கடகட என்று சப்திக்கும் பறைகளின் பேரொலியும் அடங்குமாறு வரிப்புலிகளின் ஒலி அதிர்கின்ற கதிர்காமத்துக் கடவுளே, அலைகள் வீசும் கடலினை உனது வேலால் அலைவுறச் செய்த வீரனே, பெருமையையும் கோபத்தையும் உடைய மலை போன்ற யானை வளர்த்த தேவயானையை மணந்த இனிய குணத்தோனே, என் இதய குகையில் இருக்கும் குகனே, மன்மதனின் தந்தை திருமால் பயப்பட, பிரம்மா ஓடிட, வட மேரு மலைச் சிகரம் தவிடுபொடியாக நடனம் செய்யும் குதிரை போன்ற மயில் மீது ஏறி வருகின்ற கந்தக் கடவுளே, தவறாமல் வழிவழியாக வந்த உறவினன் என்னும்படி யான் வழிபடுகின்றவனாக இல்லேன் எனினும் எனது மூவாசைகளும் துன்பங்களும் அழிந்து ஒழிந்திடுமோ? காட்டில் சிவமுனிவர் உருவத்தில் தவத்திலிருந்த ரிஷியின்அற்புதப் புதுமையான குமாரி வள்ளிக்கு அடிமையாகிச் சென்று அவள் இருந்த தினைப்புனத்துக்குப் போய், தளர்ச்சி அடைந்தவனே, மயக்கத்துடன் ஒருநாள் காட்டிலே திரிந்து கொண்டிருந்த கவியாகிய பொய்யாமொழிப் புலவரை ஆண்டருள வேலினைத் தோளில் ஏந்திச் சென்று அருள் புரிந்தவனே, தம் உடலின் இடது பாகத்தில் ஓர் மரகத மயிலை மிஞ்சிய அழகுள்ள ஏந்திழையாம் பார்வதிக்கு இடம் தந்தவரான சிவபிரானின் செல்வனே, அடியேன் இனிய மொழிகளைக் கூறினாலும், ஆணவம் தொனிக்கும் பேச்சுக்களைப் பேசினாலும், இந்த ஏழையினிடத்தில் கருணை காட்டும் பெருமாளே.
கடகட கருவிகள் தப ... கடகட என்று சப்திக்கும் பறைகளின் பேரொலியும் அடங்குமாறு வகிர் அதிர் ... வரிப்புலிகளின் ஒலி அதிர்கின்ற கதிர் காம ... கதிர்காமத்துக் கடவுளே, தரங்கம் அலைவீரா ... அலைகள் வீசும் கடலினை உனது வேலால் அலைவுறச் செய்த வீரனே, கனகத நககுலி ... பெருமையையும் கோபத்தையும் உடைய மலை போன்ற யானை வளர்த்த தேவயானையை புணர் இத குண குக ... மணந்த இனிய குணத்தோனே, என் இதய குகையில் இருக்கும் குகனே, காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட ... மன்மதனின் தந்தை திருமால் பயப்பட, பிரம்மா ஓடிட, வடசிகரகிரி தவிடுபட நடமிடு ... வட மேரு மலைச் சிகரம் தவிடுபொடியாக நடனம் செய்யும் மாவிற் புகுங்கந்த ... குதிரை போன்ற மயில் மீது ஏறி வருகின்ற கந்தக் கடவுளே, வழாது வழிவழி தமரென ... தவறாமல் வழிவழியாக வந்த உறவினன் என்னும்படி யான் வழிபடுகிலன் ... வழிபடுகின்றவனாக இல்லேன் எனினும் என் அவா விக்கினம் பொன்றிடுமோதான் ... எனது மூவாசைகளும் துன்பங்களும் அழிந்து ஒழிந்திடுமோ? அடவியிருடி அபிநவ குமரியடிமையாய ... காட்டில் சிவமுனிவர் உருவத்தில் தவத்திலிருந்த ரிஷியின்அற்புதப் புதுமையான குமாரி வள்ளிக்கு அடிமையாகிச் சென்று புனஞ்சென்று அயர்வோனே ... அவள் இருந்த தினைப்புனத்துக்குப் போய், தளர்ச்சி அடைந்தவனே, அவசமுடன் அ ததி திரிதரு கவியாள ... மயக்கத்துடன் ஒருநாள் காட்டிலே திரிந்து கொண்டிருந்த கவியாகிய பொய்யாமொழிப் புலவரை ஆண்டருள அயில் புயங்கொண்டு அருள்வோனே ... வேலினைத் தோளில் ஏந்திச் சென்று அருள் புரிந்தவனே, இடமொரு மரகத மயில்மிசை வடிவுள ... தம் உடலின் இடது பாகத்தில் ஓர் மரகத மயிலை மிஞ்சிய அழகுள்ள ஏழைக்கு இடங்கண்டவர்வாழ்வே ... ஏந்திழையாம் பார்வதிக்கு இடம் தந்தவரான சிவபிரானின் செல்வனே, இதமொழி பகரினு மதமொழி பகரினும் ... அடியேன் இனிய மொழிகளைக் கூறினாலும், ஆணவம் தொனிக்கும் பேச்சுக்களைப் பேசினாலும், ஏழைக்கு இரங்கும் பெருமாளே. ... இந்த ஏழையினிடத்தில் கருணை காட்டும் பெருமாளே.