சுருதி மறைகள்
இருநாலு திசையில் அதிபர் முநிவோர்கள்
துகளில் இருடி யெழுபேர்கள் சுடர்மூவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியும் அயனும் ஒருகோடி யிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிகள் அறிய
அடியேனும் அறிவுள் அறியும் அறிவூற அருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியும் அழிவாக
மகர சலதி அளறாக முதுசூரும் மடிய
அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி வருநாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள் அலைமோத
நமனும் வெருவி யடிபேண
மயிலேறி நளின வுபய கரவேலை முடுகு முருக
வடமேரு நகரி யுறையும் இமையோர்கள் பெருமாளே.
வேதங்கள், உபநிஷதம் முதலிய ஆகமங்கள், எட்டுத் திக்குப் பாலகர்கள்1, முநிவர்கள் குற்றமில்லாத ரிஷிகள் ஏழு பேர்2, சூரியன், சந்திரன், அக்கினி எனப்படும் மூன்று சுடர்கள், சொல்லுவதற்கு முடிவிலே முடியாத பிரகிருதி புருஷர்களான பிரபஞ்ச மாயா அதிகாரிகள், பிரதானசித்தர்களான ஒன்பது நாதர்கள்3, வெகு தூரத்தில் உள்ள நக்ஷத்திர உலகில் வாழ்பவர்கள், வேதம் வல்லவர்கள், அருமையான சமயங்கள் கோடிக்கணக்கானவை, தேவர்கள், நூற்றுக் கோடிக்கணக்கான அடியார்கள், திருமால், பிரமன், ஒரு கோடி பேர் - இவர்களெல்லாம் கூடி, அறிந்து கொள்ள, அறிந்து கொள்ள (எத்தனை முயன்றும்) அறிய முடியாத உனது திருவடிகளை, அடியேனும் எனது அறிவுக்கு உள்ளேயே அறிந்து கொள்ள வல்லதான அறிவு ஊறும்படி நீ அருள்புரிவாயாக. கிரெளஞ்சம் முதலிய மலைகள் தவிடு பொடியாக, அசுரர்களின் ஊர்கள் அழிவடைய, மகர மீன்கள் உள்ள கடல் சேறாக, பழைய சூரனும் அழிவுற, பேய்கள் நடனம் செய்ய, விஜய லக்ஷ்மி மகிழ்ச்சி அடைய, அசுரர்களின் தலைகள் சிதறிவிழ, இரையைத் தேடிவந்த நாய்களுடன், நரிகளும், காக்கைகளும், பசி நீங்க, ரத்த வெள்ளம் அலைமோதி ஓட, யமனும் அச்சமுற்று உனது திருவடிகளைத் துதிக்க, மயிலில் ஏறி, மகிமைவாய்ந்த திருக்கரத்து வேலாயுதத்தை விரைவாகச் செலுத்தும் முருகனே, உத்தரமேரூர்4 என்ற தலத்தில் வீற்றிருப்போனே, தேவர்களின் பெருமாளே.
சுருதி மறைகள் ... வேதங்கள், உபநிஷதம் முதலிய ஆகமங்கள், இருநாலு திசையில் அதிபர் முநிவோர்கள் ... எட்டுத் திக்குப் பாலகர்கள்1, முநிவர்கள் துகளில் இருடி யெழுபேர்கள் சுடர்மூவர் ... குற்றமில்லாத ரிஷிகள் ஏழு பேர்2, சூரியன், சந்திரன், அக்கினி எனப்படும் மூன்று சுடர்கள், சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர் ... சொல்லுவதற்கு முடிவிலே முடியாத பிரகிருதி புருஷர்களான பிரபஞ்ச மாயா அதிகாரிகள், பிரதானசித்தர்களான ஒன்பது நாதர்கள்3, தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் ... வெகு தூரத்தில் உள்ள நக்ஷத்திர உலகில் வாழ்பவர்கள், வேதம் வல்லவர்கள், அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி ... அருமையான சமயங்கள் கோடிக்கணக்கானவை, தேவர்கள், நூற்றுக் கோடிக்கணக்கான அடியார்கள், அரியும் அயனும் ஒருகோடி யிவர்கூடி ... திருமால், பிரமன், ஒரு கோடி பேர் - இவர்களெல்லாம் கூடி, அறிய அறிய அறியாத அடிகள் அறிய ... அறிந்து கொள்ள, அறிந்து கொள்ள (எத்தனை முயன்றும்) அறிய முடியாத உனது திருவடிகளை, அடியேனும் அறிவுள் அறியும் அறிவூற அருள்வாயே ... அடியேனும் எனது அறிவுக்கு உள்ளேயே அறிந்து கொள்ள வல்லதான அறிவு ஊறும்படி நீ அருள்புரிவாயாக. வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியும் அழிவாக ... கிரெளஞ்சம் முதலிய மலைகள் தவிடு பொடியாக, அசுரர்களின் ஊர்கள் அழிவடைய, மகர சலதி அளறாக முதுசூரும் மடிய ... மகர மீன்கள் உள்ள கடல் சேறாக, பழைய சூரனும் அழிவுற, அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக ... பேய்கள் நடனம் செய்ய, விஜய லக்ஷ்மி மகிழ்ச்சி அடைய, மவுலி சிதறி இரைதேடி வருநாய்கள் ... அசுரர்களின் தலைகள் சிதறிவிழ, இரையைத் தேடிவந்த நாய்களுடன், நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள் அலைமோத ... நரிகளும், காக்கைகளும், பசி நீங்க, ரத்த வெள்ளம் அலைமோதி ஓட, நமனும் வெருவி யடிபேண ... யமனும் அச்சமுற்று உனது திருவடிகளைத் துதிக்க, மயிலேறி நளின வுபய கரவேலை முடுகு முருக ... மயிலில் ஏறி, மகிமைவாய்ந்த திருக்கரத்து வேலாயுதத்தை விரைவாகச் செலுத்தும் முருகனே, வடமேரு நகரி யுறையும் இமையோர்கள் பெருமாளே. ... உத்தரமேரூர்4 என்ற தலத்தில் வீற்றிருப்போனே, தேவர்களின் பெருமாளே.