சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
761   ஸ்ரீ முஷ்டம் திருப்புகழ் ( - வாரியார் # 771 )  

சரம்வெற் றிக்க

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனனத் தத்தன தானன தானன
     தனனத் தத்தன தானன தானன
          தனனத் தத்தன தானன தானன ...... தனதான

சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி
     சிலைவட் டப்புரு வார்குழல் கார்முகில்
          தனமுத் துக்கிரி யாமெனு நூலிடை ...... மடவார்கள்
சனுமெத் தப்பரி வாகிய மாமய
     லிடுமுத் தித்திகழ் மால்கொடு பாவையர்
          தகுதத் தக்கிட தோதகு தீதென ...... விளையாடும்
விரகத் துர்க்குண வேசைய ராசையர்
     பணமெத் தப்பறி காரிகள் மாறிகள்
          விதமெத் தக்கொடு மேவிகள் பாவிகள் ...... அதிபோக
மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள்
     கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள்
          விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள் ...... உறவாமோ
பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட
     லெரிபட் டுச்சரு காய்விழ வேநகை
          புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட ...... மொருமாது
புகழ்சத் திச்சிலு காவண மீதுறை
     சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி
          புவனத் தைப்பரி வாய்முத லீனுமை ...... யருள்பாலா
திரையிற் பொற்கிரி யாடவும் வாசுகி
     புனைவித் துத்தலை நாளமு தார்சுவை
          சிவபத் தர்க்கிது வாமென வேபகி ...... ரரிராமர்
திருவுற் றுப்பணி யாதிவ ராகர்த
     மகளைப் பொற்றன வாசையொ டாடிய
          திருமுட் டப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
Easy Version:
சரம் வெற்றிக் கயலாம் எனும் வேல் விழி சிலை வட்டப்
புருவார் குழல் கார்முகில் தனம் முத்துக் கிரியாம் எனும் நூல்
இடை மடவார்கள்
சனு மெத்தப் பரிவாகிய மா மயல் இடு(ம்) முத்தித் திகழ் மால்
கொடு பாவையர் தகுதத் தக்கிட தோதகு தீதென
விளையாடும் விரகத் துர்க்குண வேசையர் ஆசையர்
பண(ம்) மெத்தப் பறிகாரிகள் மாறிகள் வித மெத்தக் கொடு
மேவிகள் பாவிகள் அதி போக மெலிவுற்றுக் குறி நாறிகள்
பீறிகள்
கலகத்தைச் செயு(ம்) மோடிகள் பீடிகள் விருதிட்டுக் குடி
கேடிகள் சேடிகள் உறவாமோ
பொரு வெற்றிக் கழை வார் சிலையான் உடல் எரி பட்டுச்
சருகாய் விழவே நகை புகுவித்தப் பிறை வாழ் சடையான்
இடம் ஒரு மாது
புகழ் சத்திச் சிலுகா வ(ண்)ண(ம்) மீதுறை சிவ பத்திப்
பரமேஸ்வரியாள் திரி புவனத்தைப் பரிவாய் முதல் ஈன் உமை
அருள் பாலா
திரையில் பொன் கிரி ஆடவும் வாசுகி புனைவித்துத் தலை
நாள் அமுது ஆர் சுவை சிவ பத்தர்க்கு இது ஆம் எனவே
பகிர் அரி ராமர் திரு உற்றுப் பணி ஆதிவராகர் தம் மகளை
பொன் தன ஆசையொடு ஆடிய திருமுட்டப் பதி வாழ்
முருகா சுரர் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

