கூசாதே பார் ஏசாதே மால்
கூறா நூல்கற்று உளம்வேறு
கோடாதே வேல் பாடாதே மால்
கூர் கூதாளத் தொடைதோளில்
வீசாதே பேர் பேசாதே சீர்
வேத அதீதக் கழல்மீதே
வீழாதே போய் நாயேன் வாணாள்
வீணே போகத் தகுமோதான்
நேசா வானோர் ஈசா வாமா
நீபா கானப் புனமானை
நேர்வாய் ஆர்வாய் சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற்பகசாலத்
தேச ஆதீனா தீனார் ஈசா
சீர் ஆரூரிற் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
நான் நாணம் கொள்ளாமல், உலகத்தோர் என்னைப் பழிக்காமல், உன் பெருமையைக் கூறாத அசட்டு நூல்களைக் கற்று என் உள்ளம் மாறுபட்டு கோணல் வழியைப் பின்பற்றாமல், உன் வேலாயுதத்தை நான் பாடாமலும், ஆசை மிகுந்து கூதாள மலர்மாலையை உன் தோள்களில் வீசாமலும், உன் புகழைப் பற்றி நான் பேசாமலும், சிறப்பான வேதங்களுக்கும் எட்டாத உன் திருவடிகளில் வீழாமலும், அலைந்து போய், நாயைவிடக் கீழோனான அடியேனுடைய வாழ்நாள் வீணாகப் போவது நீதியாகுமோ? அன்பனே, தேவர்களின் தெய்வமே, அழகனே, கடப்பமாலையை அணிந்தவனே, காட்டில் தினைப்புனத்தில் உள்ள மான்போன்ற வள்ளியைச் சந்தித்தவனே, உள்ளம் குளிர்ந்தவனே, சூரன் இருக்கும் மகேந்திரபுரியைச் சென்றடைந்து போர்செய்தவனே, பெரிய மேகங்கள் சூழ்ந்த கற்பகத் தருக்கள் நிறைந்துள்ள தேசமாகிய தேவலோகத்துக்கு உரிமையாளனே, அனாதைகளின் ரட்சகக் கடவுளே, சிறப்பு வாய்ந்த திருவாரூரில் வீற்றிருக்கும் பெரும் செல்வமே, சிவப்பு நிறத்தோனே, முருகவேளே, மிக்க பொலிவுள்ளவனே, தலைவனே, தேவே தேவப் பெருமாளே.