வெடித்த வார் குழல் விரித்து வேல் விழி விழித்து மேகலை பதித்து வார் தொடு மிகுத்த மா முலை அசைத்து நூலின் மருங்கின் ஆடை மினுக்கி
ஓலைகள் பிலுக்கியே வளை துலக்கியே வி(ள்)ள நகைத்து கீழ் விழி மிரட்டி யாரையும் அழைத்து மால் கொடு தந்த வாய் நீர் குடித்து
நாய் என முடக்கும் ஏல் பிணி அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர் குலத்தவர் யாவரும் நகைக்கவே உடல் மங்குவேனை
குறித்து நீ அருகு அழைத்து மாதவர் கணத்தின் மேவு என அளித்து வேல் மயில் கொடுத்து வேதமும் ஒருத்தனாம் என சிந்தை கூராய்
உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ என திகுத்த தீதிகு திகுர்த்த தா என உடுக்கை பேரிகை தவில் குழாமும் இரங்கு போரில்
உலுத்த நீசர்கள் பதைப்ப மா கரி துடிப்ப நீள் கடல் எரித்து சூர் மலை உடைத்து நீதிகள் பரப்பியே
அவர் உம்பராரை அடைத்த மா சிறை விடுத்த வான் உலகு அளிக்கும் ஆயிரம் திரு க(ண்)ணான் அரசு அளித்து நாளும் என் உள்ளத்திலே மகிழும் குமாரா
அளித்த தாதையு(ம்) மிகுத்த மாமனும் அனைத்து உ(ள்)ளோர்களும் மதிக்கவே மகிழ் அகத்ய மா முநி பொருப்பின் மேவிய தம்பிரானே.
நறுமணம் கமழும் நீண்ட கூந்தலை விரித்து, வேல் போன்ற கண்களை விழித்து, இடுப்பிலே ஒட்டியாணத்தை அணிந்து, கச்சு அணிந்த மிகப் பெரிய மார்பகத்தை அசைத்து, நூல் போல் மெல்லிய இடையில் ஆடையை மினுக்கியும், காதோலைகளைப் போலி ஒளியாகக் காட்டியும், கை வளைகளை ஆட்டி ஒலிக்கச் செய்தும், வெளிப்படையாய்ச் சிரித்தும், கீழ்க் கண்ணால் மிரட்டி யாரையும் வா என அழைத்தும், மோகத்துடன் கொடுத்த வாயிதழ் ஊறலைப் பருகியும், (இவ்வேசைகள் எனக்கு) நாய் போல முடக்கத்தை விளைவிக்கும் நோய்கள் தந்துவிட, வேதனைகள் உண்டாக, தாயும், சுற்றத்தார்களும், குலத்தைச் சேர்ந்தவர் எல்லோரும் பரிகசித்துச் சிரிக்க உடல் வாட்டம் உறுகின்ற என்னை, கவனித்து நீ உன் அருகில் வரச் செய்து பெரிய தவசிகள் கூட்டத்தில் சேர்வாயாக என்று எனக்கு அருள் புரிந்து, வேல், மயில் ஆகிய அடையாளங்களைப் பொறித்து, வேதங்களும் என்னை இவனொரு ஒப்பற்றவன் என்று கூறும்படி மனம் கூர்ந்து அருள்வாயாக. உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ என்றும், திகுத்த தீதிகு திகுர்த்த தா என்றும் இவ்வாறான ஒலிகளை உடுக்கை, பேரிகை, தவில் இவைகளின் கூட்டங்கள் ஒலிக்கும் போர்க்களத்தில், உலோபிகளும், கீழோரும் ஆகிய அசுரர்கள் பதைபதைக்க, பெரிய யானைகள் துடிக்க, நீண்ட கடலை எரித்து, சூரனையும், கிரவுஞ்ச மலையையும் உடைத்துப் பொடியாக்கி, நீதியை நிலை நிறுத்தி எங்கும் பரப்பி, அந்த அசுரர்கள் தேவர்களை அடைத்து வைத்த பெரிய சிறையினின்றும் விடுவித்து, (தேவர்களுக்குத்) தேவ லோகத்தை அளித்தவனே, ஆயிரம் அழகிய கண்களை உடைய இந்திரனுக்கு அரசாட்சியை அளித்து, நாள் தோறும் என் உள்ளத்தில் இருந்து மகிழும் குமரனே, ஈன்ற தந்தையாகிய சிவபெருமானும், பேர்பெற்ற மாமனாகிய திருமாலும் மற்றும் எல்லோரும் மதிக்கும்படி, மகிழ்ச்சியுடன் அகத்திய முனிவரின் மலையாகிய பொதிய மலையில் வீற்றிருக்கும் தம்பிரானே.
