தான தந்த தான தந்த தான தந்த தான தந்த தான தந்த தான தந்த ...... தனதான
தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து சோரு மிந்த நோய கன்று ...... துயராற ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும் ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே.
தோலெலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை
பொங்கு சோரி பிண்டமாயுருண்டு வடிவான
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான்மெலிந்து
சோரு மிந்த நோய் அகன்று துயராற
ஆல முண்ட கோன் அகண்ட லோகமுண்ட மால் விரிஞ்சன்
ஆரணங்கள் ஆகமங்கள் புகழ்தாளும்
ஆனனங்கள் மூவிரண்டும் ஆறிரண்டு தோளும்
அங்கை யாடல் வென்றி வேலும் என்று நினைவேனோ
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி
அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே
மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து
வாழ்பெருஞ் சராசரங்கள் உறைவோனே
வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
வேடர் மங்கை யோடி யஞ்ச அணைவோனே
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற
மேரு மங்கை யாள வந்த பெருமாளே.
தோல், எலும்பு, சீழ், நரம்பு, பீளை, அடைத்திருக்கும் கோழை, மேலே பொங்கும் ரத்தம் - இவையாவும் ஒரு பிண்டமாய் உருண்டு ஒரு வடிவம் ஏற்பட்டு, பருத்த, பாவத்துக்கு இடமான, சரீரத்தை வீணாகச் சுமந்து, நான் மெலிவுற்று, தளர்கின்ற இந்த பிறவி நோய் நீங்கி என் துயரம் முடிவுபெற, விஷத்தை உண்ட எம் தலைவன் சிவன், எல்லா உலகங்களையும் உண்ட திருமால், பிரமன், மற்றும் வேதங்கள், ஆகமங்கள் யாவும் புகழ்கின்ற உன் திருவடியும், திருமுகங்கள் ஆறையும், பன்னிரண்டு தோள்களையும், அழகிய கரத்தில் விளங்கும் வெற்றி வேலாயுதத்தையும் என்றைக்கு நான் தியானிப்பேனோ? இளம்பிறையைச் சூடிய சிவனும், வேத மந்திர ஸ்வரூபியுமான அம்பிகை, கலைமகளை ஒரு கூறாகவும், ஐந்து மலர்ப் பாணங்களை உடையவளுமான, பார்வதி தேவியும் தந்தளித்த பால முருகனே, ஐந்து மாயை1, ஐந்து வேகம்2, ஐந்து பூதம்3, ஐந்து நாதம்4 இவை வாழ்கின்ற அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் யாவிலும் உறைபவனே, வேண்டிய சமயத்தில் அன்பு மிக்கு வந்த ஒற்றைக் கொம்பர் விநாயகமூர்த்தியாம் யானையைக் கண்டு வேடர்குலப் பெண் வள்ளி பயந்தோடியபோது அவளை அணைந்தவனே, வீர லக்ஷ்மி, பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி, பூமாதேவி இவர்கள் யாவரும் மங்களமாக வீற்றிருக்கிற உத்தர மேரூரில்5 ஆட்சிபுரியும் பெருமாளே.
தோலெலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை ... தோல், எலும்பு, சீழ், நரம்பு, பீளை, அடைத்திருக்கும் கோழை, பொங்கு சோரி பிண்டமாயுருண்டு வடிவான ... மேலே பொங்கும் ரத்தம் - இவையாவும் ஒரு பிண்டமாய் உருண்டு ஒரு வடிவம் ஏற்பட்டு, தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான்மெலிந்து ... பருத்த, பாவத்துக்கு இடமான, சரீரத்தை வீணாகச் சுமந்து, நான் மெலிவுற்று, சோரு மிந்த நோய் அகன்று துயராற ... தளர்கின்ற இந்த பிறவி நோய் நீங்கி என் துயரம் முடிவுபெற, ஆல முண்ட கோன் அகண்ட லோகமுண்ட மால் விரிஞ்சன் ... விஷத்தை உண்ட எம் தலைவன் சிவன், எல்லா உலகங்களையும் உண்ட திருமால், பிரமன், ஆரணங்கள் ஆகமங்கள் புகழ்தாளும் ... மற்றும் வேதங்கள், ஆகமங்கள் யாவும் புகழ்கின்ற உன் திருவடியும், ஆனனங்கள் மூவிரண்டும் ஆறிரண்டு தோளும் ... திருமுகங்கள் ஆறையும், பன்னிரண்டு தோள்களையும், அங்கை யாடல் வென்றி வேலும் என்று நினைவேனோ ... அழகிய கரத்தில் விளங்கும் வெற்றி வேலாயுதத்தையும் என்றைக்கு நான் தியானிப்பேனோ? வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி ... இளம்பிறையைச் சூடிய சிவனும், வேத மந்திர ஸ்வரூபியுமான அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே ... அம்பிகை, கலைமகளை ஒரு கூறாகவும், ஐந்து மலர்ப் பாணங்களை உடையவளுமான, பார்வதி தேவியும் தந்தளித்த பால முருகனே, மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து ... ஐந்து மாயை1, ஐந்து வேகம்2, ஐந்து பூதம்3, ஐந்து நாதம்4 வாழ்பெருஞ் சராசரங்கள் உறைவோனே ... இவை வாழ்கின்ற அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் யாவிலும் உறைபவனே, வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு ... வேண்டிய சமயத்தில் அன்பு மிக்கு வந்த ஒற்றைக் கொம்பர் விநாயகமூர்த்தியாம் யானையைக் கண்டு வேடர் மங்கை யோடி யஞ்ச அணைவோனே ... வேடர்குலப் பெண் வள்ளி பயந்தோடியபோது அவளை அணைந்தவனே, வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற ... வீர லக்ஷ்மி, பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி, பூமாதேவி இவர்கள் யாவரும் மங்களமாக வீற்றிருக்கிற மேரு மங்கை யாள வந்த பெருமாளே. ... உத்தர மேரூரில்5 ஆட்சிபுரியும் பெருமாளே.