விடமும் வேல் அ(ன்)ன மலர் அ(ன்)ன விழிகளும் இரதமே தரும் அமுது எனும் மொழிகளும்
விரகினால் எழும் இரு தன வகைகளும் இதம் ஆடி
மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர் வினையும் ஆவியும் உடன் இரு வலை இடை வெளியிலே பட விசிறிய விஷமிகளுடன் மேவா இடர் உறாது
உனை நினைபவர் துணை கொள்ள இனிமை போல் எழு பிறவி எனும் உவரியின் இடை கெடாது இனி இரு வினை இழிவினில் அழியாதே
இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய இறை
இசையில் நாள் தொறும் நின் ஆறிரு புயம் என உரை செய அருள்வாயே
படரும் மார்பினில் இருபது புயம் அதொடு அரிய மாமணி முடி ஒளிர் ஒரு பது படியிலே விழ ஒரு கணை தொடுபவர்
இடம் ஆராய் பரவை ஊடு எரி பகழியை விடுபவர்
பரவுவார் வினை கெட அருள் உதவியே பரவு பால் கடல் அரவு அணை துயில்பவர் மருகோனே
அடரவே வரும் அசுரர்கள் குருதியை அரகரா என அலகைகள் பலி உண்ண
அலையும் வேலையும் அலறிட எதிர் பொரு மயில் வீரா
அமரர் ஆதியர் இடர் பட அடர் தரு கொடிய தானவர் திரிபுரம் எரி செய்த அதிகை மா நகர் மருவிய
சசி மகள் பெருமாளே.
விஷமும், வேலும் போன்றனவாகிய, மலரை ஒத்த கண்களும், ருசியைத் தரும் அமுதம் போல் இனிய பேச்சுக்களும், உற்சாகத்தால் வளர்ந்துள்ள இரு மார்பகங்களும் இன்பம் தருவனவாய்க் கொண்டு, மிக்க அகங்காரத்தையும் அழகு நலத்தையும் உடையவர்களின் பெரிய வலையில் என் முன்வினையும், உயிரும் ஒருசேர பகிரங்கமாகச் சிக்கும்படி (அந்த வலையை) வீசுகின்ற விஷமிகளாகிய வேசிகளுடன் சேர்ந்து துன்பப்படாமல், உன்னைத் தியானிப்பவர்களின் துணையைப் பெறுதற்கு, இன்பம் போலக் காணப்படும் ஏழு பிறவிகள் என்ற கடலிடையே அகப்பட்டு அழியாமல், இனியேனும் இரு வினை (நல்வினை, தீவினை) என்கின்ற இழிந்த நிலையில் அழியாமல், தேவர்கள், முனிவர்கள், விண்ணுலக அரசனான இந்திரனின் துன்பங்கள் தொலைய அருள் புரிந்த இறைவனே, கீதத்துடன் தினமும், உனது பன்னிரண்டு புயங்களைப் போற்றிச் செய்து உரைக்க (எனக்கும்) அருள் புரிவாயாக. பரவி அகன்றுள்ள மார்பின் பக்கத்தில் உள்ள (ராவணனது) இருபது புயங்களும், அருமையான சிறந்த ரத்தினக் கிரீடங்கள் விளங்கும் ஒப்பற்ற பத்து தலைகளும் பூமியில் அறுந்து விழும்படி நிகரற்ற அம்பைச் செலுத்தியவரும், சந்தர்ப்பத்தை ஆராய்ந்தறிந்து கடலின் மீது நெருப்பு வீசும் அம்பை விடுத்தவரும், தம்மைப் போற்றும் அடியவர்களின் வினைகள் கெட அருள் பாலித்து, பரந்துள்ள திருப்பாற்கடலில் பாம்பாகிய ஆதிசேஷனின் மேல் துயில்பவருமான திருமாலின் மருகனே, நெருங்கி வந்த அசுரர்களின் ரத்தத்தை அரகரா என்று கூவி பேய்கள் உணவாக உண்ண, அலைகள் வீசும் கடலும் கூச்சலிட, சண்டை செய்த மயில் வீரனே, தேவர்கள் முதலானோர் துன்பப்படும்படி நெருங்கி எதிர்த்த கொடுமையான அசுரர்கள் (வாழ்ந்திருந்த) திரிபுரங்களை எரித்த திருவதிகை என்னும் பெரிய ஊரில் வீற்றிருப்பவனே, (இந்திரன் மனைவி) சசியின் மகளான தேவயானையின் பெருமாளே.
