ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினைத் தடிவ தொந்தத் திரத்தை உள
அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகல் எனும் அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ
களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்சப் புடைத்து எழு வஞ்சக் கருத்து மதன் அபிஷேகம் கடிவ
படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்பச் சுடர் கனக கும்பத் தரச் செருவ
பிருதில் புளகித சுகமு(ம்) மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ
கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கிக் கனத்து ஒளிர்வ முலை மாதர்
வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றிக் கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல் அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட் குரல் பகர வம்பு உற்ற மல் புரிய
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றிச் சிவக்க மகிழ் நன்றிச் சமத்து நக நுதி ரேகை வகை வகை மெய் உற வளைகள் கழல இடை துவள
இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்திப் பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று
உன் அடி வயலி நகர் முருக செரு உயல் ப(ன்)னிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண தனனதன தனதனன தெனனதென தெனதெனன தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன ...... தனனானா தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி ...... என தாளம் தொகுதி
வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட(ம்) மத்தளம் இனம் பட்ட டக்கை பறை பதலை பல திமிலை முதல் அதிர
உதிர் பெரிய தலை மண்டைத் திரள் பருகு சண்டைத் திரள் கழுகு துடர் நிபிட கருடன் அடர்தர கரட(ம்) மொகு மொகு என வந்து உற்றிட
குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் சுனகன் நரி நெறு நெறு என இனிது இனிது தி(ன்)ன வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்குக் குகுக்குகு என வடு அ(ன்)னம் இடு திசை பரவி நடனம் இட
அடல் இரவி திங்கள் ப்ரபைக் கதிர்கள் மங்க ப்ரசித்த குல துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டைக் குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே.
(முதல் 12 வரிகள் வேசைகளின் மார்பகங்களை வர்ணிக்கின்றன. அடுத்த 12 வரிகள் அவர்களுடனான கலவியை விவரிக்கின்றன. மூன்றாம் 12 வரிகள் தாளங்களின் ஒலிகளைத் தொகுக்கின்றன. கடைசி 12 வரிகள் போர்க்களத்தின் பின்னிகழ்வுகளைக் கூறுகின்றன). திசைகளின் நிலையைக் குலைக்க வல்ல வலிமை மிகுந்த யானையின் பலத்த தந்தங்களை அழிக்க வல்லனவும், ஆலிங்கனத்துக்கு உரிய வலிமையைக் கொண்டனவும், எல்லா வேதங்களும் போற்றுகின்ற பரமரும், சிலம்பு கல கல கல் என்று ஓசை செய்யும் அழகிய பொலிவுள்ள பாதங்களை உடையவருமாகிய சிவபெருமான் ஏந்திய வில்லாகிய அழகிய பொன் மலை மேருவைத் தாக்க வல்லனவும், நறு மணமுள்ள களபச் சாந்து