கண் கயல் பிணை மானோடு உறவு உண்டு எனக் கழை தோளானது நன்கு அமைக்கு இனம் ஆம் ஆம் என
முகையான கஞ்சம் ஒத்து எழு கூர் மா முலை குஞ்சரத்து இரு கோடோடு உற
விஞ்சு மைப் பொரு கார் கோதை கொடு உயர் காலன் பெண் தனக்கு உள கோலாகலம் இன்று எடுத்து
இளையோர் ஆவிகள் மன் பிடிப்பது போல் நீள் வடிவுடை மாதர் பின்பு ஒழித்திடு மா மாயையில் அன்பு வைத்து அழியாதே உறு
கிஞ்சில் அத்தனை தாள் பேணிட அருள் தாராய்
விண் தனக்கு உறவானோன் உடல் கண் படைத்தவன் வேதாவொடு விண்டு வித்தகன் வீழ் தாளினர் விடை ஏறி
வெம் தனத்து உமையாள் மேவிய சந்தனப் புய மாது ஈசுரர் வெம் கயத்து உரி ஆர் போர்வையர் மிகு வாழ்வே
தண் புடைப் பொழில் சூழ் மாதையில் நண்பு வைத்து அருள் தாராதலமும் கிளைத்திட
வான் நீள் திசையொடு தாவித் தண்டு அரக்கர்கள் கோ கோ என விண்டிட
தட மா மீமிசை சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே.
கண்ணுக்கு கயல் மீனோடும், பெண்மானோடும் சம்பந்தம் உண்டு என்றும், கரும்பு போன்ற தோள் நல்ல மூங்கிலுக்கு ஒப்பாகும் ஆம் ஆம் என்றும் சொல்லும்படியாக, மொட்டான தாமரை போன்று வளர்ந்து மிக்கெழுந்துள்ள கூரிய பெரிய மார்பகம் யானையின் இரண்டு தந்தங்களுக்கு ஒப்பானவை எனவும், நிரம்பிய இருளுக்கு ஒப்பான கருமேகம் போன்ற கூந்தல் எனவும் இவைகளைக் கொண்டு, பெருமை வாய்ந்த யமனே பெண் என்னும் ஓர் உருவுக்கு உண்டான ஆடம்பரமான வேஷத்தை இன்று எடுத்துக் கொண்டு வந்து, இளைஞோர்களின் உயிரை நன்றாகப் பிடிப்பது போல, பெரும் அழகு வாய்ந்த மாதர்களின் பிறகே தனத்தைச் செலவழிக்கும் மாமோகத்தில் விருப்பத்தை வைத்து, நான் அழிந்து போகாமல் ஒரு சிறிய அளவுக்காவது உனது திருவடிகளை விரும்ப திருவருளைத் தருவாயாக. விண்ணுலகுக்குச் சொந்தமானவனும், உடலெல்லாம் கண் கொண்டவனுமாகிய இந்திரன், பிரமனுடனும், பேரறிவாளனாகிய திருமாலுடனும் விழுந்து வணங்கும் திருவடியை உடையவர், (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறுபவர், விருப்பத்துக்கு இடமான திருமார்பை உடைய உமையாள் விரும்பி அமரும் சந்தனம் பூசிய புயங்களை உடைய அர்த்த நாரீசுரர், கொடிய யானையின் தோலை நிரம்பின போர்வையாகக் கொண்டவர் ஆகிய சிவபெருமானின் பெரும் செல்வமே, குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்ட திருவாமாத்தூரில் ஆசை கொண்டு வீற்றிருந்து, திருவருளால் உலகம் யாவையும் செழிப்புற்று ஓங்க, வானளாவிய பெரிய திசைகளிலும் பரந்து நிறைந்து யாவரையும் வருத்திய அசுரர்கள் கோ கோ என்று அலறி பயந்து ஓட, பெரிய மாமரத்தின் (உருவில் ஒளிந்திருந்த சூரனின்) மீது கோபமும் வலிமையும் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.
