கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய்ப் பொய்
களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை கன தனமும் மார்பும் உறல் இச்சையால் ஆர்த்து
கழு நீர் ஆர் கமழ் நறை சவாது புழு கைத் துழாய் வார்த்து
நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார்ச் செய் கருமம் அறியாது
சிறு புத்தியால் வாழ்க்கை கருதாதே
தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து நிறை பவுசு வாழ்வு அரசு சத்யமே வாய்த்தது என உருகி
ஓடி ஒரு சற்றுளே வார்த்தை தடுமாறித் தழுவி அநுராகமும் விளைத்து
மா யாக்கை தனையும் அரு நாளையும் அவத்திலே போக்குதலை அறிவிலேனை
நெறி நிற்க நீ தீக்ஷை தரவேணும்
அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி
அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி
அடல் மயில் நடாவிய ப்ரியத்தனே போற்றி
அவதான அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி
அகில தலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி
அருணகிரி நாத எனும் அப்பனே போற்றி
அசுரேசர் பெல(ம்) மடிய வேல் விடு கரத்தனே போற்றி
கரதல கபாலி குரு வித்தனே போற்றி
பெரிய குற மாது அணை புயத்தனே போற்றி
பெரு வாழ்வாம் பிரமன் அறியா விரத தக்ஷிணா மூர்த்தி பர சமய கோள் அரி
தவத்தினால் வாய்த்த பெரிய மடம் மேவிய சுகத்தனே யோக்யர் பெருமாளே.
கலகத்தை விளைவிக்கக் கூடிய கண்களை உடைய அழகிய விலைமாதர்களின் கைகளில் அகப்பட்டு, களவு, பொய், காம சாஸ்திரம் பலவும் கற்று, ஆசையுடனும், விருப்பத்துடனும் கனத்த மார்பகங்களோடு நெஞ்சாரத் தழுவி மகிழ்ந்து, செங்கழுநீர் மலர்களை நிரப்பி, மணக்கும் ஜவ்வாது, புனுகு இவைகளைக் கலந்து ஊற்றி பரிமளிக்க வைத்து, பூமியில் உள்ள அரசர் முதல் நாட்டில் உள்ள யாவரும் அறியும்படியாக, கட்டில் படுக்கை போட்டவர்களாகிய வேசியர்கள் செய்கின்ற தொழில்களின் சூதை அறியாமல், எனக்குள்ள அற்ப புத்தியால் எனது வாழ்க்கையின் அருமையை எண்ணாமல், (அந்த வேசியரின்) இடத்தை நெருங்கிச் சென்று, ஜன்னலின் வாயில்களின் முன் பக்கத்தில் காத்து நின்று, (அவர்களால் அழைக்கப்பட்டவுடன்) நிறைந்த செல்வமும் அரச வாழ்வும் சத்தியப்பேறும் கிடைத்தன போல மனம் உருகி, அவர்கள் வீட்டினுள் ஓடிச்சென்று, உள்ளே இருக்கும் கொஞ்ச நேரத்துக்குள் பேசும் பேச்சும் தடுமாறி, அவர்களைத் தழுவி காம லீலைகளைச் செய்தவனாய், சிறந்த உடலையும் அருமையான வாழ் நாளையும் வீணில் கழிக்கின்றவனும், நல்லறிவு இல்லாதவனுமாகிய என்னை, நன்னெறியில் நிற்கும்படி நீ தயை புரிந்து அறிவுரை செய்தருள வேண்டும். எல்லை இல்லாத தமிழறிவால் உயர்ந்துள்ள வல்லவனே, போற்றி, திருவண்ணாமலையின் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, போற்றி, வலிய மயிலை ஓட்டுதலில் விருப்பு வைத்தவனே, போற்றி, விந்தையான செயல்களைச் செய்த ஆறுமுகச் சுவாமி என்னும் தலைவனே, போற்றி, எல்லாப் பூமிகளையும் வலம் செய்து ஓடி வந்த நிருத்த மூர்த்தியே, போற்றி, அருணகிரி நாதரே என்று என்னை அழைத்த அப்பனே, போற்றி, அசுரர் தலைவர்களின் வலிமை அழிய வேலைச் செலுத்திய கரத்தினனே, போற்றி, கையில் கபாலம் ஏந்திய சிவபெருமானுக்கு ஞான உபதேச பண்டிதனாய் நின்றவனே, போற்றி, பெருமை வாய்ந்த குறப் பெண்ணாகிய வள்ளி நாயகியை அணைகின்ற திருப்புயங்களை உடையவனே, போற்றி, பெருஞ் செல்வப் பொருளானதும், பிரமனும் அறியாததுமாகிய பிரணவப் பொருளை உபதேசித்த தக்ஷிணா மூர்த்தி சொரூபனே, மற்ற (சமண, புத்த) மதங்களை அழிக்க வந்த (திருஞான சம்பந்த) சிங்கமே, தவச் செயலால் கிடைக்கும், பெரிய மடம் என்னும் இடத்தில் வீற்றிருக்கும், சுகப் பெருமானே, தூய யோகியர்கள் போற்றும் பெருமாளே.
கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய்ப் பொய் ... கலகத்தை விளைவிக்கக் கூடிய கண்களை உடைய அழகிய விலைமாதர்களின் கைகளில் அகப்பட்டு, களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை கன தனமும் மார்பும் உறல் இச்சையால் ஆர்த்து ... களவு, பொய், காம சாஸ்திரம் பலவும் கற்று, ஆசையுடனும், விருப்பத்துடனும் கனத்த மார்பகங்களோடு நெஞ்சாரத் தழுவி மகிழ்ந்து, கழு நீர் ஆர் கமழ் நறை சவாது புழு கைத் துழாய் வார்த்து ... செங்கழுநீர் மலர்களை நிரப்பி, மணக்கும் ஜவ்வாது, புனுகு இவைகளைக் கலந்து ஊற்றி பரிமளிக்க வைத்து, நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார்ச் செய் கருமம் அறியாது ... பூமியில் உள்ள அரசர் முதல் நாட்டில் உள்ள யாவரும் அறியும்படியாக, கட்டில் படுக்கை போட்டவர்களாகிய வேசியர்கள் செய்கின்ற தொழில்களின் சூதை அறியாமல், சிறு புத்தியால் வாழ்க்கை கருதாதே ... எனக்குள்ள அற்ப புத்தியால் எனது வாழ்க்கையின் அருமையை எண்ணாமல், தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து நிறை பவுசு வாழ்வு அரசு சத்யமே வாய்த்தது என உருகி ... (அந்த வேசியரின்) இடத்தை நெருங்கிச் சென்று, ஜன்னலின் வாயில்களின் முன் பக்கத்தில் காத்து நின்று, (அவர்களால் அழைக்கப்பட்டவுடன்) நிறைந்த செல்வமும் அரச வாழ்வும் சத்தியப்பேறும் கிடைத்தன போல மனம் உருகி, ஓடி ஒரு சற்றுளே வார்த்தை தடுமாறித் தழுவி அநுராகமும் விளைத்து ... அவர்கள் வீட்டினுள் ஓடிச்சென்று, உள்ளே இருக்கும் கொஞ்ச நேரத்துக்குள் பேசும் பேச்சும் தடுமாறி, அவர்களைத் தழுவி காம லீலைகளைச் செய்தவனாய், மா யாக்கை தனையும் அரு நாளையும் அவத்திலே போக்குதலை அறிவிலேனை ... சிறந்த உடலையும் அருமையான வாழ் நாளையும் வீணில் கழிக்கின்றவனும், நல்லறிவு இல்லாதவனுமாகிய என்னை, நெறி நிற்க நீ தீக்ஷை தரவேணும் ... நன்னெறியில் நிற்கும்படி நீ தயை புரிந்து அறிவுரை செய்தருள வேண்டும். அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி ... எல்லை இல்லாத தமிழறிவால் உயர்ந்துள்ள வல்லவனே, போற்றி, அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி ... திருவண்ணாமலையின் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, போற்றி, அடல் மயில் நடாவிய ப்ரியத்தனே போற்றி ... வலிய மயிலை ஓட்டுதலில் விருப்பு வைத்தவனே, போற்றி, அவதான அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி ... விந்தையான செயல்களைச் செய்த ஆறுமுகச் சுவாமி என்னும் தலைவனே, போற்றி, அகில தலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி ... எல்லாப் பூமிகளையும் வலம் செய்து ஓடி வந்த நிருத்த மூர்த்தியே, போற்றி, அருணகிரி நாத எனும் அப்பனே போற்றி ... அருணகிரி நாதரே என்று என்னை அழைத்த அப்பனே, போற்றி, அசுரேசர் பெல(ம்) மடிய வேல் விடு கரத்தனே போற்றி ... அசுரர் தலைவர்களின் வலிமை அழிய வேலைச் செலுத்திய கரத்தினனே, போற்றி, கரதல கபாலி குரு வித்தனே போற்றி ... கையில் கபாலம் ஏந்திய சிவபெருமானுக்கு ஞான உபதேச பண்டிதனாய் நின்றவனே, போற்றி, பெரிய குற மாது அணை புயத்தனே போற்றி ... பெருமை வாய்ந்த குறப் பெண்ணாகிய வள்ளி நாயகியை அணைகின்ற திருப்புயங்களை உடையவனே, போற்றி, பெரு வாழ்வாம் பிரமன் அறியா விரத தக்ஷிணா மூர்த்தி பர சமய கோள் அரி ... பெருஞ் செல்வப் பொருளானதும், பிரமனும் அறியாததுமாகிய பிரணவப் பொருளை உபதேசித்த தக்ஷிணா மூர்த்தி சொரூபனே, மற்ற (சமண, புத்த) மதங்களை அழிக்க வந்த (திருஞான சம்பந்த) சிங்கமே, தவத்தினால் வாய்த்த பெரிய மடம் மேவிய சுகத்தனே யோக்யர் பெருமாளே. ... தவச் செயலால் கிடைக்கும், பெரிய மடம் என்னும் இடத்தில் வீற்றிருக்கும், சுகப் பெருமானே, தூய யோகியர்கள் போற்றும் பெருமாளே.