பஞ்ச பாதகம் உறு
பிறை எயிறு
எரி குஞ்சி
கூர் விட(ம்) மதர் விழி
பிலவக பங்க வாள் முகம்
முடுகிய நெடுகிய திரிசூலம்
பந்த பாசமும் மருவிய கர தலம்
மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு
பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன்
அஞ்சவே வரும் அவதரம் அதில்
ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும்
அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ
அண்ட கோளகை வெடிபட இடிபட
எண் திசா முகம் மடமட நடம் இடும்
அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும்
மஞ்சு போல் வளர் அளகமும்
இளகிய ரஞ்சித அம்ருத வசனமும்
நிலவு என வந்த தூய வெண் முறுவலும்
இருகுழை அளவோடும் மன்றல் வாரிச நயனமும்
அழகிய குன்ற வாழ்நர் தம் மடமகள்
தடமுலை மந்தர அசல மிசை துயில் அழகிய மணவாளா
செம் சொல் மா திசை வட திசை குட திசை
விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து
திங்கள் வேணியர் பல தளி தொழுது
உயர் மக மேரு செண்டு மோதினர் அரசருள் அதிபதி
தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு
செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே.
ஐந்து பாதகமும் செய்பவரைத் தாக்கும் (யமன்), பிறைச் சந்திரன் போல் (வெளுப்பும், வளைவும்) உள்ள பற்களுடன், நெருப்புப் போன்ற தலை மயிருடன், கொடிய விஷம் ததும்பும் கண்களுடன், குரங்கைப் போன்ற பயங்கர ஒளிகொண்ட முகத்துடன், விரைந்து செல்ல வல்ல நீண்ட திரிசூலத்துடன், கட்டுவதற்கான பாசக்கயிற்றைக் கொண்டுள்ள கையினனாக, மிகுத்து நீண்ட கரிய மேகம் போன்ற உருவத்துடன் அழகு இல்லாத ஓர் எருமையின் முதுகில் ஏறி வருகின்ற யமராஜன் யான் பயப்படும்படியாக வருகின்ற அந்தச் சமயத்தில் ஒப்பற்ற அடைக்கலமாய் தலைமுறை தலைமுறையாக உனது திருவருளைப் பெற விரும்பும் அன்பு கொண்டு உன் திருவடியைப் புகழும் அடிமையாகிய என் எதிரே நீ, அண்ட முகடு வெடி படவும், இடி படவும், எட்டுத் திக்குக்களும் மடமட என்று முறியும்படியாகவும் நடனம் செய்யும் அந்த உக்கிரமான மயிலின் மேல் ஏறி அன்புடன் வரவேண்டும். (கரிய) மேகம்போல் வளர்ந்துள்ள கூந்தலும், மெல்லிய இன்பகரமான அமிர்தம் போன்ற பேச்சும், நிலவைப் போல் விளங்கும் பரிசுத்த வெண்மையான பற்களும், இருசெவிகளின் அளவும் ஓடுகின்ற நறு மணம் உள்ள தாமரை போன்ற கண்களும் உடையவளாக அழகுள்ள குன்றில் வாழும் வேடர்களின் இளம்பெண் வள்ளியின் பருத்த மார்பகங்களாகிய மந்தர மலை மீது தூங்கும் அழகிய கணவனே, தமிழ் மொழி விளங்கும் சிறந்த தெற்கு திசை, வடதிசை, மேற்கு திசை, மேலான கிழக்கு திசை முதலிய திக்குகள் எல்லாவற்றிலும் போர் செய்து, நிலவை அணிந்த சடை முடியராகிய சிவபெருமானுடைய பல கோயில்களையும் தொழுது, உயர்ந்த பெரிய மேரு மலையின் மீது செண்டை எறிந்த சக்கரவர்த்தியே, தொண்டர் முதலானோர் வழிவழி அடிமையாக இருந்து முத்தி பெற அருளிய திருச்செந்தூரில் இனிது வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே.
