கூர்வாய் நாராய் வாராய் போனார்
கூடாரே(ரோ) சற்று அல ஆவி
கோது ஆனேன் மாதா மாறு ஆனாள்
கோளே கேள் மற்று இள வாடை
ஈர் வாள் போலே மேலே வீசா
ஏறா வேறிட்டு அது தீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா
ஈடு ஏறாரில் கெடலாமோ
சூர் வாழாதே மாறாதே வாழ்
சூழ் வானோர்கட்கு அருள் கூரும்
தோலா வேலா வீறு ஆரூர் வாழ்
சோதீ பாகத்து உமை ஊடே
சேர்வாய் நீதி வானோர் வீரா
சேரார் ஊரை சுடுவார் தம்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவ பெருமாளே.
கூர்மையான நீண்ட வாயை உடைய நாரையே, இங்கு வருவாய். என்னை விட்டுப் பிரிந்தவர் மீண்டும் வந்து என்னைத் தழுவ மாட்டாரோ? கொஞ்சம் அல்ல, என் உயிர் பயனற்றது ஆயிற்று. என் தாயும் என்னோடு மாறுபட்டுப் பகை ஆனாள். சுற்றத்தார்கள் கோள் மூட்டுதலிலையே ஈடுபட்டு இருக்கின்றார்கள். மேலும் இள வாடைக் காற்று அறுக்கின்ற வாளைப் போல் என் மேல் வீசி, எறிகின்ற நெருப்பைப் போல் உடல் மீது படுகின்றது. ஒருவருக்கும் கொடாமல் வாழ்கின்றவர்களின் பேர்களைப் பாடி ஈடேறாது தவிப்போர் போல நானும் கெட்டுப் போகலாமோ? சூரன் வாழாத வண்ணம், தங்களது சுக நிலை மாறாமல் உள்ள வாழ்வைச் சூழும் தேவர்களுக்கு அருள் புரிந்த, தோல்வியைக் கண்டறியாத வேலனே, மேம்பட்டு விளங்கும் திருவாரூரில் வீற்றிருக்கும் சோதி மயமான சிவபெருமானுடைய பாகத்தில் உள்ள உமா தேவி (இவர்கள்) மத்தியில் (சோமாஸ்கந்த மூர்த்தியாய் உருவில்) விளங்குவாய். நீதிப் பெருமானே, தேவர்களுக்குத் தலைமை தாங்கும் வீரனே, பகைவர்களுடைய திரிபுரங்களைச் சுட்டவராகிய சிவபெருமானுடைய குழந்தையே, அரசே, பொலிவு உள்ளவனே, தலைவனே தேவனே, தேவர்கள் பெருமாளே.
கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடாரே(ரோ) ... கூர்மையான நீண்ட வாயை உடைய நாரையே, இங்கு வருவாய். என்னை விட்டுப் பிரிந்தவர் மீண்டும் வந்து என்னைத் தழுவ மாட்டாரோ? சற்று அல ஆவி கோது ஆனேன் மாதா மாறு ஆனாள் ... கொஞ்சம் அல்ல, என் உயிர் பயனற்றது ஆயிற்று. என் தாயும் என்னோடு மாறுபட்டுப் பகை ஆனாள். கோளே கேள் மற்று இள வாடை ஈர் வாள் போலே மேலே வீசா ... சுற்றத்தார்கள் கோள் மூட்டுதலிலையே ஈடுபட்டு இருக்கின்றார்கள். மேலும் இள வாடைக் காற்று அறுக்கின்ற வாளைப் போல் என் மேல் வீசி, ஏறா வேறிட்டு அது தீயின் ... எறிகின்ற நெருப்பைப் போல் உடல் மீது படுகின்றது. ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ ... ஒருவருக்கும் கொடாமல் வாழ்கின்றவர்களின் பேர்களைப் பாடி ஈடேறாது தவிப்போர் போல நானும் கெட்டுப் போகலாமோ? சூர் வாழாதே மாறாதே வாழ் சூழ் வானோர்கட்கு அருள் கூரும் தோலா வேலா ... சூரன் வாழாத வண்ணம், தங்களது சுக நிலை மாறாமல் உள்ள வாழ்வைச் சூழும் தேவர்களுக்கு அருள் புரிந்த, தோல்வியைக் கண்டறியாத வேலனே, வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே சேர்வாய் ... மேம்பட்டு விளங்கும் திருவாரூரில் வீற்றிருக்கும் சோதி மயமான சிவபெருமானுடைய பாகத்தில் உள்ள உமா தேவி (இவர்கள்) மத்தியில் (சோமாஸ்கந்த மூர்த்தியாய் உருவில்) விளங்குவாய். நீதி வானோர் வீரா ... நீதிப் பெருமானே, தேவர்களுக்குத் தலைமை தாங்கும் வீரனே, சேரார் ஊரை சுடுவார் தம் சேயே வேளே பூவே கோவே ... பகைவர்களுடைய திரிபுரங்களைச் சுட்டவராகிய சிவபெருமானுடைய குழந்தையே, அரசே, பொலிவு உள்ளவனே, தலைவனே தேவே தேவ பெருமாளே. ... தேவனே, தேவர்கள் பெருமாளே.