சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு சமயமும்
ஒன்றிலை யென்ற வரும்
பறிதலையரு நின்று கலங்க
விரும்பிய தமிழ்கூறுஞ் சலிகையு
நன்றியும் வென்றியு மங்கள பெருமைகளும்
கனமுங்குணமும்பயில் சரவணமும்
பொறையும்புகழுந்திகழ் தனிவேலும்
விருது துலங்க சிகண்டியில்
அண்டரும் உருகி வணங்கவரும்பதமும்
பல விதரணமுந்திறமுந் தரமும்
தினைபுனமானின் ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து
அடி வருடி மணந்துபுணர்ந்ததுவும்
பல விஜயமும் அன்பின்மொழிந்துமொழிந்து இயல் மறவேனே
கருதியிலங்கை யழிந்துவிடும்படி
அவுணர் அடங்க மடிந்துவிழும்படி
கதிரவ னிந்து விளங்கி வரும்படி விடுமாயன்
கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு
மடுவினில் வந்துதவும்புயல்
இந்திரை கணவன் அரங்க முகுந்தன்
வருஞ்சகடற மோதி
மருது குலுங்கி நலங்க முனிந்திடுவரதன்
அலங்கல் புனைந்தருளுங்குறள் வடிவன்
நெடுங்கடல் மங்க ஒர் அம்பு கை தொடுமீளி மருக
புரந்தரனுந்தவ மொன்றிய பிரமபு ரந்தனிலும்
குக னென்பவர் மனதினிலும்
பரி வொன்றிய மர்ந்தருள் பெருமாளே.
மதப் போராட்டத்தில் ஒருவரை ஒருவர் இகழ்ந்தும், பயந்தும், கோபித்தும் வருபவரான சமயவாதிகளும், தெய்வம் என்ற ஒன்றே இல்லை என்பவர்களும், பறிதலையராம் சமண குருமாரும் - இவ்வாறு யாவரும் நின்று கலங்க, அனைவரும் விரும்பத்தக்க தமிழ்ப்பாடல்களை (திருஞானசம்பந்தராக) கூறும் செல்வாக்கையும், உபகார குணத்தையும், வெற்றியையும், மங்களகரமான பல பெருமைகளையும், சீர்மையையும், நற்குணத்தையும், நீ குழந்தையாய் விளையாடிய சரவணப் பொய்கையையும், உனது பொறுமையையும், புகழையும், விளங்கும் ஒப்பற்ற வேலையும், வெற்றிச் சின்னங்கள் விளங்க மயில் மீது அமர்ந்து தேவர்களும் மனமுருகி வணங்கும்படியாக வரும் திருவடியையும், பலவிதமான கொடைவண்மையையும், உன் சாமர்த்தியத்தையும், தகுதியையும், தினைப்புனத்து மானாகும் வள்ளியின் கஸ்தூரி, குங்குமம் அணிந்த மார்பிலே மயங்கி நொந்து, அவளது திருவடியை வருடி, மணம் செய்து, அவளைக் கலந்து நின்றதையும், மேலும் பல வெற்றிச் செயல்களையும் அன்புடனே பலமுறை சொல்லிச் சொல்லி போற்றி, உன் பெருமையை என்றும் நான் மறக்கமாட்டேன். ராவணனின் பிழையை மனத்தில் எண்ணி, இலங்கை அழிந்து போகும்படியும், அரக்கர் யாவரும் இறந்துவிழும்படியும், சூரியனும், சந்திரனும் பழைமை முறைப்படி ஒளியுடன் வரும்படியும் செய்த திருமால், மதயானை கஜேந்திரன் பயந்து நடுக்கமுற்று வருந்திநின்ற மடுவினிடையே வந்து உதவிய மேகவண்ணப் பெருமான், லக்ஷ்மியின் கணவன், ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட முகுந்தன், தன்னைக் கொல்லவந்த சகடாசுரனை காலால் மோதிக் கொன்றவன், மருதமரம் குலுங்கி நொறுங்கிப்போகக் கோபித்த வரதன், மாலையைச் சூடியருளும் வாமன வடிவ மூர்த்தி, பெரிய கடல் நொந்து வற்றிப் போகுமாறு ஒரு அம்பைக் கையால் தொடுத்த பராக்ரமசாலி ஆகிய திருமாலின் மருகனே, இந்திரன் தவம் சிரத்தையுடன் செய்த பிரமபுரம் என்ற சீகாழிப் பதியிலும், குகனே என்று கூறுபவர் மனத்திலும், அன்போடு பொருந்த வீற்றிருந்து அருளும் பெருமாளே.
