இருள் அடைந்த மனத்தையும், மிக்க அறியாமையையும் கொண்ட எனது வருத்தங்களையும், ஆணவத்தையும் விலக்கும் ஞான சூரியனே, மூவுலகங்களுக்கும் ஒளி தரும் சூரியனே, சிவனே, மூலாதாரனே, நாகாபரணரும் வேத முதல்வருமான சிவபிரானின் குமாரனே, ஹரி நாராயணனின் மருகனே, குமரியும், கருமை கலந்த பச்சை நிறத்தாளும், அன்னையும், உமா தேவியும், மாசு அற்றவளும், பச்சை வண்ணத்தாளும், நிறைந்தவளும், குணச்செல்வியும், கலைச்செல்வியுமான நாராயணி பெற்ற தலைவனே, குருநாதனே, குகனே, குமரேசனே, சரவணனே, உருவத் திருமேனி கொண்ட ஈசனே, குறவர்தம் தவப் புதல்வி வள்ளி மீது ஆசை கொண்ட மணியே, நன்றாக வண்டுகள் மொய்க்கும் ஒளிவீசும் சிவந்த கூட்டமான வெட்சி மாலைகளை அணிந்தவனே, ப்ரணவப் பொருளானவனே, பேரின்பப் பொருளே, பாசுரங்களை (தேவாரத்தை) பாடி உலகுக்கு பாடம் கற்பித்தவனே, செம்பட்டு அணிந்தவனே, மலைகளுக்கு அரசனே, திருநீற்றில் திருப்தி அடைபவனே, சேவலைக் கொடியில் வைத்தவனே, மேன்மை மிகுந்த பெரிய வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவனே, பாடலில் வல்லவனே, மேலான யோக மூர்த்தியே, வாதப் போரிடும் புற மதங்களான புத்தம், சமணம் - இவற்றின் நசிவுக்குக் காரணனே, அகச்சமயம் ஆறிலும், புறச்சமயம் ஆறிலும் இலங்கும் தெய்வமே, தக்க சமயத்தில் உதவும் தலைவனே, அழகிய மயில் ஏறும் பேரறிவு வீரனே, சகல உலகங்களும், குற்றமற்ற எல்லா வேதங்களும் தொழும் சமரமாபுரி என்ற திருப்போரூரில் வீற்றிருக்கும் பெருமாளே.