மலை மகளாகிய பார்வதியின் பக்திக்கு உருகி தமது இடது பாகத்தையே கொடுத்தருளிய சிவனார் பலவித வரிசைக் கூத்துக்களையும், ஜதி (தாளம்) நடனங்களையும் ஆடுபவரும், ஜடாமுடியில் கங்கை ஆற்றை வைத்த நம் பெருமானும் ஆகிய சிவனாருக்கு பேச்சற்றுப் போய், செயல் இழந்து, மனம் அழியும்படியாக, என்றும் உள்ளதாகிய தன்மையைப் பெற நீ கூறிய உபதேசத்தை சிறியவனாகிய எனக்கும் நீ சொல்லி உதவினால் கொஞ்சமேனும் உனது குருமூர்த்தியாம் பதவி குறைந்திடுமோ என்ன? வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தி சமுத்திரத்தில் மாமரமாக ஒளிந்த சூரனைப் பிளந்து, தேவர்கள் வாழ்வுற, சகல அண்டங்களையும் ஒரு நொடிப் பொழுதில் சுற்றிய வலிமை வாய்ந்த, கடுமை கொண்ட, முழு நீல நிறமான மயிலைப் பாய்ந்தோடச் செய்தவனும், பழைய சிறந்த பொன்மயமான மேருமலையை செண்டால் அடித்தவனுமான போர் விளையாட்டை உடையவனே, மதுராந்தகத்துக்கு வடக்குப் பகுதியில் திருச்சிற்றம்பலம் என்னும் திருக்கோயிலில் அமர்ந்த பெருமாளே.
சயில அங்கனைக்கு உருகி ... மலை மகளாகிய பார்வதியின் பக்திக்கு உருகி இடப்பக்கங் கொடுத்த கம்பர் ... தமது இடது பாகத்தையே கொடுத்தருளிய சிவனார் வெகுசாரி சதிதாண்டவத்தர் ... பலவித வரிசைக் கூத்துக்களையும், ஜதி (தாளம்) நடனங்களையும் ஆடுபவரும், சடையி டத்துக் கங்கை வைத்த நம்பர் ... ஜடாமுடியில் கங்கை ஆற்றை வைத்த நம் பெருமானும் ஆகிய சிவனாருக்கு உரைமாளச் செயல்மாண்டு சித்தம் அவிழ ... பேச்சற்றுப் போய், செயல் இழந்து, மனம் அழியும்படியாக, நித்தத் த்வம் பெறப் பகர்ந்த உபதேசம் ... என்றும் உள்ளதாகிய தன்மையைப் பெற நீ கூறிய உபதேசத்தை சிறியேன்தனக்கும் உரைசெயில் ... சிறியவனாகிய எனக்கும் நீ சொல்லி உதவினால் சற்றுங் குருத்துவம் குறையுமோதான் ... கொஞ்சமேனும் உனது குருமூர்த்தியாம் பதவி குறைந்திடுமோ என்ன? அயில்வாங்கி யெற்றி ... வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தி உததியிற் கொக்கன் தனைப்பி ளந்து ... சமுத்திரத்தில் மாமரமாக ஒளிந்த சூரனைப் பிளந்து, சுரர்வாழ ... தேவர்கள் வாழ்வுற, அகிலாண்ட முற்று நொடியினிற் சுற்றும் ... சகல அண்டங்களையும் ஒரு நொடிப் பொழுதில் சுற்றிய திறற் ப்ரசண்ட முழுநீல ... வலிமை வாய்ந்த, கடுமை கொண்ட, முழு நீல நிறமான மயில்தாண்ட விட்டு ... மயிலைப் பாய்ந்தோடச் செய்தவனும், முதுகுலப்பொற் குன்றிடித்த ... பழைய சிறந்த பொன்மயமான மேருமலையை செண்டால் அடித்தவனுமான சங்க்ரம விநோதா ... போர் விளையாட்டை உடையவனே, மதுராந்தகத்து வட ... மதுராந்தகத்துக்கு வடக்குப் பகுதியில் திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே. ... திருச்சிற்றம்பலம் என்னும் திருக்கோயிலில் அமர்ந்த பெருமாளே.