சோதி மா மதி போல் முகமும் கிளர் மேரு உலாவிய மா முலையும் கொ(ண்)டு
தூரவே வரும் ஆடவர் தங்கள் முன் எதிர் ஆயே சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல்
இரு தோளில் விழுந்து ஒரு சூதினால் வரவே மனை கொண்டு அவருடன் மேவி
மோதியே கனி வாய் அதரம் தரு நாளிலே பொருள் சூறைகள் கொண்டு பின் மோனமாய் அவமே சில சண்டைகளுடன் ஏசி
மோசமே தரு தோதக வம்பியர் மீதிலே மயலாகி மனம் தளர் மோடனாகிய பாதகனும் கதி பெறுவேனோ
ஆதியே எனும் வானவர் தம் பகை ஆன சூரனை மோதி அரும் பொடி ஆகவே மயில் ஏறி முனிந்திடு நெடு வேலா
ஆயர் வாழ் பதி தோறும் உகந்து உரல் ஏறியே உறி மீது அளையும் களவாகவே கொடு போத(ம்) நுகர்ந்தவன் மருகோனே
வாதினால் வரு காளியை வென்றிடும் ஆதி நாயகர் வீறு தயங்கு(ம்) கை வாரி ராசனுமே பணியும் திரு நட பாதர்
வாச மா மலரோனோடு செம் திரு மார்பில் வீறிய மாயவனும் பணி மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே.
ஒளி பொருந்திய சிறந்த நிலவைப் போல முகமும், விளங்கும் மேரு மலை போன்ற பெரிய மார்பையும் கொண்டு, தூரத்தில் வருகின்ற ஆண்களின் முன் எதிர்ப்பட்டு (தங்கள்) வியாபாரப் பேச்சைப் பேசி, நீண்ட நாட்கள் பழகிய பெண்களைப் போல, அவர்களுடைய இரண்டு தோள்களிலும் விழுந்து அணைத்து, ஒரு வஞ்சனைப் பேச்சினால் வரும்படி செய்து, (அவர்களைத் தங்கள்) வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவர்களுடன் பொருந்தி இருந்து, வலிய அணைத்து கொவ்வைக் கனி போன்ற வாய் இதழைத் தருகின்ற நாட்களில் வந்தவர்களுடைய பொருளை எல்லாம் கொள்ளை அடித்து, பின்பு (அவருடைய பொருளைக் கைப்பற்றிய பின்) மெளனமாக இருந்தும், வீணாகச் சில சண்டைகள் போட்டு இகழ்ந்து பேசியும், மோசமே செய்கின்ற வஞ்சனை மிக்க துஷ்டர்கள் மேல் காம இச்சை கொண்டு மனம் தளர்கின்ற மூடனும் பாதகனுமாகிய நான் நற்கதியைப் பெறுவேனோ? ஆதி மூர்த்தியே என்று போற்றிய தேவர்களுடைய பகைவனாகிய சூரனைத் தாக்கி அவனை நன்கு பொடியாகும்படிச் செய்து, மயிலில் ஏறி கோபித்த நெடிய வேலாயுதனே, இடையர்கள் வாழ்ந்திருந்த ஊர்கள் தோறும் மகிழ்ந்து சென்று, உரலில் ஏறி உறி மேல் உள்ள வெண்ணெயை திருட்டுத்தனமாகக் கொண்டு போய் வேண்டிய அளவு உண்டவனாகிய (கண்ணனுடைய) மருகோனே, வாது செய்ய வந்த காளியை வென்ற ஆதி நாயகர், மேலிட்டு விளங்கி கும்பிட்டு வீழும் கைகள் போல் வருகின்ற பெரும் அலைகளை உடைய கடல் அரசனாகிய வருணனும் வணங்கும் அழகிய பாதங்களை உடைய சிவபெருமான், நறு மணமுள்ள சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரமனோடு, அழகிய லக்ஷ்மி மார்பில் விளங்கும் திருமாலும் வணங்கும் (வடதிருமுல்லைவாயில் இறைவராகிய) மாசிலாமணி ஈசர் மகிழ்ந்து அருளிய பெருமாளே.
