பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக நகைத்து வாம் என அமளி அருகு விரல் பிடித்து போய் அவர் தொடையோடு தொடை பட உறவாடி
பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொ(ண்)டு பிலுக்கியே வெகு சரசமோடு அணைகுவர்
கன மாலாய் முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை முலைக்கு(ள்)ளே துயில் கொள மயல் புரிகுவர்
பொருள் தீரின் முறுக்கியே உதை கொடு வசை உரை தரு மனத் துரோகிகள் இடு தொழில் வினை அற முடுக்கியே உனது இரு கழல் மலர் தொழ அருள் தாராய்
நெருக்கியே வரும் அவுணர்கள் குலம் அற உறுக்கியே மயில் முதுகினில் விசை கொடு நிலத்திலே சமர் பொருது அவர் உயிர் பலி கொளும் வேலா
நெகத்திலே அயன் முடி பறி இறை திரி புரத்திலே நகை புரி பரன் அடியவர் நினைப்பிலே அருள் தரு சிவன் உதவிய புதல்வோனே
செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை மருக் குலாவிய மலர் அணை மிசை புணர் திருக் கை வேல் வடிவு அழகிய குருபர முருகோனே
சிறக்கு மா தவ முனிவரர் மக பதி இருக்கு வேதனும் இமையவர் பரவிய திருக் குரா அடி நிழல் தனில் உலவிய பெருமாளே.
திரண்டு பெருகியுள்ள செல்வத்தை உடையவர்கள் தம்மிடம் வந்தால், மிகவும் சிரிப்புடன் வாருங்கள் என்று படுக்கை அருகில் (வந்தவரின்) விரலைப் பிடித்து (அழைத்துக் கொண்டு) போய் அவர் தொடை தம் தொடை மீது நெருங்கிப் பட, உறவு மொழிகளைப் பேசி விளையாடி, பல அன்பு மொழிகளைப் பிதற்றி தாம் கணக்கு வைத்திருந்த பணம் முழுதும் தம் வசம் வந்து சேரும் வரை நல்ல இன்பமான வார்த்தைகளால் பகட்டுப் பேச்சுக்களைப் பேசி மிக்க சல்லாபத்துடன் அணைவார்கள். பெருத்த அன்பு பூண்டவர்கள் போல முருக்கம் பூவைப் போல் சிவந்த வாயிதழ் ஊறலை உண்ணும் என்று கூறி, காம லீலைகளில் பல விதங்கள் காட்டி மலை போல் பருத்த மார்பகங்களின் மீது சாய்ந்து கொள்ளும்படி மயக்கம் ஊட்டுபவர். பொருள் தீர்ந்துபோன பிறகு, முறுக்கும் திருப்புமாய் கோபக் குறி காட்டி உதையும் உதைத்து வசை மொழிகளைப் பேசும் நன்றி கெட்டவர்கள் ஆகிய விலைமாதர்களின் ஆணையால் செய்யும் செயல்களில் ஈடுபடும் கருத்து அற்றுப் போக, என்னைத் திருப்பி உனது இரண்டு திருவடி மலர்களைத் தொழும்படியாக திருவருளைத் தந்து அருள்வாய். நெருங்கி வந்த அசுரர்களின் கூட்டம் அழிபடக் கோபித்து, மயிலின் முதுகில் வேகமாய் வந்து, இந்தப் பூமியில் போர் செய்தவர்களாகிய அந்த அசுரர்களின் உயிரைப் பலி கொண்ட வேலனே, கைந்நகத்தால் பிரமனுடைய தலையை கிள்ளிப் பறித்த இறைவன், திரிபுரத்தில் (தீயெழச்) சிரித்த பரமன், அடியவர் நினைத்தாலே அருள் பாலிக்கும் சிவ பெருமான் பெற்ற பிள்ளையே. அகந்தை கொண்ட வேடர்கள் வளர்த்த ஒப்பற்ற வள்ளியை நறு மணம் வீசும் மலர்ப் படுக்கையின் மேல் அணைந்த, திருக்கை வேலுடன் திருவுருவம் அழகுள்ள குருபரனே, முருகனே, சிறப்புற்ற மகா தவசிகளும் இந்திரனும் ரிக்வேதம் வல்ல பிரமனும் தேவர்களும் போற்றிப் பரவும் திருக் குரா மரத்தின் அடி நிழலில் (திருவிடைக்கழியில்) விளங்கிப் பொலியும் பெருமாளே.
பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக நகைத்து வாம் என அமளி அருகு விரல் பிடித்து போய் அவர் தொடையோடு தொடை பட உறவாடி ... திரண்டு பெருகியுள்ள செல்வத்தை உடையவர்கள் தம்மிடம் வந்தால், மிகவும் சிரிப்புடன் வாருங்கள் என்று படுக்கை அருகில் (வந்தவரின்) விரலைப் பிடித்து (அழைத்துக் கொண்டு) போய் அவர் தொடை தம் தொடை மீது நெருங்கிப் பட, உறவு மொழிகளைப் பேசி விளையாடி, பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொ(ண்)டு பிலுக்கியே வெகு சரசமோடு அணைகுவர் ... பல அன்பு மொழிகளைப் பிதற்றி தாம் கணக்கு வைத்திருந்த பணம் முழுதும் தம் வசம் வந்து சேரும் வரை நல்ல இன்பமான வார்த்தைகளால் பகட்டுப் பேச்சுக்களைப் பேசி மிக்க சல்லாபத்துடன் அணைவார்கள். கன மாலாய் முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை முலைக்கு(ள்)ளே துயில் கொள மயல் புரிகுவர் ... பெருத்த அன்பு பூண்டவர்கள் போல முருக்கம் பூவைப் போல் சிவந்த வாயிதழ் ஊறலை உண்ணும் என்று கூறி, காம லீலைகளில் பல விதங்கள் காட்டி மலை போல் பருத்த மார்பகங்களின் மீது சாய்ந்து கொள்ளும்படி மயக்கம் ஊட்டுபவர். பொருள் தீரின் முறுக்கியே உதை கொடு வசை உரை தரு மனத் துரோகிகள் இடு தொழில் வினை அற முடுக்கியே உனது இரு கழல் மலர் தொழ அருள் தாராய் ... பொருள் தீர்ந்துபோன பிறகு, முறுக்கும் திருப்புமாய் கோபக் குறி காட்டி உதையும் உதைத்து வசை மொழிகளைப் பேசும் நன்றி கெட்டவர்கள் ஆகிய விலைமாதர்களின் ஆணையால் செய்யும் செயல்களில் ஈடுபடும் கருத்து அற்றுப் போக, என்னைத் திருப்பி உனது இரண்டு திருவடி மலர்களைத் தொழும்படியாக திருவருளைத் தந்து அருள்வாய். நெருக்கியே வரும் அவுணர்கள் குலம் அற உறுக்கியே மயில் முதுகினில் விசை கொடு நிலத்திலே சமர் பொருது அவர் உயிர் பலி கொளும் வேலா ... நெருங்கி வந்த அசுரர்களின் கூட்டம் அழிபடக் கோபித்து, மயிலின் முதுகில் வேகமாய் வந்து, இந்தப் பூமியில் போர் செய்தவர்களாகிய அந்த அசுரர்களின் உயிரைப் பலி கொண்ட வேலனே, நெகத்திலே அயன் முடி பறி இறை திரி புரத்திலே நகை புரி பரன் அடியவர் நினைப்பிலே அருள் தரு சிவன் உதவிய புதல்வோனே ... கைந்நகத்தால் பிரமனுடைய தலையை கிள்ளிப் பறித்த இறைவன், திரிபுரத்தில் (தீயெழச்) சிரித்த பரமன், அடியவர் நினைத்தாலே அருள் பாலிக்கும் சிவ பெருமான் பெற்ற பிள்ளையே. செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை மருக் குலாவிய மலர் அணை மிசை புணர் திருக் கை வேல் வடிவு அழகிய குருபர முருகோனே ... அகந்தை கொண்ட வேடர்கள் வளர்த்த ஒப்பற்ற வள்ளியை நறு மணம் வீசும் மலர்ப் படுக்கையின் மேல் அணைந்த, திருக்கை வேலுடன் திருவுருவம் அழகுள்ள குருபரனே, முருகனே, சிறக்கு மா தவ முனிவரர் மக பதி இருக்கு வேதனும் இமையவர் பரவிய திருக் குரா அடி நிழல் தனில் உலவிய பெருமாளே. ... சிறப்புற்ற மகா தவசிகளும் இந்திரனும் ரிக்வேதம் வல்ல பிரமனும் தேவர்களும் போற்றிப் பரவும் திருக் குரா மரத்தின் அடி நிழலில் (திருவிடைக்கழியில்) விளங்கிப் பொலியும் பெருமாளே.