தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான
சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து சாமளவ தாக வந்து ...... புவிமீதே சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து தாரணியி லேத வழ்ந்து ...... விளையாடிப் பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள் பாரதன மீத ணைந்து ...... பொருள்தேடிப் பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று பாதமலர் சேர அன்பு ...... தருவாயே ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள் ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற ஆதிமுதல் நார ணன்றன் ...... மருகோனே கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை கோவையமு தூற லுண்ட ...... குமரேசா கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
சாலநெடு நாள்மடந்தை காயமதிலே யலைந்து
சாம் அளவதாக வந்து புவிமீதே சாதகமுமான பின்பு
சீறியழுதேகி டந்து தாரணியிலே தவழ்ந்து விளையாடி
பாலனெனவே மொழிந்து
பாகுமொழி மாதர் தங்கள் பாரதன மீதணைந்து
பொருள்தேடிப் பார்மிசையிலேயுழன்று
பாழ்நரகெய்தாமல்
ஒன்று(ம்) பாதமலர் சேர அன்பு தருவாயே
ஆலம் அமுதாக வுண்ட ஆறுசடை நாதர்
திங்கள் ஆடரவு பூணர் தந்த முருகோனே
ஆனைமடு வாயில் அன்று மூலமென ஓலமென்ற
ஆதிமுதல் நார ணன்றன் மருகோனே
கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
கோவையமுது ஊற லுண்ட குமரேசா
கூடிவரு சூர் அடங்க மாள வடிவேலெறிந்த
கோடைநகர் வாழ வந்த பெருமாளே.
மிகவும் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணின் கருவிலே கிடந்து அலைச்சலுற்று, சாகும் அளவிற்கான துன்பத்துக்கு ஆளாகிவந்து, இந்தப் புவிமீது பிறப்பை அடைந்த பின்னர், வீறிட்டு அழுது, கீழே கிடந்து, தரையில் தவழ்ந்து விளையாடி, பால உருவினனாகப் பேச்சுக்கள் பேசி, சர்க்கரை போல இனிக்கும் சொற்களைக் கொண்ட மாதர்களின் பெரிய மார்பகங்களை அணைந்து, பொருள் தேடவேண்டி பூமியிலே திரிந்து அலைந்து, பாழான நரகிலே போய்ச்சேராமல் பொருந்திய உனது பாத மலர்களை அடைவதற்குரிய அன்பை அருள்வாயாக. விஷத்தை அமிர்தமாக உண்ட, கங்கை நதியை சடையில் சூடியுள்ள நாதர், சந்திரனையும், படமெடுத்து ஆடும் பாம்பையும் அணிந்தவராகிய சிவபிரான் தந்த முருகனே, கஜேந்திரன் என்ற யானை அன்று குளத்தில் (முதலை வாயில் அகப்பட்டு) ஆதி மூலமே என்றும் நீயே தஞ்சம் என்றும் கூவி அழைத்த ஆதி முதல்வனான நாராயணனின் மருகனே, அழகிய மலர்த் தடாகங்கள் எங்கும் இருந்த தினைப் புனத்தில் வாழ்ந்த பெண் வள்ளியின் கொவ்வைக் கனி போன்ற வாயின் அமுத ஊறலை உண்ட குமரனே, இரண்டு கூறாகப் பிளவுபட்டாலும் ஒன்றாகக் கூடிவந்த சூரன் அடங்கி ஒடுங்க, கூர்மையான வேலைச் செலுத்தியவனே, கோடைநகர் தலத்தில் வாழவந்த பெருமாளே.
சாலநெடு நாள்மடந்தை காயமதிலே யலைந்து ... மிகவும் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணின் கருவிலே கிடந்து அலைச்சலுற்று, சாம் அளவதாக வந்து புவிமீதே சாதகமுமான பின்பு ... சாகும் அளவிற்கான துன்பத்துக்கு ஆளாகிவந்து, இந்தப் புவிமீது பிறப்பை அடைந்த பின்னர், சீறியழுதேகி டந்து தாரணியிலே தவழ்ந்து விளையாடி ... வீறிட்டு அழுது, கீழே கிடந்து, தரையில் தவழ்ந்து விளையாடி, பாலனெனவே மொழிந்து ... பால உருவினனாகப் பேச்சுக்கள் பேசி, பாகுமொழி மாதர் தங்கள் பாரதன மீதணைந்து ... சர்க்கரை போல இனிக்கும் சொற்களைக் கொண்ட மாதர்களின் பெரிய மார்பகங்களை அணைந்து, பொருள்தேடிப் பார்மிசையிலேயுழன்று ... பொருள் தேடவேண்டி பூமியிலே திரிந்து அலைந்து, பாழ்நரகெய்தாமல் ... பாழான நரகிலே போய்ச்சேராமல் ஒன்று(ம்) பாதமலர் சேர அன்பு தருவாயே ... பொருந்திய உனது பாத மலர்களை அடைவதற்குரிய அன்பை அருள்வாயாக. ஆலம் அமுதாக வுண்ட ஆறுசடை நாதர் ... விஷத்தை அமிர்தமாக உண்ட, கங்கை நதியை சடையில் சூடியுள்ள நாதர், திங்கள் ஆடரவு பூணர் தந்த முருகோனே ... சந்திரனையும், படமெடுத்து ஆடும் பாம்பையும் அணிந்தவராகிய சிவபிரான் தந்த முருகனே, ஆனைமடு வாயில் அன்று மூலமென ஓலமென்ற ... கஜேந்திரன் என்ற யானை அன்று குளத்தில் (முதலை வாயில் அகப்பட்டு) ஆதி மூலமே என்றும் நீயே தஞ்சம் என்றும் கூவி அழைத்த ஆதிமுதல் நார ணன்றன் மருகோனே ... ஆதி முதல்வனான நாராயணனின் மருகனே, கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை ... அழகிய மலர்த் தடாகங்கள் எங்கும் இருந்த தினைப் புனத்தில் வாழ்ந்த பெண் வள்ளியின் கோவையமுது ஊற லுண்ட குமரேசா ... கொவ்வைக் கனி போன்ற வாயின் அமுத ஊறலை உண்ட குமரனே, கூடிவரு சூர் அடங்க மாள வடிவேலெறிந்த ... இரண்டு கூறாகப் பிளவுபட்டாலும் ஒன்றாகக் கூடிவந்த சூரன் அடங்கி ஒடுங்க, கூர்மையான வேலைச் செலுத்தியவனே, கோடைநகர் வாழ வந்த பெருமாளே. ... கோடைநகர் தலத்தில் வாழவந்த பெருமாளே.