தாமரைமலர் மீது அமரும் லக்ஷ்மி தேவியை மார்பிலே தரித்துள்ள திருமாலும், வேதம் சொல்லும் வாய் நான்கு உடையவனான பிரமனும், கூட்டமான தேவர்களின் தலைவனான இந்திரனும், முநிவர்கள் முதலிய யாவரும், இயம்பப்படும் வேதப்பொருளை ஆராய்ந்து கூறும் நூல்களில் ஆராய்ச்சி செய்யாத வலிய அசுரர்கள் செய்யும் போருக்குப் பயந்து, மறைந்து, அச்சத்துடன் வந்து ஒன்று கூடி, நீ, பகைவர்களை அழிக்கவல்ல, ஒரு மாற்றுப் பகைவனை தந்தருள்வாயாக என்று ஈசுவரனைப் பாமாலைகளால் பாடித்தொழுது, திருநீறால் அழகு விளங்கும் திருமேனியனே, தேன் பொதிந்த கொன்றை மலருடனே நீர் அழகுடன் ததும்பும் கங்கையையும், சிறந்த நிலவையும், பாம்பையும், மாதுளம் பூவையும், வில்வ இலையையும், நாவல் இலை, விளா இலை, முதலியன நிறைந்த சடையணியும் எங்கள் பெருமானே, நாங்கள் உய்ந்து போகும் வழி இனி உன்னையன்றி வேறு எது உள்ளது எனச் சொல்லி அருள்க என்று முறையிடவே, நிறைந்த கருணையினால் அந்தச் சிவபெருமான் தந்தருளிய வேலவனே, நீலத் தோகை மயில் மீது ஏறி நீண்ட இந்தப் பூலோகத்துடனே மீதி ஆறு லோகங்களையும் நேராக ஒரே நொடிப் பொழுதிலே சுற்றி வந்தவனே, தேவர்களின் சேனாதிபதி ஆனவனே, உன்னை அன்போடு, மன்மதனைப் போன்ற அழகனே, ஆறு பூரண சந்திரர்களுக்கு சமமான திருமுகங்களை உடையவனே, மணம் நிறைந்து வீசும் கடப்பமாலைகளை அணிந்தவனே, நல்ல திவ்விய ஒளியை உடையவனே என்றெல்லாம் போற்றித் துதிக்காமல் திரிகின்ற வஞ்சகனாகிய என்னைக் காத்தருள்வாயாக. அந்நாளில் அசுரர்களின் தலைவனான சூரன் முதலியவர்களை சம்ஹரித்த கூரிய வேலாயுதத்தை உடையவனே, மேகங்கள் நிறைந்த சீகாழிப்பதியில் வீற்றிருக்கும் தம்பிரானே.