வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர
விடு தூதன் கோட்டி விடு பாசம்
மகனொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு
மதி கெட மாயம் தீட்டி உயிர் போ முன்
படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற
பழ வினை பாவம் தீர்த்து அடியேனை
பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த
பர புகழ் பாடு என்று ஆட் கொண்டு அருள்வாயே
முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில்
முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே
முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி
முதல் மற மானின் சேர்க்கை மயல் கூர்வாய்
இடி என வேகம் காட்டி நெடிதரு சூலம் தீட்டி
எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி
இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி
இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே.
உடலின் நிறத்தை கருநீலமாகக் காட்டி, முடிவு காலத்தில் வரும் யமன்அழைத்து வர அனுப்புகின்ற அவனுடைய தூதன் வளைத்து எறிகின்ற பாசக் கயிற்றினால் (மரணம் அடைகின்ற பொழுது), மகனும், மாமன், பாட்டி முதலான உறவினர்களும் (மரண நிலையைக்) கேட்டு புத்தி கலங்கும்படி, உலக மாயை அதிகமாகி உயிர் போவதற்கு முன்பு, இந்தப் பூமியில் உனது திருவடிகளைக் காட்டி, உடலுக்கு ஏற்பட்ட நோய்கள், முன் செய்த கர்மப் பயனால் அடைந்துள்ள பழைய வினைகளாகிய பாவங்களை ஒழித்து, உனது அடியேனாகிய என்னை அன்புடன் நாள்தோறும் காத்தளித்து, விரிந்த அழகிய தமிழ் மொழியால் அழகு மிக்க மேலான திருப்புகழைப் பாடுவாயாக என்று ஆட்கொண்டு அருள் புரிவாயாக. தலையில் சந்திரனைத் தரித்து, அழகுள்ள திருவாலங்காடு என்னும் ஊரில் முதன்மையான நடனம் ஆடுகின்ற கூத்தர் நடராஜனின் மகனே, நறுமணம் கமழும் மாலையையும் சூட்டி, ஒப்பற்றுத் தனித்து வர யானையையும் (விநாயகரையும்) வரவழைத்து முன்பு, வேடர்குலப் பெண்ணாகிய வள்ளியோடு சேர்தலில் மோகம் மிக்கவனே, இடியைப் போல வேகத்தைக் காட்டி, புலால் நாற்றம் கொண்ட சூலாயுதத்தைக் கையில் எடுத்து, எதிர்த்து வந்த சூரன் சண்டைக்கு வர, அவனை எதிர்த்துச் சென்று விளங்குகின்ற வேலாயுதத்தை ஆரவாரத்துடன் செலுத்தி, அவன் உடலை இரண்டு பிளவாக அன்று ஆக்கி, தேவர்களுடைய துன்பத்தை நீக்கிய பெருமாளே.
வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன் ... உடலின் நிறத்தை கருநீலமாகக் காட்டி, முடிவு காலத்தில் வரும் யமன்அழைத்து வர அனுப்புகின்ற அவனுடைய தூதன் கோட்டி விடு பாசம் ... வளைத்து எறிகின்ற பாசக் கயிற்றினால் (மரணம் அடைகின்ற பொழுது), மகனொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட ... மகனும், மாமன், பாட்டி முதலான உறவினர்களும் (மரண நிலையைக்) கேட்டு புத்தி கலங்கும்படி, மாயம் தீட்டி உயிர் போ முன் ... உலக மாயை அதிகமாகி உயிர் போவதற்கு முன்பு, படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ வினை பாவம் தீர்த்து ... இந்தப் பூமியில் உனது திருவடிகளைக் காட்டி, உடலுக்கு ஏற்பட்ட நோய்கள், முன் செய்த கர்மப் பயனால் அடைந்துள்ள பழைய வினைகளாகிய பாவங்களை ஒழித்து, அடியேனை பரிவோடு நாளும் காத்து ... உனது அடியேனாகிய என்னை அன்புடன் நாள்தோறும் காத்தளித்து, விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட் கொண்டு அருள்வாயே ... விரிந்த அழகிய தமிழ் மொழியால் அழகு மிக்க மேலான திருப்புகழைப் பாடுவாயாக என்று ஆட்கொண்டு அருள் புரிவாயாக. முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் ... தலையில் சந்திரனைத் தரித்து, அழகுள்ள திருவாலங்காடு என்னும் ஊரில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே ... முதன்மையான நடனம் ஆடுகின்ற கூத்தர் நடராஜனின் மகனே, முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி ... நறுமணம் கமழும் மாலையையும் சூட்டி, ஒப்பற்றுத் தனித்து வர யானையையும் (விநாயகரையும்) வரவழைத்து முதல் மற மானின் சேர்க்கை மயல் கூர்வாய் ... முன்பு, வேடர்குலப் பெண்ணாகிய வள்ளியோடு சேர்தலில் மோகம் மிக்கவனே, இடி என வேகம் காட்டி நெடிதரு சூலம் தீட்டி ... இடியைப் போல வேகத்தைக் காட்டி, புலால் நாற்றம் கொண்ட சூலாயுதத்தைக் கையில் எடுத்து, எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி ... எதிர்த்து வந்த சூரன் சண்டைக்கு வர, அவனை எதிர்த்துச் சென்று இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி ... விளங்குகின்ற வேலாயுதத்தை ஆரவாரத்துடன் செலுத்தி, அவன் உடலை இரண்டு பிளவாக அன்று ஆக்கி, இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே. ... தேவர்களுடைய துன்பத்தை நீக்கிய பெருமாளே.