சரம் வெற்றிக் கயலாம் எனும் வேல் விழி சிலை வட்டப்
புருவார் குழல் கார்முகில் தனம் முத்துக் கிரியாம் எனும் நூல்
இடை மடவார்கள்
... வெற்றியையே தரும் அம்பு, கயல் மீன் என்று
உவமிக்கப்படும் வேல் போன்ற கண்கள், வில்லைப் போன்று வட்டமாக
வளைந்த புருவம், மேகம் போன்று கரிய கூந்தல், முத்து மாலையை
அணிந்ததும் மலை போன்றதும் ஆகிய மார்பகங்கள், நூல் போன்று
மெல்லிய இடுப்பு இவற்றைக் கொண்ட விலைமாதர்கள்.
சனு மெத்தப் பரிவாகிய மா மயல் இடு(ம்) முத்தித் திகழ் மால்
கொடு பாவையர் தகுதத் தக்கிட தோதகு தீதென
விளையாடும் விரகத் துர்க்குண வேசையர் ஆசையர்
... காம
விளையாட்டில் அதிக அன்பு கூடுகின்ற பெரிய மயக்கத்தைத் தரும்,
முத்தம் விளைவிக்கும் ஆசையோடு கூடிய பெண்கள். தகுதத் தக்கிட
தோதகு தீதென்ற தக்க ஒலிகளோடு நடனமாடி விளையாடுகின்ற
சாமர்த்தியம் உள்ள தீய ஒழுக்கம் கொண்ட பொது மகளிர். ஆசை
காட்டுபவர்கள்.
பண(ம்) மெத்தப் பறிகாரிகள் மாறிகள் வித மெத்தக் கொடு
மேவிகள் பாவிகள் அதி போக மெலிவுற்றுக் குறி நாறிகள்
பீறிகள்
... பணத்தை அதிகமாகப் பறிக்கின்றவர்கள். அடிக்கடி
குணம் மாறுபவர்கள். பல விதமான நடையுடை பாவனைகளை
மேற்கொள்ளுபவர்கள். அதிக போகத்தை அனுபவிப்பதால் உடல்
மெலிவடைந்து, குறி துர் நாற்றமும் கிழிவும் உடையவர்கள்.
கலகத்தைச் செயு(ம்) மோடிகள் பீடிகள் விருதிட்டுக் குடி
கேடிகள் சேடிகள் உறவாமோ
... கலகமே செய்யும் மூதேவிகள்.
பீடித்துத் துன்புறுத்துபவர்கள். பெருமைப் பேச்சுக்களைப் பேசி குடியைக்
கெடுப்பவர்கள். இளமை உடையவர்கள். இத்தகைய வேசியரது உறவு
எனக்கு நல்லதாகுமா?
பொரு வெற்றிக் கழை வார் சிலையான் உடல் எரி பட்டுச்
சருகாய் விழவே நகை புகுவித்தப் பிறை வாழ் சடையான்
இடம் ஒரு மாது
... காமப் போரில் வெற்றியையே தரும் கரும்பாகிய
நீண்ட வில்லை உடைய மன்மதனின் உடல் எரிந்து உலர்ந்த சருகு போல்
விழும்படி தீச் சிரிப்பைச் செலுத்திய, பிறைச் சந்திரன் வாழும் சடையை
உடைய, சிவபெருமானின் இடப்பாகத்தில் உறையும் ஒப்பற்ற மாது,
புகழ் சத்திச் சிலுகா வ(ண்)ண(ம்) மீதுறை சிவ பத்திப்
பரமேஸ்வரியாள் திரி புவனத்தைப் பரிவாய் முதல் ஈன் உமை
அருள் பாலா
... எல்லாராலும் புகழப்பட்ட பரம சக்தி, நிலை குலையாத
மனப் பான்மையை மேற் கொண்டுள்ள, சிவ பக்தி நிறைந்த
பரமேஸ்வரியாள், மூவுலகங்களையும் அருளுடன் முன்பு
படைத்தவளாகிய உமாதேவி அருளிய குழந்தையே,
திரையில் பொன் கிரி ஆடவும் வாசுகி புனைவித்துத் தலை
நாள் அமுது ஆர் சுவை சிவ பத்தர்க்கு இது ஆம் எனவே
பகிர் அரி ராமர் திரு உற்றுப் பணி ஆதிவராகர் தம் மகளை
...
முன்னொரு காலத்தில் பாற்கடலில் பொன் மலையாகிய மேரு (மத்தாகச்)
சுழன்று ஆடும்படி வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கட்டி, சுவை நிறைந்த
அமுதத்தை சிவ பக்தர்களுக்கு இது உரியதாம் என்று பங்கிட்டுக்
கொடுத்த திருமாலாகிய ராமர், லக்ஷ்மி சென்று பணிந்து பூஜித்த ஆதி
வராகப் பெருமானுடைய மகளாகிய வள்ளியின்
பொன் தன ஆசையொடு ஆடிய திருமுட்டப் பதி வாழ்
முருகா சுரர் பெருமாளே.
... அழகிய மார்பகத்தின் மீது ஆசை
கொண்டு அவளுடன் விளையாடிய, திரு முட்டப் பதியில்
(ஸ்ரீமுஷ்ணத்தில்) வீற்றிருக்கின்ற முருகனே, தேவர்களுடைய
பெருமாளே.

Similar songs:

761 - சரம்வெற் றிக்க (ஸ்ரீ முஷ்டம்)

தனனத் தத்தன தானன தானன
     தனனத் தத்தன தானன தானன
          தனனத் தத்தன தானன தானன ...... தனதான

Songs from this thalam ஸ்ரீ முஷ்டம்

760 - கழைமுத்து மாலை

761 - சரம்வெற் றிக்க

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song