மாறுபட்டு எழும் அலைகள் பெருகிய கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் இம்மையிலுள்ள பிறப்பின் இன்பத்தைப் பெறவும், வருகின்ற துன்பத்தோடு மோதும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகள் நீங்கவும், இணைந்த உன்னிரு பாத மலர்களை மனம் பொருந்த நினையாதவன் யான். இன்பமுற உன் திருவருள் கைகூட உருகித் துதியாதவன் யான். பக்தியால் தளர்ச்சி அடையாதவனும், வணங்காதவனும் யான். உமாதேவியைப் பாகத்தில் வைத்த சிவபிரான் மகிழ்கின்ற குழந்தையே என்று கூறாதவன் யான். திருப்தியே இல்லாத, பேதைமை குறையாதவன் யான். அறிவும், தெளிவும் அறியாதவன் யான். பேச்சற்றுப்போய் மெளன நிலையினில் இருக்காதவன் யான். அழகிய பெண்களின் மயக்கும் எழிலானது மனத்தில் இடம் பிடிக்க, அதனால் துன்பம் அடைகிற அடியேனும், இன்பத்தை நல்கும் உன் அடியார்களுடன் கூடிப் பொருந்தும் திருவருளைத் தரும் உன் கிருபைக்கு ஆளாகும் ஒரு நாளும் கிடைக்குமோ? உயர்ந்த மார்பினளான குறப்பெண் வள்ளி இனிமை அடையுமாறு தோழன் போன்று அவளிடம் நன்மைமிக்க சில பல வார்த்தைகளை அமுதமென அள்ளி வீசி, பேச்சுப் பயின்ற ஆறுமுக வேளே, நிறைந்து விளங்கும் அருள் கொண்ட நீதிமானே, பெருமை நிறைந்த பூரண நிறைவே, தயாள குணமுடையோனே, நிரம்பிய கேள்வி உடையவனே, அடைக்கலம் புகுதற்குரிய இறைவனே, சரவணப்பொய்கையில் தோன்றியவனே, குகனே, சிவபிரானின் ஒளியின் சாரமே, பரனே, அதிக மேன்மை உடையோனே, வேதத்தின் முடிவான பொருளாக விளங்கும் நீதியனே, அகரம் போன்ற முதற்பொருளே, உகர சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே, மமகாரமாகிய ஆணவத்தைத் தகிப்பவனே, சிவமாகிய தூய அறிவே, யகரமாகிய ஜீவாத்மாவில் விளங்குபவனே, அதிகமான அருளே, மிகுந்த ஞானமே, மிகுந்த வல்லமை படைத்த காவற் கோட்டையில் இருந்த பகைமை பூண்ட அசுரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனே, அழகும், விளங்கும் கல்வி ஞானமும், பெருமையும், செழிப்பும் நிலைத்த மயிலாப்பூரில் நாள் தோறும் வீற்றிருக்கும், ஹர ஹர கோஷத்துக்கு உரியவருமான, சிவபிரானின் மைந்தனே, அடியவர்கள்தம் பெருமாளே.