அஷ்ட கிரிகளும் பொடிபடும்படியாக நடனமாடும் கலாப மயில், அன்றலர்ந்த புதிய கடப்பமலர், சிறிய வாள், வேல், ஆறு திருமுகங்களின் சேர்க்கையாம் நூறு இதழ்கள் உள்ள தாமரைகள், திவ்யமான கரத்திலே பொருந்திய போர் செய்யவல்ல சேவல், (இவையெல்லாம் விளங்க) அகில் மரத்தின் வேரைப் பறித்து எறியும் அலைவீசும் அருவிகள் உள்ள, நெல் விளையும் வள்ளிமலையின் வஞ்சிக்கொடியனன வள்ளியின் கணவா, என்று உலகெலாம் உணரக் கூறும் சொற்களால் அல்லது உனது அழகிய திருவடிகளைப் பெற முடியுமோ? ஒப்பிடற்கு அரியரான சிவபிரானின் சேயே, பரமனே, வாக்குக்கு எட்டாததான பிரணவ உபதேசத்தைச் செய்த குருநாதனே, பசுக்கூட்டங்களைக் கொண்ட இடையர்கள் செல்லும் வழியில் உள்ள பழைய நெல்லி மரத்தின் கீழே வீற்றிருந்த அழகனே, ஆயிரம் முகங்களோடு ஓடும் ஆகாய கங்கை நதியையும், பிறையையும், கொன்றையையும், வில்வத்தையும் சடையில் முடித்த நம் சிவபெருமானின் பெருஞ் செல்வமே, மலர்ந்த தாமரைகளும், நறுமணம் மிகுந்த தாமரைகளும் நிறைந்த வெள்ளிகரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.