நிறுக்கும் சூது அ(ன்)ன மெய்த் தன முண்டைகள்
கருப்பன் சாறொடு அரைத்து உள உண்டைகள் நிழல் கண்காண உணக்கி மணம் பல தடவா
மேல் நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம் ஒளித்து அன்பாக அளித்த பின்
இங்கு எனை நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம் சொ(ல்)லி என ஓதி
உறக் கண்டு ஆசை வலைக்குள் அழுந்திட விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை உருக்கும் தூவைகள் செட்டை குணம் தனில் உழலாமே
உலப்பு இல் ஆறு எ(ன்)னு(ம்) அக்கரமும் கமழ் கடப்பம் தாரும் முக ப்ரபையும் தினம் உளத்தின் பார்வை இடத்தில் நினைந்திட அருள்வாயே
கறுக்கும் தூய மிடற்றன் அரும் சிலை எடுக்கும் தோளன் இறத்து அமர் எண் கரி கடக்கும் தானவனைக் கொல் அரும் புயன் மருகோனே
கனத் தஞ்சா புரி சிக்கல் வலம்சுழி திருச்செங்கோடு இடைக்கழி தண்டலை களர் செங்காடு குறுக்கை புறம்பயம் அமர்வோனே
சிறுக் கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கு(ம்) தேர் அனிகப்படை கொண்டு
அமர் செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை உருவானோன் செருக்கும் சூர் அகலத்தை இடந்து
உயிர் குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள் திருச்செந்தூர் நகரிக்குள் விளங்கிய பெருமாளே.
சூதாடும் கருவியைப் போன்று, நிமிர்ந்து நிற்கும் மார்பகங்களை நெஞ்சின் மீது உடைய முண்டைகள். கரும்பின் சாற்றுடன் அரைத்து வைத்துள்ள (மருந்து) உருண்டைகளை நிழலில் உலர்த்தி, வாசனை திரவியங்கள் பலவும் தடவி பின்னர், நெருங்கிப் படுக்கையில் வெற்றிலையின் புறத்தில் (அந்த மருந்தை) ஒளித்து வந்தவருக்கு அன்பு காட்டிக் கொடுத்து, அதன் பிறகு, இங்கு இருக்கும் என்னை நீங்கள் நினைப்பதே இல்லை, மெச்சும் இதமான சொற்களைப் பேசுவதில்லை என்று கூறி, (வந்தவர்) தமது மயக்கத்தில் விழுவதைப் பார்த்து, மோக வலைக்குள் அவர் அழுந்தும்படி விடுக்கின்ற பாவிகளான வேசிகள். மனதை உருக்கும் மாமிசப் பிண்டங்கள் போன்றவரது உலோப குணத்தில் நான் சிக்குண்டு அலைச்சல் அடையாத வண்ணம் அழிவில்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்துக்களையும், வாசம் மிகுந்த கடப்ப மாலையையும், திருமுகங்களின் ஒளியையும் நாள்தோறும் நான் என் மனக் கண்ணில் நினைக்கும்படி அருள் புரிவாயாக. கரிய பரிசுத்தமான கழுத்தை உடைய சிவபெருமானது அரிய மலையாகிய கயிலையை எடுத்த தோள்களை உடையவனும், (உடைந்த கொம்புகள் தனது) மார்பில் பொருந்த வந்த (அஷ்ட திக்கஜங்கள் ஆகிய) எட்டு யானைகளை வென்றவனுமாகிய அரக்கன் ராவணனைக் கொன்ற இணையற்ற தோள் வலிமை பெற்ற (ராமன்) திருமாலின் மருகனே, பெருமை வாய்ந்த தஞ்சாவூர், சிக்கல், திருவலஞ்சுழி, திருச்செங்கோடு, திருவிடைக்கழி, தண்டலைநீணெறி, திருக்களர், திருச்செங்காட்டங்குடி, திருக்குறுக்கை, திருப்புறம்பயம் என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே, சிறிய கண்களையும், மிகுந்த மதத்தையும் உடைய யானை, குதிரை, நடத்தப்படும் தேர், காலாட்படை (என்னும் நால்வகைப்) படைகளையும் கொண்டு, போர் புரிந்தவனும், பாதகனும், அநீதி செய்பவனும், வஞ்சகமே உருக் கொண்டவனும், அகங்காரம் மிக்கவனும் ஆகிய சூரனுடைய மார்பைப் பிளந்து, அவனுடைய உயிரைக் குடித்த கூரிய சக்திவேலைக் கையிலேந்தி அமர்ந்து, அருள்மிகு திருச்செந்தூர் நகரில் விளங்கும் பெருமாளே.
நிறுக்கும் சூது அ(ன்)ன மெய்த் தன முண்டைகள் ... சூதாடும் கருவியைப் போன்று, நிமிர்ந்து நிற்கும் மார்பகங்களை நெஞ்சின் மீது உடைய முண்டைகள். கருப்பன் சாறொடு அரைத்து உள உண்டைகள் நிழல் கண்காண உணக்கி மணம் பல தடவா ... கரும்பின் சாற்றுடன் அரைத்து வைத்துள்ள (மருந்து) உருண்டைகளை நிழலில் உலர்த்தி, வாசனை திரவியங்கள் பலவும் தடவி மேல் நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம் ஒளித்து அன்பாக அளித்த பின் ... பின்னர், நெருங்கிப் படுக்கையில் வெற்றிலையின் புறத்தில் (அந்த மருந்தை) ஒளித்து வந்தவருக்கு அன்பு காட்டிக் கொடுத்து, அதன் பிறகு, இங்கு எனை நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம் சொ(ல்)லி என ஓதி ... இங்கு இருக்கும் என்னை நீங்கள் நினைப்பதே இல்லை, மெச்சும் இதமான சொற்களைப் பேசுவதில்லை என்று கூறி, உறக் கண்டு ஆசை வலைக்குள் அழுந்திட விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை உருக்கும் தூவைகள் செட்டை குணம் தனில் உழலாமே ... (வந்தவர்) தமது மயக்கத்தில் விழுவதைப் பார்த்து, மோக வலைக்குள் அவர் அழுந்தும்படி விடுக்கின்ற பாவிகளான வேசிகள். மனதை உருக்கும் மாமிசப் பிண்டங்கள் போன்றவரது உலோப குணத்தில் நான் சிக்குண்டு அலைச்சல் அடையாத வண்ணம் உலப்பு இல் ஆறு எ(ன்)னு(ம்) அக்கரமும் கமழ் கடப்பம் தாரும் முக ப்ரபையும் தினம் உளத்தின் பார்வை இடத்தில் நினைந்திட அருள்வாயே ... அழிவில்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்துக்களையும், வாசம் மிகுந்த கடப்ப மாலையையும், திருமுகங்களின் ஒளியையும் நாள்தோறும் நான் என் மனக் கண்ணில் நினைக்கும்படி அருள் புரிவாயாக. கறுக்கும் தூய மிடற்றன் அரும் சிலை எடுக்கும் தோளன் இறத்து அமர் எண் கரி கடக்கும் தானவனைக் கொல் அரும் புயன் மருகோனே ... கரிய பரிசுத்தமான கழுத்தை உடைய சிவபெருமானது அரிய மலையாகிய கயிலையை எடுத்த தோள்களை உடையவனும், (உடைந்த கொம்புகள் தனது) மார்பில் பொருந்த வந்த (அஷ்ட திக்கஜங்கள் ஆகிய) எட்டு யானைகளை வென்றவனுமாகிய அரக்கன் ராவணனைக் கொன்ற இணையற்ற தோள் வலிமை பெற்ற (ராமன்) திருமாலின் மருகனே, கனத் தஞ்சா புரி சிக்கல் வலம்சுழி திருச்செங்கோடு இடைக்கழி தண்டலை களர் செங்காடு குறுக்கை புறம்பயம் அமர்வோனே ... பெருமை வாய்ந்த தஞ்சாவூர், சிக்கல், திருவலஞ்சுழி, திருச்செங்கோடு, திருவிடைக்கழி, தண்டலைநீணெறி, திருக்களர், திருச்செங்காட்டங்குடி, திருக்குறுக்கை, திருப்புறம்பயம் என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே, சிறுக் கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கு(ம்) தேர் அனிகப்படை கொண்டு ... சிறிய கண்களையும், மிகுந்த மதத்தையும் உடைய யானை, குதிரை, நடத்தப்படும் தேர், காலாட்படை (என்னும் நால்வகைப்) படைகளையும் கொண்டு, அமர் செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை உருவானோன் செருக்கும் சூர் அகலத்தை இடந்து ... போர் புரிந்தவனும், பாதகனும், அநீதி செய்பவனும், வஞ்சகமே உருக் கொண்டவனும், அகங்காரம் மிக்கவனும் ஆகிய சூரனுடைய மார்பைப் பிளந்து, உயிர் குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள் திருச்செந்தூர் நகரிக்குள் விளங்கிய பெருமாளே. ... அவனுடைய உயிரைக் குடித்த கூரிய சக்திவேலைக் கையிலேந்தி அமர்ந்து, அருள்மிகு திருச்செந்தூர் நகரில் விளங்கும் பெருமாளே.