கண் கயல் பிணை மானோடு உறவு உண்டு எனக் கழை தோளானது நன்கு அமைக்கு இனம் ஆம் ஆம் என ... கண்ணுக்கு கயல் மீனோடும், பெண்மானோடும் சம்பந்தம் உண்டு என்றும், கரும்பு போன்ற தோள் நல்ல மூங்கிலுக்கு ஒப்பாகும் ஆம் ஆம் என்றும் சொல்லும்படியாக, முகையான கஞ்சம் ஒத்து எழு கூர் மா முலை குஞ்சரத்து இரு கோடோடு உற ... மொட்டான தாமரை போன்று வளர்ந்து மிக்கெழுந்துள்ள கூரிய பெரிய மார்பகம் யானையின் இரண்டு தந்தங்களுக்கு ஒப்பானவை எனவும், விஞ்சு மைப் பொரு கார் கோதை கொடு உயர் காலன் பெண் தனக்கு உள கோலாகலம் இன்று எடுத்து ... நிரம்பிய இருளுக்கு ஒப்பான கருமேகம் போன்ற கூந்தல் எனவும் இவைகளைக் கொண்டு, பெருமை வாய்ந்த யமனே பெண் என்னும் ஓர் உருவுக்கு உண்டான ஆடம்பரமான வேஷத்தை இன்று எடுத்துக் கொண்டு வந்து, இளையோர் ஆவிகள் மன் பிடிப்பது போல் நீள் வடிவுடை மாதர் பின்பு ஒழித்திடு மா மாயையில் அன்பு வைத்து அழியாதே உறு ... இளைஞோர்களின் உயிரை நன்றாகப் பிடிப்பது போல, பெரும் அழகு வாய்ந்த மாதர்களின் பிறகே தனத்தைச் செலவழிக்கும் மாமோகத்தில் விருப்பத்தை வைத்து, நான் அழிந்து போகாமல் கிஞ்சில் அத்தனை தாள் பேணிட அருள் தாராய் ... ஒரு சிறிய அளவுக்காவது உனது திருவடிகளை விரும்ப திருவருளைத் தருவாயாக. விண் தனக்கு உறவானோன் உடல் கண் படைத்தவன் வேதாவொடு விண்டு வித்தகன் வீழ் தாளினர் விடை ஏறி ... விண்ணுலகுக்குச் சொந்தமானவனும், உடலெல்லாம் கண் கொண்டவனுமாகிய இந்திரன், பிரமனுடனும், பேரறிவாளனாகிய திருமாலுடனும் விழுந்து வணங்கும் திருவடியை உடையவர், (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறுபவர், வெம் தனத்து உமையாள் மேவிய சந்தனப் புய மாது ஈசுரர் வெம் கயத்து உரி ஆர் போர்வையர் மிகு வாழ்வே ... விருப்பத்துக்கு இடமான திருமார்பை உடைய உமையாள் விரும்பி அமரும் சந்தனம் பூசிய புயங்களை உடைய அர்த்த நாரீசுரர், கொடிய யானையின் தோலை நிரம்பின போர்வையாகக் கொண்டவர் ஆகிய சிவபெருமானின் பெரும் செல்வமே, தண் புடைப் பொழில் சூழ் மாதையில் நண்பு வைத்து அருள் தாராதலமும் கிளைத்திட ... குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்ட திருவாமாத்தூரில் ஆசை கொண்டு வீற்றிருந்து, திருவருளால் உலகம் யாவையும் செழிப்புற்று ஓங்க, வான் நீள் திசையொடு தாவித் தண்டு அரக்கர்கள் கோ கோ என விண்டிட ... வானளாவிய பெரிய திசைகளிலும் பரந்து நிறைந்து யாவரையும் வருத்திய அசுரர்கள் கோ கோ என்று அலறி பயந்து ஓட, தட மா மீமிசை சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே. ... பெரிய மாமரத்தின் (உருவில் ஒளிந்திருந்த சூரனின்) மீது கோபமும் வலிமையும் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.