பாடகம் சிலம்போடு செச்சை மணி கோ எனக் கலந்து ஆடு பொன் சரணர்
பாவை சித்திரம் போல்வர் பட்டு உடையின் இடை நூலார் பார பொன் தனம் கோபுரச் சிகரமாம் எனப் படர்ந்த ஏமலிப்பர்
இத(ம்) பாகு நல் கரும்போடு சர்க்கரையின் மொழி மாதர் ஏடகக் குலம் சேரு மைக் குழலொடு ஆடு அளிக் குலம் பாட
நல் தெருவில் ஏகி புட் குலம் போல பற்பல சொல் இசை பாடி ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரு(ம்) முன் பணம் தாரும் இட்டம் என ஏணி வைத்து வந்து ஏற விட்டிடுவர் செயலாமோ
சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம் மாள அட்ட குன்று ஏழு அலைக் கடல்கள் சேர வற்ற நின்று ஆட
இல் கரம் ஈரறு தோள் மேல் சேண் நிலத்தர் பொன் பூவை விட்டு இருடியோர்கள் கட்டியம் பாட எட்டு அரசர் சே செ ஒத்த செம் தாமரைக் கிழவி புகழ் வேலா
அகம் நாடு புனம் காவலுற்ற சுக மோகனத்தி மென் தோளி சித்ர வ(ள்)ளி நாயகிக் கீதம் பாடி நித்தம் அணி புனைவோனே
ஞான வெற்பு உகந்து ஆடும் அத்தர் தையல் நாயகிக்கு நன் பாகர் அக்கு அணியும் நாதர் மெச்ச வந்து ஆடு முத்தம் அருள் பெருமாளே.
கொலுசு, சிலம்பு இவற்றுடன் சிவந்த மணிகள், கோமேதகம் சேர்க்கப்பட்டது போல ஒன்று சேர்ந்து அசைகின்ற அழகிய பாதங்களை உடையவர். சித்திரப் பதுமை போன்றவர்கள். பட்டு உடை அணிந்துள்ள நூல் போல் நுண்ணியதான இடையை உடையவர்கள். கனத்த, அழகிய மார்பகம் கோபுர உச்சி என்று சொல்லும்படியாக வளர்ந்து களிப்பு கொள்பவர்கள். இன்பகரமான வெல்லம் நல்ல சர்க்கரை போல இனிய சொற்களைப் பேசும் மாதர்கள். மலர்க் கூட்டங்களைக் கொண்ட கரிய கூந்தலில் விளையாடும் வண்டுகளின் கூட்டம் பாட, அழகிய தெருக்களில் சென்று, பறவை இனம் போல பல பல சொற்களை அமைந்த ராகங்களைப் பாடி, மிகுந்த முகஸ்துதியான பேச்சுக்களைப் பேசி வஞ்சித்து, இன்ப மொழியால், வாருங்கள், முன்னதாகப் பணத்தைக் கொடுங்கள், உங்கள் அன்பையும் கொடுங்கள் என்று சொல்லி, ஏணி வைத்து ஏறும்படி செய்து (பின்னர் இறங்க முடியாமல்) ஏணியை எடுத்துச் செல்பவர்களாகிய விலைமாதர்களின் செயல்களை நம்புதல் தகுமோ? ஆதிசேஷன் மெலிய, கொடும் பாதகர்களான அசுரர்கள் குலம் மாண்டு ஒழிய, எட்டு மலைகளும் அலை மிகுந்த ஏழு கடல்களும் ஒன்று சேர உலர்ந்து போகும்படியாக நின்று விளையாடிய வேல் ஏந்திய கைகளாகிய பன்னிரண்டு தோளின் மேல் விண்ணுலகத்தினர் பொன் மலரைப் பொழிய, முனிவர்கள் புகழ்ப் பாடல்கள் பாட, எட்டுத் திக்கிலும் உள்ள அரசர்கள் ஜே ஜே என்று தாளம் இட்டு முழங்க, செந்தாமரையில் வாழும் லக்ஷ்மி தேவி புகழும் வேலனே, நீ மனத்தில் விரும்பிச் சென்ற வள்ளி மலையில் இருக்கும் தினைப் புனத்தில் காவல் இருந்தவளும், உன்னைச் சுகமாக மயக்கியவளும், மெல்லிய தோளை உடையவளும் ஆகிய அழகிய வள்ளி நாயகிக்கு இன்பகரமான பாடல்களைப் பாடி, நாள் தோறும் அணிகலன்களை அணிவித்து மகிழ்பவனே, ஞானம் என்னும் மலையில் மகிழ்ந்து விளையாடும் பெருமான், தையல்நாயகி என்னும் திருநாமம் உடைய தேவியை நல்ல தமது பாகத்தில் கொண்டவர், ருத்ராக்ஷ மாலை அணிந்துள்ள சிவபெருமான் மெச்சும்படி வந்து விளையாடி, முத்தம் அவருக்குத் தந்தருளும் பெருமாளே.
