குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முக(ம்) மீதே குறு வியர்வு உலாவ
அமுதின் இனிதான குதலையும் ஒர் ஆறு படவே தான் பல வித விநோதமுடன் உபய பாத பரிபுரமும் ஆட அணை மீதே
பரிவு தரும் ஆசை விட மனம் ஒ(வ்)வாத ப(பா)தகனையும் ஆள நினைவாயே
சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான குமரேசா
திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழு ஏற வருவோனே
க(ல்)லின் வடிவமான அகலிகை பெ(ண்)ணான கமல பத மாயன் மருகோனே
கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு பெருமாளே.
கூந்தலின் மயிர் குலைந்து போக, கண்கள் குவிய, விளக்கத்துடன் கோழி முதலிய பறவைகளின் புட்குரல் இசை பாடி, முகத்தின் மேல் சிறு வியர்வை தோன்ற, அமுதம் போல் இனிமை கொண்ட குதலைச் சொற்களும் ஒரு வழியாக ஆறு போலப் பெருகவே, பல விதமான விநோதங்களுடன் இரண்டு கால்களிலும் உள்ள சிலம்புகளும் அசைந்து ஒலிக்க படுக்கையின் மேல் அன்பு எழுகின்ற ஆசையை விடுவதற்கு மனம் ஒத்துக் கொள்ளாத இந்தப் பாதகனையும் ஆண்டருள நினைந்து அருளுவாயாக. வில்லாக மேரு மலையைக் கொண்ட மேலான சிவபெருமான் ஈன்ற புதல்வனே, மயிலைக் குதிரையாகக் கொண்ட குமரேசனே, அழகிய மதுரையில் இருந்த சமணர் குலமான திருடர்களை கழுவில் ஏற்ற (திருஞானசம்பந்தராக) வந்தவனே, கல் வடிவமாகக் கிடந்த அகலிகை பெண்ணாக வரும்படிச் செய்த தாமரை மலர் போன்ற திருவடியை உள்ள திருமாலின் மருகனே, கழனியில் இருக்கும் பெரிய வாளை மீன்கள் கமுக மரம் ஒடிந்து விழும்படி மோதுகின்ற கரபுரமாகிய விரிஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முக(ம்) மீதே குறு வியர்வு உலாவ ... கூந்தலின் மயிர் குலைந்து போக, கண்கள் குவிய, விளக்கத்துடன் கோழி முதலிய பறவைகளின் புட்குரல் இசை பாடி, முகத்தின் மேல் சிறு வியர்வை தோன்ற, அமுதின் இனிதான குதலையும் ஒர் ஆறு படவே தான் பல வித விநோதமுடன் உபய பாத பரிபுரமும் ஆட அணை மீதே ... அமுதம் போல் இனிமை கொண்ட குதலைச் சொற்களும் ஒரு வழியாக ஆறு போலப் பெருகவே, பல விதமான விநோதங்களுடன் இரண்டு கால்களிலும் உள்ள சிலம்புகளும் அசைந்து ஒலிக்க படுக்கையின் மேல் அன்பு எழுகின்ற ஆசையை பரிவு தரும் ஆசை விட மனம் ஒ(வ்)வாத ப(பா)தகனையும் ஆள நினைவாயே ... விடுவதற்கு மனம் ஒத்துக் கொள்ளாத இந்தப் பாதகனையும் ஆண்டருள நினைந்து அருளுவாயாக. சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான குமரேசா ... வில்லாக மேரு மலையைக் கொண்ட மேலான சிவபெருமான் ஈன்ற புதல்வனே, மயிலைக் குதிரையாகக் கொண்ட குமரேசனே, திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழு ஏற வருவோனே ... அழகிய மதுரையில் இருந்த சமணர் குலமான திருடர்களை கழுவில் ஏற்ற (திருஞானசம்பந்தராக) வந்தவனே, க(ல்)லின் வடிவமான அகலிகை பெ(ண்)ணான கமல பத மாயன் மருகோனே ... கல் வடிவமாகக் கிடந்த அகலிகை பெண்ணாக வரும்படிச் செய்த தாமரை மலர் போன்ற திருவடியை உள்ள திருமாலின் மருகனே, கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு பெருமாளே. ... கழனியில் இருக்கும் பெரிய வாளை மீன்கள் கமுக மரம் ஒடிந்து விழும்படி மோதுகின்ற கரபுரமாகிய விரிஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.