நீள் புயல் குழல் மாதர் பேரினில் க்ருபையாகி
நேசம் உற்று அடியேனு(ம்) நெறி கேடாய்
நேமியில் பொருள் தேடி ஓடி எய்த்து உள்ளம் வாடி
நீதியில் சிவ வாழ்வை நினையாதே
பாழினுக்கு இரையாய நாமம் வைத்து
ஒரு கோடி பாடல் உற்றிடவே செய்திடு மோச பாவி எப்படி வாழ்வன்
நேயர்கட்கு உளதான பார்வை சற்று அருளோடு பணியாயோ
ஆழியில் துயில்வோனும் மா மலரப் பிரமாவும்
ஆகமப் பொருளோரும் அனைவோரும்
ஆனை மத்தகவோனும் ஞானம் உற்று இயல்வோரும்
ஆயிரத்து இருநூறு மறையோரும் வாழும் உத்தரமேரூர் மேவி
அற்புதமாக வாகு சித்திர தோகை மயில் ஏறி
மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல
மான் மகட்கு உளனான பெருமாளே.
நீண்ட மேகம் போல் இருண்ட கூந்தல் உடைய விலைமாதர்களின் மேல் அன்பு வைத்து, மிகவும் நேசம் அடைந்து அடியேனும் நன்னெறியை இழந்தவனாய், பூமியில் பொருள் தேடுவதற்காக ஓடி இளைத்து, மனம் சோர்ந்து, நீதியான மங்களகரமான வாழ்க்கையை வாழ நினையாமல், பாழுக்கே உணவாயிற்று என்னும்படியாக, மற்றவர்களுடைய பெயர்களை (தலைவர்களாக) கவிதையில் வைத்து, கோடிக் கணக்கான பாடல்கள் அமையும்படி இயற்றுகின்ற மோசக்காரப் பாவியாகிய நான் எங்ஙனம் வாழ்வேன்? (உனது) அன்பர்களுக்கு நீ வைத்துள்ள பார்வையை கொஞ்சம் திருவருள் வைத்து எனக்கும் பாலிக்க மாட்டாயா? திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், சிவாகமத்துக்கு உரிய மூல முதல்வராகிய சிவபெருமானும், பிறர் யாவரும், ஆனைமுகமும் மத்தகமும் கொண்ட கணபதியும், ஞானம் அடைந்து உலவும் ஞானிகளும், ஆயிரத்து இரு நூறு மறையவர்களும் வாழ்கின்ற உத்தரமேரூரில் வீற்றிருந்து, அற்புதமாக, அழகிய விசித்திரமான கலாபத்தைக் கொண்ட மயிலின் மேல் ஏறி, பகைவன் எனச் சண்டை செய்யும் சூரன் தூளாக போர் செய்த வேலனே, மான் பெற்ற மகளான வள்ளிக்கு உரியவனாக விளங்கி நிற்கும் பெருமாளே.
நீள் புயல் குழல் மாதர் பேரினில் க்ருபையாகி ... நீண்ட மேகம் போல் இருண்ட கூந்தல் உடைய விலைமாதர்களின் மேல் அன்பு வைத்து, நேசம் உற்று அடியேனு(ம்) நெறி கேடாய் ... மிகவும் நேசம் அடைந்து அடியேனும் நன்னெறியை இழந்தவனாய், நேமியில் பொருள் தேடி ஓடி எய்த்து உள்ளம் வாடி ... பூமியில் பொருள் தேடுவதற்காக ஓடி இளைத்து, மனம் சோர்ந்து, நீதியில் சிவ வாழ்வை நினையாதே ... நீதியான மங்களகரமான வாழ்க்கையை வாழ நினையாமல், பாழினுக்கு இரையாய நாமம் வைத்து ... பாழுக்கே உணவாயிற்று என்னும்படியாக, மற்றவர்களுடைய பெயர்களை (தலைவர்களாக) கவிதையில் வைத்து, ஒரு கோடி பாடல் உற்றிடவே செய்திடு மோச பாவி எப்படி வாழ்வன் ... கோடிக் கணக்கான பாடல்கள் அமையும்படி இயற்றுகின்ற மோசக்காரப் பாவியாகிய நான் எங்ஙனம் வாழ்வேன்? நேயர்கட்கு உளதான பார்வை சற்று அருளோடு பணியாயோ ... (உனது) அன்பர்களுக்கு நீ வைத்துள்ள பார்வையை கொஞ்சம் திருவருள் வைத்து எனக்கும் பாலிக்க மாட்டாயா? ஆழியில் துயில்வோனும் மா மலரப் பிரமாவும் ... திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், ஆகமப் பொருளோரும் அனைவோரும் ... சிவாகமத்துக்கு உரிய மூல முதல்வராகிய சிவபெருமானும், பிறர் யாவரும், ஆனை மத்தகவோனும் ஞானம் உற்று இயல்வோரும் ... ஆனைமுகமும் மத்தகமும் கொண்ட கணபதியும், ஞானம் அடைந்து உலவும் ஞானிகளும், ஆயிரத்து இருநூறு மறையோரும் வாழும் உத்தரமேரூர் மேவி ... ஆயிரத்து இரு நூறு மறையவர்களும் வாழ்கின்ற உத்தரமேரூரில் வீற்றிருந்து, அற்புதமாக வாகு சித்திர தோகை மயில் ஏறி ... அற்புதமாக, அழகிய விசித்திரமான கலாபத்தைக் கொண்ட மயிலின் மேல் ஏறி, மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல ... பகைவன் எனச் சண்டை செய்யும் சூரன் தூளாக போர் செய்த வேலனே, மான் மகட்கு உளனான பெருமாளே. ... மான் பெற்ற மகளான வள்ளிக்கு உரியவனாக விளங்கி நிற்கும் பெருமாளே.