மங்கைக் கணவனும் வாழ் சிவணா மயல் பங்கப்பட மிசையே பனி போல் மதம் வந்து உள் பெருகிடவே
விதியானவன் அருள் மேவி வண்டுத் தடிகை பொ(போ)ல் ஆகியே நாள் பல பந்துப் பனை பழமோடு இள நீர் குடம் மண்டிப் பல பலவாய்
வினை கோலும் அவ்வழியாலே திங்கள் ப(த்)து செலவே தலை கீழ் உற வந்துப் புவி தனிலே மதலாய் என சிந்தைக் குழவி எனா அ(ன்)னை தாதையும் அருள் கூர
செம் பொன் தட முலை பால் குடி நாள் பல பண்புத் தவழ் நடை போய் விதமாய் பல சிங்கிப் பெரு விழியார் அவமாய் அதில் அழிவேனோ
அம் கைத்து அரி எனவே ஒரு பாலகனின் இன்பக் கிருபையதாய் ஒரு தூண் மிசை அம் பல் கொ(ண்)டு அரியாய் இரண்ய அசுரன் உடல் பீறி
அண்டர்க்கு அருள் பெருமான் முதிரா அணி சங்குத் திகிரிகரோன் அரி நார அரங்கத்து இரு அணை மேல் துயில் நாரணன் மருகோனே
கங்கைச் சடை முடியோன் இடம் மேவிய தங்கப் பவள ஒளி பால் மதி போல் முக கங்குல் தரி குழலாள் பரமேசுரி அருள் பாலா
கந்துப் பரி மயில் வாகன மீது இரு கொங்கைக் குற மகள் ஆசையொடே மகிழ் கங்கைப் பதி நதி காசியில் மேவிய பெருமாளே.
ஒரு பெண்ணும் அவளுடைய கணவனும் வாழ்ந்து பொருந்தி, காம இச்சை என்னும் ஒரு உந்துதல் தம் மீது அடைய, (அதன் விளைவாக) பனி போல சுக்கிலம் தோன்றி உள்ளே பரவ, பிரமனது அருள் கூடி (கருவானது) வண்டு தடித்து வளருவது போல் தடித்து, நாள் பல செல்ல, பந்தின் அளவாகி, பனம் பழத்தின் அளவாகி, இள நீர் போலவும், குடம் போலவும் நெருங்கி வளர்ந்து, பின்னும் பல பல வளர்ச்சியுடன், புணர்தல் செய்த அந்த இடத்தின் வழியாக, மாதங்கள் பத்து கழிந்த பின் தலை கீழாக வந்து பூமியில் பிறந்து, மகன் எனப் பேர் பெற்று, மனதுக்கு இனிய குழந்தையாகி, தாயும் தந்தையும் அன்பு மிகுந்து ஆதரிக்க, செவ்விய பொலிவுள்ள பருத்த முலையில் பாலைக் குடிக்கின்ற நாட்கள் பல செல்ல, பின்பு அழகிய தவழ் நடை நாட்களும் செல்ல, பல விதமான விஷம் போன்ற பெரிய கண்களை உடைய விலைமாதர்களோடு பொழுது போக்கும் பயனற்ற வாழ்க்கையில் அழிந்து போவேனோ? உள்ளங்கை நெல்லிக் கனி போல எளிதில் புலப்படுவான் (இறைவன்) என்று ஒரு பிள்ளையாகிய பிரகலாதன் கூற, இன்ப அன்புடனே ஒரு தூணிலிருந்து அழகிய பற்களைக் கொண்டு நரசிங்கமாய்த் தோன்றி, இரணியாசுரனுடைய உடலைக் கிழித்து, தேவர்களுக்கு உதவி செய்த பெருமான், தம்மை விட்டு நீங்காத ஆபரணங்களான பஞ்ச ஜன்யம் என்னும் சங்கும், சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் திருக் கரத்தில் கொண்டவன், (காவிரி, கொள்ளிடம் என்னும்) நதியின் கரையில் உள்ள ஸ்ரீரங்கம் என்னும் தலத்தில் (ஆதிசேஷன் என்னும்) பெரிய படுக்கை மேல் பள்ளி கொள்ளும் திருமாலின் மருகனே, கங்கையைச் சடையில் தரித்துள்ள சிவபெருமானுடைய இடது பக்கத்தில் பொருந்தியுள்ளவளும், தங்கம், பவளம் இவைகளின் ஒளியைக் கொண்டவளும், பால் நிறத்து வெண் மதியைப் போல் திரு முகம் கொண்டவளும், இருள் கொண்ட கூந்தலை உடையவளுமாகிய பரமேஸ்வரி அருளிய குழந்தையே, பாய வல்ல குதிரை போன்ற மயில் வாகனத்தின் மேல், இரண்டு மார்பகங்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் ஆசையோடு மகிழ்கின்றவனே, கங்கை நதிக் கரையில் உள்ள தலமாகிய காசியில் வீற்றிருக்கும் பெருமாளே.
