும் கோடிக் கணக்காகத் திகழும் சோலைகளுடன், பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும் பெருமாளே. ... அழகிய குளமும், உலவித் திரியும் கோம்பை நாய்களும் இருக்கும் பூம்பறையில் வீற்றிருக்கும் பெருமாளே.