பாடகம் சிலம்போடு செச்சை மணி கோ எனக் கலந்து ஆடு பொன் சரணர் ... கொலுசு, சிலம்பு இவற்றுடன் சிவந்த மணிகள், கோமேதகம் சேர்க்கப்பட்டது போல ஒன்று சேர்ந்து அசைகின்ற அழகிய பாதங்களை உடையவர். பாவை சித்திரம் போல்வர் பட்டு உடையின் இடை நூலார் பார பொன் தனம் கோபுரச் சிகரமாம் எனப் படர்ந்த ஏமலிப்பர் ... சித்திரப் பதுமை போன்றவர்கள். பட்டு உடை அணிந்துள்ள நூல் போல் நுண்ணியதான இடையை உடையவர்கள். கனத்த, அழகிய மார்பகம் கோபுர உச்சி என்று சொல்லும்படியாக வளர்ந்து களிப்பு கொள்பவர்கள். இத(ம்) பாகு நல் கரும்போடு சர்க்கரையின் மொழி மாதர் ஏடகக் குலம் சேரு மைக் குழலொடு ஆடு அளிக் குலம் பாட ... இன்பகரமான வெல்லம் நல்ல சர்க்கரை போல இனிய சொற்களைப் பேசும் மாதர்கள். மலர்க் கூட்டங்களைக் கொண்ட கரிய கூந்தலில் விளையாடும் வண்டுகளின் கூட்டம் பாட, நல் தெருவில் ஏகி புட் குலம் போல பற்பல சொல் இசை பாடி ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரு(ம்) முன் பணம் தாரும் இட்டம் என ஏணி வைத்து வந்து ஏற விட்டிடுவர் செயலாமோ ... அழகிய தெருக்களில் சென்று, பறவை இனம் போல பல பல சொற்களை அமைந்த ராகங்களைப் பாடி, மிகுந்த முகஸ்துதியான பேச்சுக்களைப் பேசி வஞ்சித்து, இன்ப மொழியால், வாருங்கள், முன்னதாகப் பணத்தைக் கொடுங்கள், உங்கள் அன்பையும் கொடுங்கள் என்று சொல்லி, ஏணி வைத்து ஏறும்படி செய்து (பின்னர் இறங்க முடியாமல்) ஏணியை எடுத்துச் செல்பவர்களாகிய விலைமாதர்களின் செயல்களை நம்புதல் தகுமோ? சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம் மாள அட்ட குன்று ஏழு அலைக் கடல்கள் சேர வற்ற நின்று ஆட ... ஆதிசேஷன் மெலிய, கொடும் பாதகர்களான அசுரர்கள் குலம் மாண்டு ஒழிய, எட்டு மலைகளும் அலை மிகுந்த ஏழு கடல்களும் ஒன்று சேர உலர்ந்து போகும்படியாக நின்று விளையாடிய இல் கரம் ஈரறு தோள் மேல் சேண் நிலத்தர் பொன் பூவை விட்டு இருடியோர்கள் கட்டியம் பாட எட்டு அரசர் சே செ ஒத்த செம் தாமரைக் கிழவி புகழ் வேலா ... வேல் ஏந்திய கைகளாகிய பன்னிரண்டு தோளின் மேல் விண்ணுலகத்தினர் பொன் மலரைப் பொழிய, முனிவர்கள் புகழ்ப் பாடல்கள் பாட, எட்டுத் திக்கிலும் உள்ள அரசர்கள் ஜே ஜே என்று தாளம் இட்டு முழங்க, செந்தாமரையில் வாழும் லக்ஷ்மி தேவி புகழும் வேலனே, அகம் நாடு புனம் காவலுற்ற சுக மோகனத்தி மென் தோளி சித்ர வ(ள்)ளி நாயகிக் கீதம் பாடி நித்தம் அணி புனைவோனே ... நீ மனத்தில் விரும்பிச் சென்ற வள்ளி மலையில் இருக்கும் தினைப் புனத்தில் காவல் இருந்தவளும், உன்னைச் சுகமாக மயக்கியவளும், மெல்லிய தோளை உடையவளும் ஆகிய அழகிய வள்ளி நாயகிக்கு இன்பகரமான பாடல்களைப் பாடி, நாள் தோறும் அணிகலன்களை அணிவித்து மகிழ்பவனே, ஞான வெற்பு உகந்து ஆடும் அத்தர் தையல் நாயகிக்கு நன் பாகர் அக்கு அணியும் நாதர் மெச்ச வந்து ஆடு முத்தம் அருள் பெருமாளே. ... ஞானம் என்னும் மலையில் மகிழ்ந்து விளையாடும் பெருமான், தையல்நாயகி என்னும் திருநாமம் உடைய தேவியை நல்ல தமது பாகத்தில் கொண்டவர், ருத்ராக்ஷ மாலை அணிந்துள்ள சிவபெருமான் மெச்சும்படி வந்து விளையாடி, முத்தம் அவருக்குத் தந்தருளும் பெருமாளே.