ஆதம் இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா
மதன கலை லீலை யாவும் விளைவான குழியான திரி கோணம் அதில் ஆசை மிகவாய் அடியன் அலையாமல்
நாத சத கோடி மறை ஓலம் இடு நூபுரம் மு(ன்)னான பத மா மலரை நலமாக நான் அநுதினா தினமுமே நினையவே கிருபை நாடி அருளே அருள வருவாயே
சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில பரமேசர் சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குலகாலா
கோதை குறமாது குண தேவ மட மாதும் இரு பாலும் உற வீறி வரு குமரேசா
கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா அமரர் பெருமாளே.
அன்பும் இன்பமும் தருவதான கனத்த மார்பகங்கள், விலைமாதர்களுடைய இடுப்பு நூலைப் போன்றது, வயிறு ஆலின் இலையைப் போன்றது, என்று உவமை கூறி, மன்மதனுடைய காம சாஸ்திர விளையாடல்கள் எல்லாம் உண்டாகும் குழியான முக்கோணமான பெண்குறியில் மிக்க ஆசை கொண்டு அடியேன் அலைச்சல் உறாமல், நாதனே, நூறு கோடி ஆகம மந்திர உபதேசப் பொருள்களை சத்தத்தால் தெரிவிக்கும் சிலம்புகள் முன்னதாகவே விளங்கும் பாதத் தாமரைத் திருவடிகளை நன்மை பெறுமாறு, நான் நாள்தோறும் நினைக்கும்படி, உனது கருணையை நாடிவரும்படி, உனது திருவருளை அருள் புரிய வருவாயாக. குளிர்ச்சியான நிலா, ஆடும் பாம்பு, அழகிய அறுகம் புல், கொக்கின் இறகு, குளிர்ந்த கங்கை நீர் (இவைகளைக் கொண்ட) அழகிய சடையை உடைய சிவபெருமான் உலகங்கள் செம்மை பெறவே தந்த கூரிய வேலனே, சிவனே, கோபித்து வரும் பெரிய அசுரர்கள் குலத்துக்கு யமனே, நல்லவளான குறப் பெண் வள்ளி, நற்குணம் உள்ள தேவநாட்டு அழகிய மாது (தேவயானை) இரண்டு பக்கமும் பொருந்த விளக்கத்துடன் வரும் குமரேசனே, கோசை நகர் எனப்படும் கோயம்பேட்டில் வீற்றிருக்கும் ஈசனே, அடியார்களுக்கு அன்பனே, சர்வேசனே, முருகனே, தேவர்களின் பெருமாளே.
ஆதம் இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா ... அன்பும் இன்பமும் தருவதான கனத்த மார்பகங்கள், விலைமாதர்களுடைய இடுப்பு நூலைப் போன்றது, வயிறு ஆலின் இலையைப் போன்றது, என்று உவமை கூறி, மதன கலை லீலை யாவும் விளைவான குழியான திரி கோணம் அதில் ஆசை மிகவாய் அடியன் அலையாமல் ... மன்மதனுடைய காம சாஸ்திர விளையாடல்கள் எல்லாம் உண்டாகும் குழியான முக்கோணமான பெண்குறியில் மிக்க ஆசை கொண்டு அடியேன் அலைச்சல் உறாமல், நாத சத கோடி மறை ஓலம் இடு நூபுரம் மு(ன்)னான பத மா மலரை நலமாக நான் அநுதினா தினமுமே நினையவே கிருபை நாடி அருளே அருள வருவாயே ... நாதனே, நூறு கோடி ஆகம மந்திர உபதேசப் பொருள்களை சத்தத்தால் தெரிவிக்கும் சிலம்புகள் முன்னதாகவே விளங்கும் பாதத் தாமரைத் திருவடிகளை நன்மை பெறுமாறு, நான் நாள்தோறும் நினைக்கும்படி, உனது கருணையை நாடிவரும்படி, உனது திருவருளை அருள் புரிய வருவாயாக. சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில பரமேசர் சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குலகாலா ... குளிர்ச்சியான நிலா, ஆடும் பாம்பு, அழகிய அறுகம் புல், கொக்கின் இறகு, குளிர்ந்த கங்கை நீர் (இவைகளைக் கொண்ட) அழகிய சடையை உடைய சிவபெருமான் உலகங்கள் செம்மை பெறவே தந்த கூரிய வேலனே, சிவனே, கோபித்து வரும் பெரிய அசுரர்கள் குலத்துக்கு யமனே, கோதை குறமாது குண தேவ மட மாதும் இரு பாலும் உற வீறி வரு குமரேசா ... நல்லவளான குறப் பெண் வள்ளி, நற்குணம் உள்ள தேவநாட்டு அழகிய மாது (தேவயானை) இரண்டு பக்கமும் பொருந்த விளக்கத்துடன் வரும் குமரேசனே, கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா அமரர் பெருமாளே. ... கோசை நகர் எனப்படும் கோயம்பேட்டில் வீற்றிருக்கும் ஈசனே, அடியார்களுக்கு அன்பனே, சர்வேசனே, முருகனே, தேவர்களின் பெருமாளே.