பஞ்ச பாதகம் உறு ... ஐந்து பாதகமும் செய்பவரைத் தாக்கும் (யமன்), பிறை எயிறு ... பிறைச் சந்திரன் போல் (வெளுப்பும், வளைவும்) உள்ள பற்களுடன், எரி குஞ்சி ... நெருப்புப் போன்ற தலை மயிருடன், கூர் விட(ம்) மதர் விழி ... கொடிய விஷம் ததும்பும் கண்களுடன், பிலவக பங்க வாள் முகம் ... குரங்கைப் போன்ற பயங்கர ஒளிகொண்ட முகத்துடன், முடுகிய நெடுகிய திரிசூலம் ... விரைந்து செல்ல வல்ல நீண்ட திரிசூலத்துடன், பந்த பாசமும் மருவிய கர தலம் ... கட்டுவதற்கான பாசக்கயிற்றைக் கொண்டுள்ள கையினனாக, மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு ... மிகுத்து நீண்ட கரிய மேகம் போன்ற உருவத்துடன் பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன் ... அழகு இல்லாத ஓர் எருமையின் முதுகில் ஏறி வருகின்ற யமராஜன் அஞ்சவே வரும் அவதரம் அதில் ... யான் பயப்படும்படியாக வருகின்ற அந்தச் சமயத்தில் ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும் ... ஒப்பற்ற அடைக்கலமாய் தலைமுறை தலைமுறையாக உனது திருவருளைப் பெற விரும்பும் அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ ... அன்பு கொண்டு உன் திருவடியைப் புகழும் அடிமையாகிய என் எதிரே நீ, அண்ட கோளகை வெடிபட இடிபட ... அண்ட முகடு வெடி படவும், இடி படவும், எண் திசா முகம் மடமட நடம் இடும் ... எட்டுத் திக்குக்களும் மடமட என்று முறியும்படியாகவும் நடனம் செய்யும் அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும் ... அந்த உக்கிரமான மயிலின் மேல் ஏறி அன்புடன் வரவேண்டும். மஞ்சு போல் வளர் அளகமும் ... (கரிய) மேகம்போல் வளர்ந்துள்ள கூந்தலும், இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் ... மெல்லிய இன்பகரமான அமிர்தம் போன்ற பேச்சும், நிலவு என வந்த தூய வெண் முறுவலும் ... நிலவைப் போல் விளங்கும் பரிசுத்த வெண்மையான பற்களும், இருகுழை அளவோடும் மன்றல் வாரிச நயனமும் ... இருசெவிகளின் அளவும் ஓடுகின்ற நறு மணம் உள்ள தாமரை போன்ற கண்களும் உடையவளாக அழகிய குன்ற வாழ்நர் தம் மடமகள் ... அழகுள்ள குன்றில் வாழும் வேடர்களின் இளம்பெண் வள்ளியின் தடமுலை மந்தர அசல மிசை துயில் அழகிய மணவாளா ... பருத்த மார்பகங்களாகிய மந்தர மலை மீது தூங்கும் அழகிய கணவனே, செம் சொல் மா திசை வட திசை குட திசை ... தமிழ் மொழி விளங்கும் சிறந்த தெற்கு திசை, வடதிசை, மேற்கு திசை, விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து ... மேலான கிழக்கு திசை முதலிய திக்குகள் எல்லாவற்றிலும் போர் செய்து, திங்கள் வேணியர் பல தளி தொழுது ... நிலவை அணிந்த சடை முடியராகிய சிவபெருமானுடைய பல கோயில்களையும் தொழுது, உயர் மக மேரு செண்டு மோதினர் அரசருள் அதிபதி ... உயர்ந்த பெரிய மேரு மலையின் மீது செண்டை எறிந்த சக்கரவர்த்தியே, தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு ... தொண்டர் முதலானோர் வழிவழி அடிமையாக இருந்து முத்தி பெற அருளிய செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே. ... திருச்செந்தூரில் இனிது வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே.