குடல்நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பிவை தோலிடை
குளுகுளெ னும்படி மூடிய
மலமாசு குதிகொளும் ஒன்பது வாசலை யுடைய
குரம்பையை நீரெழு குமிழியி னுங்கடிதாகியெ
அழிமாய அடலை யுடம்பை யவாவியெ
அநவரதஞ்சில சாரமில் அவுடதமும்பல யோகமு(ம்)
முயலாநின்று அலமரு சிந்தையி னாகுலம் அலம் அலம்
என்றினி யானுநின் அழகிய தண்டைவிடாமலர் அடைவேனோ
இடமற மண்டு நிசாசரர் அடைய மடிந்து
எழு பூதரம் இடிபட
இன்ப மகோததி வறிதாக
இமையவருஞ்சிறை போய் அவர் பதியுள் இலங்க விடு ஆதர
எழில்படம் ஒன்றும் ஒராயிர முகமான
விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்
புர நீறெழ வெயில்நகை தந்த புராரி
மதனகோபர்
விழியினில் வந்து பகீரதி மிசைவளருஞ்சிறுவா
வட விஜயபு ரந்தனில் மேவிய பெருமாளே.
குடல், கொழுப்பு, எலும்பு, மாமிசம், பரந்துள்ள ரத்தம், நரம்பு இவைகள் தோலின் இடையே குளிர்ச்சியாக இருக்குமாறு அமையும்படி வைத்து மூடப்பட்டுள்ளதும், மலங்களும், பிற அழுக்குகளும் பொதிந்துள்ள, ஒன்பது துவாரங்களை உடைய சிறு குடிலாகிய இந்த உடலை, நீரிலே தோன்றும் குமிழியிலும் வேகமாக அழியப்போகின்ற, துன்பத்துக்கு ஈடான இவ்வுடலை விரும்பி, எப்போதும் சில பயனற்ற மருந்துகளையும், பலவித யோகப் பயிற்சிகளையும் அநுஷ்டித்துப் பார்த்து வேதனைப்படுகின்ற மனத் துன்பம் போதும், போதும். என்றைக்குத்தான் இனி நானும் அழகிய தண்டையை எப்போதும் அணிந்துள்ள உன் திருவடிமலரை அடைவேனோ, தெரியவில்லையே. இடைவெளி விடாது நெருக்கும் அசுரர்கள் எல்லாரும் இறக்கவும், (கிரெளஞ்சமலை முதலான) ஏழு குலகிரிகள் இடிபட்டுப் பொடியாகவும், காட்சிக்கு இன்பம் தரும் பெருங்கடல் வற்றிப் போகவும், தேவர்களும் சூரனின் சிறையிலிருந்து நீங்கி, அவர்களது அமராவதி என்ற ஊரில் விளங்கவும் செய்வித்த ஆதரவாளனே, அழகிய பணாமுடி பொருந்திய, ஓராயிரம் முகங்களைக் கொண்ட விஷத்தைத் தரித்துள்ள ஆதிசேஷன் மேருமலை என்ற வில்லில் நாணாகப் பூட்டப்பட்டு அந்த வில் வளைபடும் முன்னரே திரிபுரத்தை சாம்பலாகச் செய்ய ஒளிவீசும் புன்சிரிப்பை வெளியிட்ட திரிபுரப் பகைவர், மன்மதனைக் கோபித்து (கண்ணழலாலே) எரித்தவர், ஆகிய சிவபிரானது கண்களிலிருந்து பொறியாகப் பிறந்து, கங்கையின் மீது வளர்ந்த சிறுவனே, வட விஜயபுரம் என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
குடல்நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பிவை தோலிடை ... குடல், கொழுப்பு, எலும்பு, மாமிசம், பரந்துள்ள ரத்தம், நரம்பு இவைகள் தோலின் இடையே குளுகுளெ னும்படி மூடிய ... குளிர்ச்சியாக இருக்குமாறு அமையும்படி வைத்து மூடப்பட்டுள்ளதும், மலமாசு குதிகொளும் ஒன்பது வாசலை யுடைய ... மலங்களும், பிற அழுக்குகளும் பொதிந்துள்ள, ஒன்பது துவாரங்களை உடைய சிறு குடிலாகிய குரம்பையை நீரெழு குமிழியி னுங்கடிதாகியெ ... இந்த உடலை, நீரிலே தோன்றும் குமிழியிலும் வேகமாக அழிமாய அடலை யுடம்பை யவாவியெ ... அழியப்போகின்ற, துன்பத்துக்கு ஈடான இவ்வுடலை விரும்பி, அநவரதஞ்சில சாரமில் அவுடதமும்பல யோகமு(ம்) ... எப்போதும் சில பயனற்ற மருந்துகளையும், பலவித யோகப் பயிற்சிகளையும் முயலாநின்று அலமரு சிந்தையி னாகுலம் அலம் அலம் ... அநுஷ்டித்துப் பார்த்து வேதனைப்படுகின்ற மனத் துன்பம் போதும், போதும். என்றினி யானுநின் அழகிய தண்டைவிடாமலர் அடைவேனோ ... என்றைக்குத்தான் இனி நானும் அழகிய தண்டையை எப்போதும் அணிந்துள்ள உன் திருவடிமலரை அடைவேனோ, தெரியவில்லையே. இடமற மண்டு நிசாசரர் அடைய மடிந்து ... இடைவெளி விடாது நெருக்கும் அசுரர்கள் எல்லாரும் இறக்கவும், எழு பூதரம் இடிபட ... (கிரெளஞ்சமலை முதலான) ஏழு குலகிரிகள் இடிபட்டுப் பொடியாகவும், இன்ப மகோததி வறிதாக ... காட்சிக்கு இன்பம் தரும் பெருங்கடல் வற்றிப் போகவும், இமையவருஞ்சிறை போய் அவர் பதியுள் இலங்க விடு ஆதர ... தேவர்களும் சூரனின் சிறையிலிருந்து நீங்கி, அவர்களது அமராவதி என்ற ஊரில் விளங்கவும் செய்வித்த ஆதரவாளனே, எழில்படம் ஒன்றும் ஒராயிர முகமான ... அழகிய பணாமுடி பொருந்திய, ஓராயிரம் முகங்களைக் கொண்ட விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன் ... விஷத்தைத் தரித்துள்ள ஆதிசேஷன் மேருமலை என்ற வில்லில் நாணாகப் பூட்டப்பட்டு அந்த வில் வளைபடும் முன்னரே புர நீறெழ வெயில்நகை தந்த புராரி ... திரிபுரத்தை சாம்பலாகச் செய்ய ஒளிவீசும் புன்சிரிப்பை வெளியிட்ட திரிபுரப் பகைவர், மதனகோபர் ... மன்மதனைக் கோபித்து (கண்ணழலாலே) எரித்தவர், விழியினில் வந்து பகீரதி மிசைவளருஞ்சிறுவா ... ஆகிய சிவபிரானது கண்களிலிருந்து பொறியாகப் பிறந்து, கங்கையின் மீது வளர்ந்த சிறுவனே, வட விஜயபு ரந்தனில் மேவிய பெருமாளே. ... வட விஜயபுரம் என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.