மங்கைக் கணவனும் வாழ் சிவணா மயல் பங்கப்பட மிசையே பனி போல் மதம் வந்து உள் பெருகிடவே ... ஒரு பெண்ணும் அவளுடைய கணவனும் வாழ்ந்து பொருந்தி, காம இச்சை என்னும் ஒரு உந்துதல் தம் மீது அடைய, (அதன் விளைவாக) பனி போல சுக்கிலம் தோன்றி உள்ளே பரவ, விதியானவன் அருள் மேவி வண்டுத் தடிகை பொ(போ)ல் ஆகியே நாள் பல பந்துப் பனை பழமோடு இள நீர் குடம் மண்டிப் பல பலவாய் ... பிரமனது அருள் கூடி (கருவானது) வண்டு தடித்து வளருவது போல் தடித்து, நாள் பல செல்ல, பந்தின் அளவாகி, பனம் பழத்தின் அளவாகி, இள நீர் போலவும், குடம் போலவும் நெருங்கி வளர்ந்து, பின்னும் பல பல வளர்ச்சியுடன், வினை கோலும் அவ்வழியாலே திங்கள் ப(த்)து செலவே தலை கீழ் உற வந்துப் புவி தனிலே மதலாய் என சிந்தைக் குழவி எனா அ(ன்)னை தாதையும் அருள் கூர ... புணர்தல் செய்த அந்த இடத்தின் வழியாக, மாதங்கள் பத்து கழிந்த பின் தலை கீழாக வந்து பூமியில் பிறந்து, மகன் எனப் பேர் பெற்று, மனதுக்கு இனிய குழந்தையாகி, தாயும் தந்தையும் அன்பு மிகுந்து ஆதரிக்க, செம் பொன் தட முலை பால் குடி நாள் பல பண்புத் தவழ் நடை போய் விதமாய் பல சிங்கிப் பெரு விழியார் அவமாய் அதில் அழிவேனோ ... செவ்விய பொலிவுள்ள பருத்த முலையில் பாலைக் குடிக்கின்ற நாட்கள் பல செல்ல, பின்பு அழகிய தவழ் நடை நாட்களும் செல்ல, பல விதமான விஷம் போன்ற பெரிய கண்களை உடைய விலைமாதர்களோடு பொழுது போக்கும் பயனற்ற வாழ்க்கையில் அழிந்து போவேனோ? அம் கைத்து அரி எனவே ஒரு பாலகனின் இன்பக் கிருபையதாய் ஒரு தூண் மிசை அம் பல் கொ(ண்)டு அரியாய் இரண்ய அசுரன் உடல் பீறி ... உள்ளங்கை நெல்லிக் கனி போல எளிதில் புலப்படுவான் (இறைவன்) என்று ஒரு பிள்ளையாகிய பிரகலாதன் கூற, இன்ப அன்புடனே ஒரு தூணிலிருந்து அழகிய பற்களைக் கொண்டு நரசிங்கமாய்த் தோன்றி, இரணியாசுரனுடைய உடலைக் கிழித்து, அண்டர்க்கு அருள் பெருமான் முதிரா அணி சங்குத் திகிரிகரோன் அரி நார அரங்கத்து இரு அணை மேல் துயில் நாரணன் மருகோனே ... தேவர்களுக்கு உதவி செய்த பெருமான், தம்மை விட்டு நீங்காத ஆபரணங்களான பஞ்ச ஜன்யம் என்னும் சங்கும், சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் திருக் கரத்தில் கொண்டவன், (காவிரி, கொள்ளிடம் என்னும்) நதியின் கரையில் உள்ள ஸ்ரீரங்கம் என்னும் தலத்தில் (ஆதிசேஷன் என்னும்) பெரிய படுக்கை மேல் பள்ளி கொள்ளும் திருமாலின் மருகனே, கங்கைச் சடை முடியோன் இடம் மேவிய தங்கப் பவள ஒளி பால் மதி போல் முக கங்குல் தரி குழலாள் பரமேசுரி அருள் பாலா ... கங்கையைச் சடையில் தரித்துள்ள சிவபெருமானுடைய இடது பக்கத்தில் பொருந்தியுள்ளவளும், தங்கம், பவளம் இவைகளின் ஒளியைக் கொண்டவளும், பால் நிறத்து வெண் மதியைப் போல் திரு முகம் கொண்டவளும், இருள் கொண்ட கூந்தலை உடையவளுமாகிய பரமேஸ்வரி அருளிய குழந்தையே, கந்துப் பரி மயில் வாகன மீது இரு கொங்கைக் குற மகள் ஆசையொடே மகிழ் கங்கைப் பதி நதி காசியில் மேவிய பெருமாளே. ... பாய வல்ல குதிரை போன்ற மயில் வாகனத்தின் மேல், இரண்டு மார்பகங்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் ஆசையோடு மகிழ்கின்றவனே, கங்கை நதிக் கரையில் உள்ள தலமாகிய காசியில் வீற்றிருக்கும் பெருமாளே.