விடமும் வேல் அ(ன்)ன மலர் அ(ன்)ன விழிகளும் இரதமே தரும் அமுது எனும் மொழிகளும் ... விஷமும், வேலும் போன்றனவாகிய, மலரை ஒத்த கண்களும், ருசியைத் தரும் அமுதம் போல் இனிய பேச்சுக்களும், விரகினால் எழும் இரு தன வகைகளும் இதம் ஆடி ... உற்சாகத்தால் வளர்ந்துள்ள இரு மார்பகங்களும் இன்பம் தருவனவாய்க் கொண்டு, மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர் வினையும் ஆவியும் உடன் இரு வலை இடை வெளியிலே பட விசிறிய விஷமிகளுடன் மேவா இடர் உறாது ... மிக்க அகங்காரத்தையும் அழகு நலத்தையும் உடையவர்களின் பெரிய வலையில் என் முன்வினையும், உயிரும் ஒருசேர பகிரங்கமாகச் சிக்கும்படி (அந்த வலையை) வீசுகின்ற விஷமிகளாகிய வேசிகளுடன் சேர்ந்து துன்பப்படாமல், உனை நினைபவர் துணை கொள்ள இனிமை போல் எழு பிறவி எனும் உவரியின் இடை கெடாது இனி இரு வினை இழிவினில் அழியாதே ... உன்னைத் தியானிப்பவர்களின் துணையைப் பெறுதற்கு, இன்பம் போலக் காணப்படும் ஏழு பிறவிகள் என்ற கடலிடையே அகப்பட்டு அழியாமல், இனியேனும் இரு வினை (நல்வினை, தீவினை) என்கின்ற இழிந்த நிலையில் அழியாமல், இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய இறை ... தேவர்கள், முனிவர்கள், விண்ணுலக அரசனான இந்திரனின் துன்பங்கள் தொலைய அருள் புரிந்த இறைவனே, இசையில் நாள் தொறும் நின் ஆறிரு புயம் என உரை செய அருள்வாயே ... கீதத்துடன் தினமும், உனது பன்னிரண்டு புயங்களைப் போற்றிச் செய்து உரைக்க (எனக்கும்) அருள் புரிவாயாக. படரும் மார்பினில் இருபது புயம் அதொடு அரிய மாமணி முடி ஒளிர் ஒரு பது படியிலே விழ ஒரு கணை தொடுபவர் ... பரவி அகன்றுள்ள மார்பின் பக்கத்தில் உள்ள (ராவணனது) இருபது புயங்களும், அருமையான சிறந்த ரத்தினக் கிரீடங்கள் விளங்கும் ஒப்பற்ற பத்து தலைகளும் பூமியில் அறுந்து விழும்படி நிகரற்ற அம்பைச் செலுத்தியவரும், இடம் ஆராய் பரவை ஊடு எரி பகழியை விடுபவர் ... சந்தர்ப்பத்தை ஆராய்ந்தறிந்து கடலின் மீது நெருப்பு வீசும் அம்பை விடுத்தவரும், பரவுவார் வினை கெட அருள் உதவியே பரவு பால் கடல் அரவு அணை துயில்பவர் மருகோனே ... தம்மைப் போற்றும் அடியவர்களின் வினைகள் கெட அருள் பாலித்து, பரந்துள்ள திருப்பாற்கடலில் பாம்பாகிய ஆதிசேஷனின் மேல் துயில்பவருமான திருமாலின் மருகனே, அடரவே வரும் அசுரர்கள் குருதியை அரகரா என அலகைகள் பலி உண்ண ... நெருங்கி வந்த அசுரர்களின் ரத்தத்தை அரகரா என்று கூவி பேய்கள் உணவாக உண்ண, அலையும் வேலையும் அலறிட எதிர் பொரு மயில் வீரா ... அலைகள் வீசும் கடலும் கூச்சலிட, சண்டை செய்த மயில் வீரனே, அமரர் ஆதியர் இடர் பட அடர் தரு கொடிய தானவர் திரிபுரம் எரி செய்த அதிகை மா நகர் மருவிய ... தேவர்கள் முதலானோர் துன்பப்படும்படி நெருங்கி எதிர்த்த கொடுமையான அசுரர்கள் (வாழ்ந்திருந்த) திரிபுரங்களை எரித்த திருவதிகை என்னும் பெரிய ஊரில் வீற்றிருப்பவனே, சசி மகள் பெருமாளே. ... (இந்திரன் மனைவி) சசியின் மகளான தேவயானையின் பெருமாளே.