பூசப்பட்டனவும், அழகில் முழுகுவனவும், தாமரை மொட்டு பயப்படும்படி பெருத்து எழுவனவும், வஞ்சனையான எண்ணமுடைய மன்மதனின் கிரீடத்தை அடக்க வல்லனவும், பொல்லாத கொலைத் தொழிலுக்கு இடம் கொடுப்பனவும், கொடிதான மேல் ஆடை அணிவனவும், இன்பம் தரும் ஒளி பொருந்திய தங்கக் குடத்துடன் தக்க முறையில் போர் புரிய வல்லனவும், வெற்றிச் சின்னமாக விளங்கி, புளகாங்கித சுகத்தாலும் மென்மையாலும், வளர்கின்ற இளைஞர்களின் புத்திக்குத் துன்பத்தைக் கொடுப்பனவும், கட்டப்பட்ட ரவிக்கையால் நெருக்கப்படுவனவும், கயல் மீன், மகர மீன் இவைகளின் கூட்டம் மிக்குச் சிறப்பு பொருந்திய ஆற்றில் நிறைந்த சங்கு, சிப்பி, முத்து இவைகளை அணிவனவும், மேலெழுந்து பாரம் கொண்டு விளங்குவனவும் ஆகிய மார்பகங்களை உடைய விலைமாதர்கள். மகிழம்பூ, குவளை மலரின் இதழ் ஆகியவைகள் கொடுக்கின்ற நறு மணமும், கஸ்தூரியும் கலந்த, கருநிறத்தால் மேகத்தையும் வெற்றி கொண்டு, வாசனை எண்ணெய் பூசப்பட்ட கூந்தல் அசைய, இனிப்புள்ள அமுதத்தாலாகியதும், தன்வசப்படுத்தக் கூடிய இனிய மொழிகள் மயில் குயில் ஆகிய பறவைகளின் புட்குரலைச் சொல்ல, கலவிப் போர் செய்ய, வருகின்ற யமனுடைய வேலுடன் ஒத்து முடுகிப் போர் செய்கின்ற கண்கள் இரண்டும் மிகவும் சிவக்க, மகிழ்ந்து நன்றியைப் பாராட்டுவது போன்று நகத்தின் நுனி ரேகைக் குறிகள் வகை வகையாக உடலில் பதிய, கைவளைகள் கழன்று விழ, அவர்களது இடை துவண்டு சரிய, வாயிதழ் ஊறலை உண்டு உள்ளம் பிரமிக்க ஆசை பூண்டு அணைக்கும் துன்பம் நிறைந்த புணர்ச்சி வலையில் என்னுடைய புத்தி கொண்டுள்ள நூலறிவு சிதறுதல் நீங்கி, பிறவி ஒழிவதற்கான வழியை (நீ) விரும்பி நினைத்து, உனது திருவடிகளை, வயலூரில் வீற்றிருக்கும் முருகனே, போருக்கு உற்ற பன்னிரண்டு கைகளை உடையவனே, குமரனே, பொருந்திய சிறந்த எட்டு குணங்களை உடையவனே, குன்றக்குடி என்னும் தலத்துக்குத் தலைவனே, எனக்கு அருள் செய்திடாயோ? மேற்கூறிய தாளங்களின் கூட்டத்தில் பல முரச வாத்தியங்கள, கரடிகை, டமரு, முழவு தவில், தம்பட்டம், மத்தள இனம் பட்ட டக்கை, பறை, பதலை, பல திமிலை, முதலிய வாத்தியங்கள் அதிர்ச்சியான ஓசைகளைச் செய்ய, போரில் அறுந்து விழும் மண்டை ஓடுகளின் கூட்டத்தை உண்ணுவதற்குச் சண்டை இடும் கூட்டமான கழுகுகளும் அவைகளைத் தொடர்ந்து நெருங்கி வரும் கருடன்கள் கூட்டமாய் வர, காக்கைகள் மொகு மொகு என்று வந்து சேர, குடல், மாமிசம் இவைகளை உண்டு இசைகள் பாடிக் கூச்சலிட்டு பழம் பேய்கள், நாய், நரி ஆகியவை நெறு நெறு என்ற ஒலியுடன் உண்ண மிக ருசியாக இருக்கிறது என்று சாப்பிடும் தொழிலைச் செய்ய, கோபமிக்க கோழிக் கொடி துங்குக் குகுக்குகு என்று ஒலிக்க, வெளிப்படும் உணவு கிடைக்கின்ற திசையைப் போற்றி கூத்தாட, வலிமை வாய்ந்த சூரியன், சந்திரன இவைகளின் ஒளிக் கிரணங்கள் (போர்ப்பழுதியில்) மங்கிப் போக, சிறப்புடைய குதிரை, யானை, தேர், வலிமை வாய்ந்த கோட்டை மதில் இவைகளைக் கொண்ட அசுரர்களின் வலிமையையும் துடுக்கையும் அடக்கி, போர் செய்து, வானவர்களுக்கு வலிமையை அருள் செய்த பெருமாளே.