வெடித்த வார் குழல் விரித்து வேல் விழி விழித்து மேகலை பதித்து வார் தொடு மிகுத்த மா முலை அசைத்து நூலின் மருங்கின் ஆடை மினுக்கி ... நறுமணம் கமழும் நீண்ட கூந்தலை விரித்து, வேல் போன்ற கண்களை விழித்து, இடுப்பிலே ஒட்டியாணத்தை அணிந்து, கச்சு அணிந்த மிகப் பெரிய மார்பகத்தை அசைத்து, நூல் போல் மெல்லிய இடையில் ஆடையை மினுக்கியும், ஓலைகள் பிலுக்கியே வளை துலக்கியே வி(ள்)ள நகைத்து கீழ் விழி மிரட்டி யாரையும் அழைத்து மால் கொடு தந்த வாய் நீர் குடித்து ... காதோலைகளைப் போலி ஒளியாகக் காட்டியும், கை வளைகளை ஆட்டி ஒலிக்கச் செய்தும், வெளிப்படையாய்ச் சிரித்தும், கீழ்க் கண்ணால் மிரட்டி யாரையும் வா என அழைத்தும், மோகத்துடன் கொடுத்த வாயிதழ் ஊறலைப் பருகியும், நாய் என முடக்கும் ஏல் பிணி அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர் குலத்தவர் யாவரும் நகைக்கவே உடல் மங்குவேனை ... (இவ்வேசைகள் எனக்கு) நாய் போல முடக்கத்தை விளைவிக்கும் நோய்கள் தந்துவிட, வேதனைகள் உண்டாக, தாயும், சுற்றத்தார்களும், குலத்தைச் சேர்ந்தவர் எல்லோரும் பரிகசித்துச் சிரிக்க உடல் வாட்டம் உறுகின்ற என்னை, குறித்து நீ அருகு அழைத்து மாதவர் கணத்தின் மேவு என அளித்து வேல் மயில் கொடுத்து வேதமும் ஒருத்தனாம் என சிந்தை கூராய் ... கவனித்து நீ உன் அருகில் வரச் செய்து பெரிய தவசிகள் கூட்டத்தில் சேர்வாயாக என்று எனக்கு அருள் புரிந்து, வேல், மயில் ஆகிய அடையாளங்களைப் பொறித்து, வேதங்களும் என்னை இவனொரு ஒப்பற்றவன் என்று கூறும்படி மனம் கூர்ந்து அருள்வாயாக. உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ என திகுத்த தீதிகு திகுர்த்த தா என உடுக்கை பேரிகை தவில் குழாமும் இரங்கு போரில் ... உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ என்றும், திகுத்த தீதிகு திகுர்த்த தா என்றும் இவ்வாறான ஒலிகளை உடுக்கை, பேரிகை, தவில் இவைகளின் கூட்டங்கள் ஒலிக்கும் போர்க்களத்தில், உலுத்த நீசர்கள் பதைப்ப மா கரி துடிப்ப நீள் கடல் எரித்து சூர் மலை உடைத்து நீதிகள் பரப்பியே ... உலோபிகளும், கீழோரும் ஆகிய அசுரர்கள் பதைபதைக்க, பெரிய யானைகள் துடிக்க, நீண்ட கடலை எரித்து, சூரனையும், கிரவுஞ்ச மலையையும் உடைத்துப் பொடியாக்கி, நீதியை நிலை நிறுத்தி எங்கும் பரப்பி, அவர் உம்பராரை அடைத்த மா சிறை விடுத்த வான் உலகு அளிக்கும் ஆயிரம் திரு க(ண்)ணான் அரசு அளித்து நாளும் என் உள்ளத்திலே மகிழும் குமாரா ... அந்த அசுரர்கள் தேவர்களை அடைத்து வைத்த பெரிய சிறையினின்றும் விடுவித்து, (தேவர்களுக்குத்) தேவ லோகத்தை அளித்தவனே, ஆயிரம் அழகிய கண்களை உடைய இந்திரனுக்கு அரசாட்சியை அளித்து, நாள் தோறும் என் உள்ளத்தில் இருந்து மகிழும் குமரனே, அளித்த தாதையு(ம்) மிகுத்த மாமனும் அனைத்து உ(ள்)ளோர்களும் மதிக்கவே மகிழ் அகத்ய மா முநி பொருப்பின் மேவிய தம்பிரானே. ... ஈன்ற தந்தையாகிய சிவபெருமானும், பேர்பெற்ற மாமனாகிய திருமாலும் மற்றும் எல்லோரும் மதிக்கும்படி, மகிழ்ச்சியுடன் அகத்திய முனிவரின் மலையாகிய பொதிய மலையில் வீற்றிருக்கும் தம்பிரானே.