சோதி மா மதி போல் முகமும் கிளர் மேரு உலாவிய மா முலையும் கொ(ண்)டு ... ஒளி பொருந்திய சிறந்த நிலவைப் போல முகமும், விளங்கும் மேரு மலை போன்ற பெரிய மார்பையும் கொண்டு, தூரவே வரும் ஆடவர் தங்கள் முன் எதிர் ஆயே சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் ... தூரத்தில் வருகின்ற ஆண்களின் முன் எதிர்ப்பட்டு (தங்கள்) வியாபாரப் பேச்சைப் பேசி, நீண்ட நாட்கள் பழகிய பெண்களைப் போல, இரு தோளில் விழுந்து ஒரு சூதினால் வரவே மனை கொண்டு அவருடன் மேவி ... அவர்களுடைய இரண்டு தோள்களிலும் விழுந்து அணைத்து, ஒரு வஞ்சனைப் பேச்சினால் வரும்படி செய்து, (அவர்களைத் தங்கள்) வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவர்களுடன் பொருந்தி இருந்து, மோதியே கனி வாய் அதரம் தரு நாளிலே பொருள் சூறைகள் கொண்டு பின் மோனமாய் அவமே சில சண்டைகளுடன் ஏசி ... வலிய அணைத்து கொவ்வைக் கனி போன்ற வாய் இதழைத் தருகின்ற நாட்களில் வந்தவர்களுடைய பொருளை எல்லாம் கொள்ளை அடித்து, பின்பு (அவருடைய பொருளைக் கைப்பற்றிய பின்) மெளனமாக இருந்தும், வீணாகச் சில சண்டைகள் போட்டு இகழ்ந்து பேசியும், மோசமே தரு தோதக வம்பியர் மீதிலே மயலாகி மனம் தளர் மோடனாகிய பாதகனும் கதி பெறுவேனோ ... மோசமே செய்கின்ற வஞ்சனை மிக்க துஷ்டர்கள் மேல் காம இச்சை கொண்டு மனம் தளர்கின்ற மூடனும் பாதகனுமாகிய நான் நற்கதியைப் பெறுவேனோ? ஆதியே எனும் வானவர் தம் பகை ஆன சூரனை மோதி அரும் பொடி ஆகவே மயில் ஏறி முனிந்திடு நெடு வேலா ... ஆதி மூர்த்தியே என்று போற்றிய தேவர்களுடைய பகைவனாகிய சூரனைத் தாக்கி அவனை நன்கு பொடியாகும்படிச் செய்து, மயிலில் ஏறி கோபித்த நெடிய வேலாயுதனே, ஆயர் வாழ் பதி தோறும் உகந்து உரல் ஏறியே உறி மீது அளையும் களவாகவே கொடு போத(ம்) நுகர்ந்தவன் மருகோனே ... இடையர்கள் வாழ்ந்திருந்த ஊர்கள் தோறும் மகிழ்ந்து சென்று, உரலில் ஏறி உறி மேல் உள்ள வெண்ணெயை திருட்டுத்தனமாகக் கொண்டு போய் வேண்டிய அளவு உண்டவனாகிய (கண்ணனுடைய) மருகோனே, வாதினால் வரு காளியை வென்றிடும் ஆதி நாயகர் வீறு தயங்கு(ம்) கை வாரி ராசனுமே பணியும் திரு நட பாதர் ... வாது செய்ய வந்த காளியை வென்ற ஆதி நாயகர், மேலிட்டு விளங்கி கும்பிட்டு வீழும் கைகள் போல் வருகின்ற பெரும் அலைகளை உடைய கடல் அரசனாகிய வருணனும் வணங்கும் அழகிய பாதங்களை உடைய சிவபெருமான், வாச மா மலரோனோடு செம் திரு மார்பில் வீறிய மாயவனும் பணி மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே. ... நறு மணமுள்ள சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரமனோடு, அழகிய லக்ஷ்மி மார்பில் விளங்கும் திருமாலும் வணங்கும் (வடதிருமுல்லைவாயில் இறைவராகிய) மாசிலாமணி ஈசர் மகிழ்ந்து அருளிய பெருமாளே.