(முதல் 12 வரிகள் வேசைகளின் மார்பகங்களை வர்ணிக்கின்றன. அடுத்த 12 வரிகள் அவர்களுடனான கலவியை விவரிக்கின்றன. மூன்றாம் 12 வரிகள் தாளங்களின் ஒலிகளைத் தொகுக்கின்றன. கடைசி 12 வரிகள் போர்க்களத்தின் பின்னிகழ்வுகளைக் கூறுகின்றன). ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினைத் தடிவ தொந்தத் திரத்தை உள ... திசைகளின் நிலையைக் குலைக்க வல்ல வலிமை மிகுந்த யானையின் பலத்த தந்தங்களை அழிக்க வல்லனவும், ஆலிங்கனத்துக்கு உரிய வலிமையைக் கொண்டனவும், அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகல் எனும் அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ ... எல்லா வேதங்களும் போற்றுகின்ற பரமரும், சிலம்பு கல கல கல் என்று ஓசை செய்யும் அழகிய பொலிவுள்ள பாதங்களை உடையவருமாகிய சிவபெருமான் ஏந்திய வில்லாகிய அழகிய பொன் மலை மேருவைத் தாக்க வல்லனவும், களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்சப் புடைத்து எழு வஞ்சக் கருத்து மதன் அபிஷேகம் கடிவ ... நறு மணமுள்ள களபச் சாந்து பூசப்பட்டனவும், அழகில் முழுகுவனவும், தாமரை மொட்டு பயப்படும்படி பெருத்து எழுவனவும், வஞ்சனையான எண்ணமுடைய மன்மதனின் கிரீடத்தை அடக்க வல்லனவும், படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்பச் சுடர் கனக கும்பத் தரச் செருவ ... பொல்லாத கொலைத் தொழிலுக்கு இடம் கொடுப்பனவும், கொடிதான மேல் ஆடை அணிவனவும், இன்பம் தரும் ஒளி பொருந்திய தங்கக் குடத்துடன் தக்க முறையில் போர் புரிய வல்லனவும், பிருதில் புளகித சுகமு(ம்) மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ ... வெற்றிச் சின்னமாக விளங்கி, புளகாங்கித சுகத்தாலும் மென்மையாலும், வளர்கின்ற இளைஞர்களின் புத்திக்குத் துன்பத்தைக் கொடுப்பனவும், கட்டப்பட்ட ரவிக்கையால் நெருக்கப்படுவனவும், கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கிக் கனத்து ஒளிர்வ முலை மாதர் ... கயல் மீன், மகர மீன் இவைகளின் கூட்டம் மிக்குச் சிறப்பு பொருந்திய ஆற்றில் நிறைந்த சங்கு, சிப்பி, முத்து இவைகளை அணிவனவும், மேலெழுந்து பாரம் கொண்டு விளங்குவனவும் ஆகிய மார்பகங்களை உடைய விலைமாதர்கள். வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றிக் கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல் அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட் குரல் பகர வம்பு உற்ற மல் புரிய ... மகிழம்பூ, குவளை மலரின் இதழ் ஆகியவைகள் கொடுக்கின்ற நறு மணமும், கஸ்தூரியும் கலந்த, கருநிறத்தால் மேகத்தையும் வெற்றி கொண்டு, வாசனை எண்ணெய் பூசப்பட்ட கூந்தல் அசைய, இனிப்புள்ள அமுதத்தாலாகியதும், தன்வசப்படுத்தக் கூடிய இனிய மொழிகள் மயில் குயில் ஆகிய பறவைகளின் புட்குரலைச் சொல்ல, கலவிப் போர் செய்ய, வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றிச் சிவக்க மகிழ் நன்றிச் சமத்து நக நுதி ரேகை வகை வகை மெய் உற வளைகள் கழல இடை துவள ... வருகின்ற யமனுடைய வேலுடன் ஒத்து முடுகிப் போர் செய்கின்ற கண்கள் இரண்டும் மிகவும் சிவக்க, மகிழ்ந்து நன்றியைப் பாராட்டுவது போன்று நகத்தின் நுனி ரேகைக் குறிகள் வகை வகையாக உடலில் பதிய, கைவளைகள் கழன்று விழ, அவர்களது இடை துவண்டு சரிய, இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்திப் பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று ... வாயிதழ் ஊறலை உண்டு உள்ளம் பிரமிக்க ஆசை பூண்டு அணைக்கும் துன்பம் நிறைந்த புணர்ச்சி வலையில் என்னுடைய புத்தி கொண்டுள்ள நூலறிவு சிதறுதல் நீங்கி, பிறவி ஒழிவதற்கான வழியை (நீ) விரும்பி நினைத்து, உன் அடி வயலி நகர் முருக செரு உயல் ப(ன்)னிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ ... உனது திருவடிகளை, வயலூரில் வீற்றிருக்கும் முருகனே, போருக்கு உற்ற பன்னிரண்டு கைகளை உடையவனே, குமரனே, பொருந்திய சிறந்த எட்டு குணங்களை உடையவனே, குன்றக்குடி என்னும் தலத்துக்குத் தலைவனே, எனக்கு அருள் செய்திடாயோ? தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண தனனதன தனதனன தெனனதென தெனதெனன தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன ...... தனனானா தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி ...... என தாளம் தொகுதி ... மேற்கூறிய தாளங்களின் கூட்டத்தில் வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட(ம்) மத்தளம் இனம் பட்ட டக்கை பறை பதலை பல திமிலை முதல் அதிர ... பல முரச வாத்தியங்கள, கரடிகை, டமரு, முழவு தவில், தம்பட்டம், மத்தள இனம் பட்ட டக்கை, பறை, பதலை, பல திமிலை, முதலிய வாத்தியங்கள் அதிர்ச்சியான ஓசைகளைச் செய்ய, உதிர் பெரிய தலை மண்டைத் திரள் பருகு சண்டைத் திரள் கழுகு துடர் நிபிட கருடன் அடர்தர கரட(ம்) மொகு மொகு என வந்து உற்றிட ... போரில் அறுந்து விழும் மண்டை ஓடுகளின் கூட்டத்தை உண்ணுவதற்குச் சண்டை இடும் கூட்டமான கழுகுகளும் அவைகளைத் தொடர்ந்து நெருங்கி வரும் கருடன்கள் கூட்டமாய் வர, காக்கைகள் மொகு மொகு என்று வந்து சேர, குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் சுனகன் நரி நெறு நெறு என இனிது இனிது தி(ன்)ன வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்குக் குகுக்குகு என வடு அ(ன்)னம் இடு திசை பரவி நடனம் இட ... குடல், மாமிசம் இவைகளை உண்டு இசைகள் பாடிக் கூச்சலிட்டு பழம் பேய்கள், நாய், நரி ஆகியவை நெறு நெறு என்ற ஒலியுடன் உண்ண மிக ருசியாக இருக்கிறது என்று சாப்பிடும் தொழிலைச் செய்ய, கோபமிக்க கோழிக் கொடி துங்குக் குகுக்குகு என்று ஒலிக்க, வெளிப்படும் உணவு கிடைக்கின்ற திசையைப் போற்றி கூத்தாட, அடல் இரவி திங்கள் ப்ரபைக் கதிர்கள் மங்க ப்ரசித்த குல துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டைக் குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே. ... வலிமை வாய்ந்த சூரியன், சந்திரன இவைகளின் ஒளிக் கிரணங்கள் (போர்ப்பழுதியில்) மங்கிப் போக, சிறப்புடைய குதிரை, யானை, தேர், வலிமை வாய்ந்த கோட்டை மதில் இவைகளைக் கொண்ட அசுரர்களின் வலிமையையும் துடுக்கையும் அடக்கி, போர் செய்து, வானவர்களுக்கு வலிமையை அருள் செய்த பெருமாளே.