நீ பால் தானோ, தேன்தானோ, வெல்லக்கட்டிதானோ? தேவர்கள் பாற்கடலில் இருந்து கடைந்தெடுத்த அமுதமோ? நீ இவ்வுலகிலுள்ளோரின் சிறப்புப் பொருளோ? மன்மதனுக்கு நிகரான வாழ்வோ நீ? பானுவோ (சூரியனோ) நீ? சிறந்த முத்தோ நீ? என்றெல்லாம் விரிவாகத் தாலோ தாலேலோ என்று தாய்மார் என்னைத் தாலாட்டுப் பாடாமலும், தாய்மார் அன்புடன் என்னை நினைத்து தாய்ப்பால் தராமலும், புகழ்ச்சிக்கு உரிய பெயர் ஒன்றும் எனக்குச் சூட்டாமலும், அன்புடன் என்னோடு பேசாமலும், ஏச்சுக்கு இடமாக நான் வளர்வது நீதியாகுமோ? வள்ளி ஆலோலம் என்று கூவி பறவைகளை ஓட்டும் குரலோசை கேட்டு, முன்னொரு நாளில், ஆசை குன்றாத நிலையில் அவளிருந்த தினைப்புனத்திற்குச் சென்று, அந்த வள்ளித் தாயின் பாதங்களில் விழுந்தும், அதனால் வாழ்வு பயன்பெற்றது என்று கூறி வாழ்ந்தும், அவளுக்கு ஆளாக, வேளைக்காரனாக, சமயத்தில் புகுந்து விளையாடியவனே, சேல் மீனோடு சேர்ந்து ஆரல் மீன்கள் மிக நிறைந்துள்ள சீர்பெற்ற திருவாரூர் தலத்தின் பெருஞ் செல்வமே, இறைவன் சேயே, கந்த வேளே, மலர் போன்ற பொலிவு உள்ளவனே, அரசே, இறைவனே, தேவர்களின் பெருமாளே.