கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள்
கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே கசிவு ஆரும் கீறுகி(ள்)ளால் உறு வசை காணும் காளிம வீணிகள்
களி கூறும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் மனம் ஏல் அம் கீல(க) கலாவிகள் மயமாயம் கீத விநோதிகள்
மருள் ஆரும் காதலர் மேல் விழு(ம்) மகளீர் வில் மதி மாடம் வான் நிகழ்வார் மிசை மகிழ் கூரும் பாழ் மனமாம்
உன மலர் பேணும் தாள் உ(ன்)னவே அருள் அருளாயோ
தனதானந் தானன தானன என வேதம் கூறு சொல் மீறு அளி ததை சேர் தண் பூ மண மாலிகை அணி மார்பா
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெரு வாழ்வே
தினம் ஆம் அன்பா(ய்) புன(ம்) மேவிய தனி மானின் தோள் உடன் ஆடிய தினை மா இன்பா உயர் தேவர்கள் தலை வாமா
திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்க(மே)ச நடேசுரர் திருவாலங்காடினில் வீறிய பெருமாளே.
பெருத்த, கொடிய விஷம் மிக்குள்ள கண்களை உடைய விலைமாதர்கள், மனத்தில் வஞ்சனையுடன் பசப்பி நடிப்பு வண்ணம் மிகுந்த பழிகாரிகள். மிகுந்த போக சுகத்தைத் தரக் கூடியதும், தாமரை மொட்டுக்கு ஒப்பதானதுமான மார்பின் மீதே அன்பு மிகுதிக்கு அடையாளமாக கீறல்களாலும் கிள்ளுதலின் குறிகளாலும் பழிப்புக்கு இடம் தரும் களிம்பைத் தடவும் வீணிகள். ஆவேசத்தைத் தருகின்ற, தீய வெறித் தன்மையைக் கொடுக்கும் மாமிச உணவைத் தருகின்ற, அசுத்தர்கள். மனத்தில் பொருந்திய சூழ்ச்சி நிறைந்த அழகிய தந்திரவாதிகள், மாயம் நிறைந்த இசையில் இன்பம் கொள்பவர்கள். காம மயக்கம் நிறைந்த காதல் செய்பவர்கள். தம் மீது மோகம் கொண்டு வந்தவர்கள் மேலே விழுகின்ற பொது மகளிர். ஒளி பொருந்திய மேல் மாடம் உள்ள (உப்பரிகை உள்ள) வீடுகளில் நிலவையும் வானத்தையும் அளாவி விளங்க இருப்பவர்கள் மீது மகிழ்ச்சி நிரம்பக் கொள்ளும் பாழான மனம் இது. உன்னுடைய தாமரை மலரை ஒத்த திருவடியை தியானிக்கவே உனது திருவருளைப் பாலிக்க மாட்டாயோ? தனதானந் தானன தானன என்று வேதம் ஓதுவோரது சொல்லொலியினும் மிகுந்ததான ஒலியுடன் வண்டுகள் நிறைந்து சேர்ந்துள்ள குளிர்ந்த பூக்களாலான நறு மணம் கொண்ட மாலைகளை அணிந்த மார்பனே, நொறுங்குதலும் அழிவும் அப்போது நிறையச் செய்த ஆட்டின் மேல் வாகனமாக ஏறி அமர்ந்த குக வீரனே, தேவி பார்வதியின் குமாரனே, மிக்க மேம்பாடு நிறைந்த அடியார்கள் மகிழ்கின்ற பெரும் செல்வமே, தினந்தோறும் உன் மீது கொண்ட அன்புடன் தினைப் புனத்தில் இருந்த ஒப்பற்ற மான் போன்ற (வள்ளியின்) தோளுடன் விளையாடியவனே, தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தேவர்களின் தலைவனான அழகனே, திகழ்கின்ற வேடத்துடன் காளியுடன் நடனம் ஆடின உலகத்துக்கு ஈசனும் சங்க மேசனும் ஆகிய நடேசப் பெருமானுடைய தலமாகிய திருவாலங்காட்டில் விளங்கி நிற்கும் பெருமாளே.
கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள் ... பெருத்த, கொடிய விஷம் மிக்குள்ள கண்களை உடைய விலைமாதர்கள், மனத்தில் வஞ்சனையுடன் பசப்பி நடிப்பு வண்ணம் மிகுந்த பழிகாரிகள். கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே கசிவு ஆரும் கீறுகி(ள்)ளால் உறு வசை காணும் காளிம வீணிகள் ... மிகுந்த போக சுகத்தைத் தரக் கூடியதும், தாமரை மொட்டுக்கு ஒப்பதானதுமான மார்பின் மீதே அன்பு மிகுதிக்கு அடையாளமாக கீறல்களாலும் கிள்ளுதலின் குறிகளாலும் பழிப்புக்கு இடம் தரும் களிம்பைத் தடவும் வீணிகள். களி கூறும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் மனம் ஏல் அம் கீல(க) கலாவிகள் மயமாயம் கீத விநோதிகள் ... ஆவேசத்தைத் தருகின்ற, தீய வெறித் தன்மையைக் கொடுக்கும் மாமிச உணவைத் தருகின்ற, அசுத்தர்கள். மனத்தில் பொருந்திய சூழ்ச்சி நிறைந்த அழகிய தந்திரவாதிகள், மாயம் நிறைந்த இசையில் இன்பம் கொள்பவர்கள். மருள் ஆரும் காதலர் மேல் விழு(ம்) மகளீர் வில் மதி மாடம் வான் நிகழ்வார் மிசை மகிழ் கூரும் பாழ் மனமாம் ... காம மயக்கம் நிறைந்த காதல் செய்பவர்கள். தம் மீது மோகம் கொண்டு வந்தவர்கள் மேலே விழுகின்ற பொது மகளிர். ஒளி பொருந்திய மேல் மாடம் உள்ள (உப்பரிகை உள்ள) வீடுகளில் நிலவையும் வானத்தையும் அளாவி விளங்க இருப்பவர்கள் மீது மகிழ்ச்சி நிரம்பக் கொள்ளும் பாழான மனம் இது. உன மலர் பேணும் தாள் உ(ன்)னவே அருள் அருளாயோ ... உன்னுடைய தாமரை மலரை ஒத்த திருவடியை தியானிக்கவே உனது திருவருளைப் பாலிக்க மாட்டாயோ? தனதானந் தானன தானன என வேதம் கூறு சொல் மீறு அளி ததை சேர் தண் பூ மண மாலிகை அணி மார்பா ... தனதானந் தானன தானன என்று வேதம் ஓதுவோரது சொல்லொலியினும் மிகுந்ததான ஒலியுடன் வண்டுகள் நிறைந்து சேர்ந்துள்ள குளிர்ந்த பூக்களாலான நறு மணம் கொண்ட மாலைகளை அணிந்த மார்பனே, தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெரு வாழ்வே ... நொறுங்குதலும் அழிவும் அப்போது நிறையச் செய்த ஆட்டின் மேல் வாகனமாக ஏறி அமர்ந்த குக வீரனே, தேவி பார்வதியின் குமாரனே, மிக்க மேம்பாடு நிறைந்த அடியார்கள் மகிழ்கின்ற பெரும் செல்வமே, தினம் ஆம் அன்பா(ய்) புன(ம்) மேவிய தனி மானின் தோள் உடன் ஆடிய தினை மா இன்பா உயர் தேவர்கள் தலை வாமா ... தினந்தோறும் உன் மீது கொண்ட அன்புடன் தினைப் புனத்தில் இருந்த ஒப்பற்ற மான் போன்ற (வள்ளியின்) தோளுடன் விளையாடியவனே, தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தேவர்களின் தலைவனான அழகனே, திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்க(மே)ச நடேசுரர் திருவாலங்காடினில் வீறிய பெருமாளே. ... திகழ்கின்ற வேடத்துடன் காளியுடன் நடனம் ஆடின உலகத்துக்கு ஈசனும் சங்க மேசனும் ஆகிய நடேசப் பெருமானுடைய தலமாகிய திருவாலங்காட்டில் விளங்கி நிற்கும் பெருமாளே.