பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி
பறியக் கை சொறியப் பல் வெளியாகி
படலைக்கு விழி கெட்ட குருடு உற்று
மிக நெக்க பழம் உற்று நரை கொக்கின் நிறமாகி
விசை பெற்று வரு பித்தம் வளியைக் கண் நிலை கெட்டு
மெலிவு உற்று விரல் பற்று தடியோடே
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து
உன் அருள் வைப்பது ஒரு நாளே
அசைவு அற்ற நிருதர்க்கு மடி உற்ற பிரியத்தில் அடல் வஜ்ர கரன் மற்றும் உள வானோர்
அளவு அற்ற மலர் விட்டு நிலம் உற்று மறையச் செய் அதுலச் சமர வெற்றி உடையோனே
வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற வடிவு உற்ற முகில் கிட்ணன் மருகோனே
மதுரச் செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர் வளர்
விர்த்த கிரி உற்ற பெருமாளே.
ஈரப்பசையற்ற இவ்வுடல் வற்றிப் போகச் செய்த வினை முதிர்ச்சி அடைந்து, நடையும் தள்ளாடுதலை அடைந்து, நிலை தடுமாறி, கை சொறிதலையே தொழிலாகக் கொண்டு, (ஈறுகள் தேய்தலால்) பற்கள் வெளியே நீண்டு வர, கண் பூ விழுந்து மறைப்பதால் பார்வை இழந்து குருடாகி, மிகவும் நெகிழ்ந்து பழம் போலப் பழுத்து, மயிர் நரைத்து கொக்கைப் போல் வெண்ணிறமாகி, வேகத்துடன் வருகின்ற பித்தத்தாலும், வாயுவினாலும், கண் இடமும் நிலையும் தடுமாறிக் கெட்டு, உடல் மெலிதலை அடைந்து, கைவிரல்களினால் பிடிக்கப்பட்ட தடியுடன், வெளியே தனியனாக நிற்கின்ற தன்மை மிகும்படியாக துன்பமே கொண்ட பிறப்பைத் தவிர்த்து, உன் திருவருளைத் தருவதும் ஒரு நாள் உண்டாகுமோ? கலக்கம் இல்லாத அசுரர்கள் மடிந்து இறந்தொழிய, அதனால் மகிழ்ந்த, வலிய வஜ்ராயுதக் கையனனாகிய இந்திரனும் மற்றும் உள்ள தேவர்களும், பூக்களைப் பொழிந்து பூமி முழுதும் மறையும்படிச் செய்கின்ற நிகர் இல்லாதவனே, போரில் வெற்றி உடையவனே, பழிப்புக்கு இடம் இல்லாமல், முடிவில்லாது வளர்ந்திருந்த (பாண்டவர் மீது இருந்த) நேசத்தின் காரணமாக, கணக்கற்ற வடிவங்களைக் கொண்ட மேக நிறக் கண்ணனது மருகனே, இனிமை தரும் செம்மையான புகழ் மொழிகளைச் சொல்லி உனது திருவருளைப் பெற்ற சிவ பக்தர்கள் நிரம்பியுள்ள முது குன்றம் எனப்படும் விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி ... ஈரப்பசையற்ற இவ்வுடல் வற்றிப் போகச் செய்த வினை முதிர்ச்சி அடைந்து, நடையும் தள்ளாடுதலை அடைந்து, பறியக் கை சொறியப் பல் வெளியாகி ... நிலை தடுமாறி, கை சொறிதலையே தொழிலாகக் கொண்டு, (ஈறுகள் தேய்தலால்) பற்கள் வெளியே நீண்டு வர, படலைக்கு விழி கெட்ட குருடு உற்று ... கண் பூ விழுந்து மறைப்பதால் பார்வை இழந்து குருடாகி, மிக நெக்க பழம் உற்று நரை கொக்கின் நிறமாகி ... மிகவும் நெகிழ்ந்து பழம் போலப் பழுத்து, மயிர் நரைத்து கொக்கைப் போல் வெண்ணிறமாகி, விசை பெற்று வரு பித்தம் வளியைக் கண் நிலை கெட்டு ... வேகத்துடன் வருகின்ற பித்தத்தாலும், வாயுவினாலும், கண் இடமும் நிலையும் தடுமாறிக் கெட்டு, மெலிவு உற்று விரல் பற்று தடியோடே ... உடல் மெலிதலை அடைந்து, கைவிரல்களினால் பிடிக்கப்பட்ட தடியுடன், வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து ... வெளியே தனியனாக நிற்கின்ற தன்மை மிகும்படியாக துன்பமே கொண்ட பிறப்பைத் தவிர்த்து, உன் அருள் வைப்பது ஒரு நாளே ... உன் திருவருளைத் தருவதும் ஒரு நாள் உண்டாகுமோ? அசைவு அற்ற நிருதர்க்கு மடி உற்ற பிரியத்தில் அடல் வஜ்ர கரன் மற்றும் உள வானோர் ... கலக்கம் இல்லாத அசுரர்கள் மடிந்து இறந்தொழிய, அதனால் மகிழ்ந்த, வலிய வஜ்ராயுதக் கையனனாகிய இந்திரனும் மற்றும் உள்ள தேவர்களும், அளவு அற்ற மலர் விட்டு நிலம் உற்று மறையச் செய் அதுலச் சமர வெற்றி உடையோனே ... பூக்களைப் பொழிந்து பூமி முழுதும் மறையும்படிச் செய்கின்ற நிகர் இல்லாதவனே, போரில் வெற்றி உடையவனே, வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற வடிவு உற்ற முகில் கிட்ணன் மருகோனே ... பழிப்புக்கு இடம் இல்லாமல், முடிவில்லாது வளர்ந்திருந்த (பாண்டவர் மீது இருந்த) நேசத்தின் காரணமாக, கணக்கற்ற வடிவங்களைக் கொண்ட மேக நிறக் கண்ணனது மருகனே, மதுரச் செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர் வளர் ... இனிமை தரும் செம்மையான புகழ் மொழிகளைச் சொல்லி உனது திருவருளைப் பெற்ற சிவ பக்தர்கள் நிரம்பியுள்ள விர்த்த கிரி உற்ற பெருமாளே. ... முது குன்றம் எனப்படும் விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.