தனன தந்த தான தனன தந்த தான தனன தந்த தான ...... தனதான
மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது மலமி தென்று போட ...... அறியாது மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும் வகையில் வந்தி ராத ...... அடியேனும் உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும் உலக மென்று பேச ......அறியாத உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர உபய துங்க பாத ...... மருள்வாயே அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும் அடிப ணிந்து பேசி ...... கடையூடே அருளு கென்ற போது பொருளி தென்று காண அருளு மைந்த ஆதி ...... குருநாதா திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர் செருவ டங்க வேலை ...... விடுவோனே செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி திருவி ரிஞ்சை மேவு ...... பெருமாளே.
மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது
மலமி தென்று போட அறியாது
மயல்கொள் இந்த வாழ்வு அமையும்
எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும்
உருகி யன்பினோடு உனைநினைந்து நாளும்
உலக மென்று பேச அறியாத
உருவ மொன்றிலாத பருவம் வந்து சேர
உபய துங்க பாதமருள்வாயே
அரிவிரிஞ்சர் தேட அரிய தம்பிரானும்
அடிப ணிந்து பேசி
கடையூடே அருளு கென்ற போது
பொருளி தென்று காண
அருளு மைந்த ஆதி குருநாதா
திரியு மும்பர் நீடு கிரிபிளந்து
சூரர் செருவடங்க வேலை விடுவோனே
செயல மைந்த வேத தொனிமுழங்கு வீதி
திருவி ரிஞ்சை மேவு பெருமாளே.
பொருந்திய மண், நீர், தீ, காற்று, வெளி என்ற ஐந்து பூதங்களுக்குச் சொந்தம் ஆகாத வண்ணம் இந்த உடலை அழுக்கு என்று உதறிப் போடத் தெரியாமல் மயக்கம் நிறைந்த இந்த வாழ்வு போதுமே என்று எப்போதும் அவ்வெண்ணம் நன்கு மனத்தில் தோன்றாத நானும், உள்ளம் உருகி அன்போடு தினமும் உன்னை நினைத்து, உலக விஷயங்களைப் பேசும் பேச்சே பேச அறியாத இவ்வடிவம்தான் இது என்ற கூற இயலாத நிலையை நான் அடைய உன் இரண்டு பரிசுத்தமான பாதங்களை எனக்கு நீ தந்தருள்வாயாக. திருமாலும் பிரமனும் தேடுதற்கு அரியவரான தம்பிரான் சிவபிரானும் உனது திருவடிகளில் பணிந்து பேசி, இறுதியில் அந்தப் பிரணவப் பொருளை எனக்கு அருள்க என்று கேட்க இதுதான் பொருள் என்று அவர் உணரும்படியாக உபதேசித்து அருளிய குமரனே, அந்த ஆதிசிவனுக்கும் குருநாதனே, சூரன் செல்லும் இடமெல்லாம் திரியும் விண் அளாவிய நீண்ட ஏழு மலைகளையும் பிளந்து, அசுரர்களின் போர் ஒடுங்குமாறு வேலாயுதத்தைச் செலுத்தியவனே, ஒழுங்காக ஓதப்படும் வேதத்தின் ஒலி முழங்கும் வீதியைக் கொண்ட திரிவிரிஞ்சைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது ... பொருந்திய மண், நீர், தீ, காற்று, வெளி என்ற ஐந்து பூதங்களுக்குச் சொந்தம் ஆகாத வண்ணம் மலமி தென்று போட அறியாது ... இந்த உடலை அழுக்கு என்று உதறிப் போடத் தெரியாமல் மயல்கொள் இந்த வாழ்வு அமையும் ... மயக்கம் நிறைந்த இந்த வாழ்வு போதுமே என்று எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும் ... எப்போதும் அவ்வெண்ணம் நன்கு மனத்தில் தோன்றாத நானும், உருகி யன்பினோடு உனைநினைந்து நாளும் ... உள்ளம் உருகி அன்போடு தினமும் உன்னை நினைத்து, உலக மென்று பேச அறியாத ... உலக விஷயங்களைப் பேசும் பேச்சே பேச அறியாத உருவ மொன்றிலாத பருவம் வந்து சேர ... இவ்வடிவம்தான் இது என்ற கூற இயலாத நிலையை நான் அடைய உபய துங்க பாதமருள்வாயே ... உன் இரண்டு பரிசுத்தமான பாதங்களை எனக்கு நீ தந்தருள்வாயாக. அரிவிரிஞ்சர் தேட அரிய தம்பிரானும் ... திருமாலும் பிரமனும் தேடுதற்கு அரியவரான தம்பிரான் சிவபிரானும் அடிப ணிந்து பேசி ... உனது திருவடிகளில் பணிந்து பேசி, கடையூடே அருளு கென்ற போது ... இறுதியில் அந்தப் பிரணவப் பொருளை எனக்கு அருள்க என்று கேட்க பொருளி தென்று காண ... இதுதான் பொருள் என்று அவர் உணரும்படியாக அருளு மைந்த ஆதி குருநாதா ... உபதேசித்து அருளிய குமரனே, அந்த ஆதிசிவனுக்கும் குருநாதனே, திரியு மும்பர் நீடு கிரிபிளந்து ... சூரன் செல்லும் இடமெல்லாம் திரியும் விண் அளாவிய நீண்ட ஏழு மலைகளையும் பிளந்து, சூரர் செருவடங்க வேலை விடுவோனே ... அசுரர்களின் போர் ஒடுங்குமாறு வேலாயுதத்தைச் செலுத்தியவனே, செயல மைந்த வேத தொனிமுழங்கு வீதி ... ஒழுங்காக ஓதப்படும் வேதத்தின் ஒலி முழங்கும் வீதியைக் கொண்ட திருவி ரிஞ்சை மேவு பெருமாளே. ... திரிவிரிஞ்சைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.