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு சமயமும் ... மதப் போராட்டத்தில் ஒருவரை ஒருவர் இகழ்ந்தும், பயந்தும், கோபித்தும் வருபவரான சமயவாதிகளும், ஒன்றிலை யென்ற வரும் ... தெய்வம் என்ற ஒன்றே இல்லை என்பவர்களும், பறிதலையரு நின்று கலங்க ... பறிதலையராம் சமண குருமாரும் - இவ்வாறு யாவரும் நின்று கலங்க, விரும்பிய தமிழ்கூறுஞ் சலிகையு ... அனைவரும் விரும்பத்தக்க தமிழ்ப்பாடல்களை (திருஞானசம்பந்தராக) கூறும் செல்வாக்கையும், நன்றியும் வென்றியு மங்கள பெருமைகளும் ... உபகார குணத்தையும், வெற்றியையும், மங்களகரமான பல பெருமைகளையும், கனமுங்குணமும்பயில் சரவணமும் ... சீர்மையையும், நற்குணத்தையும், நீ குழந்தையாய் விளையாடிய சரவணப் பொய்கையையும், பொறையும்புகழுந்திகழ் தனிவேலும் ... உனது பொறுமையையும், புகழையும், விளங்கும் ஒப்பற்ற வேலையும், விருது துலங்க சிகண்டியில் ... வெற்றிச் சின்னங்கள் விளங்க மயில் மீது அமர்ந்து அண்டரும் உருகி வணங்கவரும்பதமும் ... தேவர்களும் மனமுருகி வணங்கும்படியாக வரும் திருவடியையும், பல விதரணமுந்திறமுந் தரமும் ... பலவிதமான கொடைவண்மையையும், உன் சாமர்த்தியத்தையும், தகுதியையும், தினைபுனமானின் ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து ... தினைப்புனத்து மானாகும் வள்ளியின் கஸ்தூரி, குங்குமம் அணிந்த மார்பிலே மயங்கி நொந்து, அடி வருடி மணந்துபுணர்ந்ததுவும் ... அவளது திருவடியை வருடி, மணம் செய்து, அவளைக் கலந்து நின்றதையும், பல விஜயமும் அன்பின்மொழிந்துமொழிந்து இயல் மறவேனே ... மேலும் பல வெற்றிச் செயல்களையும் அன்புடனே பலமுறை சொல்லிச் சொல்லி போற்றி, உன் பெருமையை என்றும் நான் மறக்கமாட்டேன். கருதியிலங்கை யழிந்துவிடும்படி ... ராவணனின் பிழையை மனத்தில் எண்ணி, இலங்கை அழிந்து போகும்படியும், அவுணர் அடங்க மடிந்துவிழும்படி ... அரக்கர் யாவரும் இறந்துவிழும்படியும், கதிரவ னிந்து விளங்கி வரும்படி விடுமாயன் ... சூரியனும், சந்திரனும் பழைமை முறைப்படி ஒளியுடன் வரும்படியும் செய்த திருமால், கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு ... மதயானை கஜேந்திரன் பயந்து நடுக்கமுற்று வருந்திநின்ற மடுவினில் வந்துதவும்புயல் ... மடுவினிடையே வந்து உதவிய மேகவண்ணப் பெருமான், இந்திரை கணவன் அரங்க முகுந்தன் ... லக்ஷ்மியின் கணவன், ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட முகுந்தன், வருஞ்சகடற மோதி ... தன்னைக் கொல்லவந்த சகடாசுரனை காலால் மோதிக் கொன்றவன், மருது குலுங்கி நலங்க முனிந்திடுவரதன் ... மருதமரம் குலுங்கி நொறுங்கிப்போகக் கோபித்த வரதன், அலங்கல் புனைந்தருளுங்குறள் வடிவன் ... மாலையைச் சூடியருளும் வாமன வடிவ மூர்த்தி, நெடுங்கடல் மங்க ஒர் அம்பு கை தொடுமீளி மருக ... பெரிய கடல் நொந்து வற்றிப் போகுமாறு ஒரு அம்பைக் கையால் தொடுத்த பராக்ரமசாலி ஆகிய திருமாலின் மருகனே, புரந்தரனுந்தவ மொன்றிய பிரமபு ரந்தனிலும் ... இந்திரன் தவம் சிரத்தையுடன் செய்த பிரமபுரம் என்ற சீகாழிப் பதியிலும், குக னென்பவர் மனதினிலும் ... குகனே என்று கூறுபவர் மனத்திலும், பரி வொன்றிய மர்ந்தருள் பெருமாளே. ... அன்போடு பொருந்த வீற்றிருந்து அருளும் பெருமாளே.