சரியையாளர்க்கும் அக் கிரியையாளர்க்கும் நல் சகல யோகர்க்கும் எட்ட அரிதாய
சமய பேதத்தினுக்கு அணுக ஒணா மெய்ப் பொருள் தரு பரா சத்தியின் பரமான
துரிய மேல் அற்புதப் பரம ஞானத் தனிச் சுடர் வியாபித்த
நல் பதி நீடு துகள் இல் சாயுச்சியக் கதியை
ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று அடைவேனோ
புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத் புருஷ
வீரத்து விக்ரம சூரன் புரள வேல் தொட்ட கைக் குமர
மேன்மைத் திருப் புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே
கரிய ஊகத் திரள் பலவின் மீதில் சுளைக் கனிகள் பீறிப் புசித்து அமர் ஆடி
கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில்
கதிர காமக் கிரிப் பெருமாளே.
சரியை மார்க்கத்தில் இருப்பவர்களுக்கும், அந்தக் கிரியை மார்க்கத்தில் இருப்பவர்களுக்கும், நல்ல எல்லாவித யோக நிலையில் இருப்பவர்களுக்கும் எட்டுதற்கு முடியாததும், வேறுபட்ட சமயங்களினால் நெருங்க முடியாததுமான உண்மை ஞானத்தைத் தர வல்ல பராசக்தியினும் மேலானதானதும், யோகியர் தன்மயமாய் நிற்பதுவும், அதற்கும் மேம்பட்டதான துரியாதீத நிலையானதும் ஆகி, பரம ஞானத் தனி ஒளியாகப் பரந்துள்ளதாய், சிறந்த இடமாய், குற்றமில்லாததாய், இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை, முடிவில்லாததும், புகழப்படுவதுமான பேரின்ப நிலையை, நான் பொருந்தி அடைவேனோ? மதில் சூழ்ந்துள்ள வயலூருக்கு உரிய வல்லவனே, உத்தமனே, வீரமும் வலிமையும் கொண்ட சூரன் புரண்டு விழ, வேலைச் செலுத்திய திருக்கரத்தை உடைய குமரனே, மேன்மை பொருந்திய திருப்புகழை ஓதுவதற்கு எனக்கு அருள் செய்தவனே, கருங்குரங்குகளின் கூட்டங்கள் பலா மரத்தின் மீது இருந்து சுளைப் பழங்களைக் கீறிக் கிழித்து உண்டு சண்டை இட்டு, வாழை மரங்களிலும், மாமரங்களிலும் நெருங்கி விளையாடும் ஈழ நாட்டில் உள்ள கதிர்காம மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.