ஒருவழிபடாது
மாயை யிருவினை விடாது
நாளும் உழலும்
அநுராக மோக அநுபோகம்
உடலுமுயிர் தானுமாய்
உனுணர்விலொரு காலி ராத
உளமுநெகிழ்வாகு மாறு
அடியேனுக்கு இரவுபகல் போன ஞான பரமசிவ யோக
தீரமெனமொழியும்
வீசு பாச கனகோப எமபடரை
மோது மோன வுரையில்
உப தேச வாளை
எனதுபகை தீர நீயும் அருள்வாயே
அரிவையொரு பாகமான அருணகிரி நாதர் பூசை
அடைவு தவறாது பேணும் அறிவாளன்
அமணர்குல காலனாகும்
அரியதவ ராஜராஜன்
அவனிபுகழ் சோமநாதன் மடமேவும் முருக
பொரு சூரர் சேனை முறிய
வட மேரு வீழ
முகரசல ராசி வேக முனிவோனே
மொழியுமடியார்கள் கோடி குறைகருதினாலும்
வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே.
ஒரு வழியில் நிலைத்து நிற்க முடியாமல், மாயையும், என் நல்வினை, தீவினைகளும் என்னை விடாமல், தினந்தோறும் அலைச்சல் விளைவிக்கின்ற காம லீலையாகும் மோக அனுபவத்தில் ஈடுபட்டு, என் உடலையும் என் உயிரையும் மட்டுமே எண்ணிக்கொண்டு, நீ உள்ளாய் என்னும் உணர்ச்சி ஒருகாலும் இல்லாத என் உள்ளமும் நெகிழ்ந்து கசிந்து உருகுமாறு அடியேனுக்கு, இரவும் பகலும் கடந்த ஞான பரமசிவ யோகம் தான் தைரியத்தைத் தர வல்லது என்று மொழிந்து காட்டுவதும், பாசக்கயிறை வீசும் மிகுந்த கோபங்கொண்ட யமதூதர்களை மோதி விரட்டியடிக்கக் கூடியதுமான, பேச்சில்லாத மெளன நிலையான ஞானோபதேசம் என்ற வாளை எனது உட்பகை, புறப்பகை யாவும் ஒழிய, நீ அன்போடு அருள்வாயாக. தேவியை ஒருபாகத்தில் கொண்ட அருணாசலேஸ்வரர் பூஜையை ஒழுங்கு தவறாமல் புரிந்து வருகின்ற அறிவாளியும், சமணர் குலத்துக்கு ஒரு யமனாகத் தோன்றியவனும், அருமையான தவங்கள் பல செய்த தவராஜனும், இந்த உலகெல்லாம் புகழ்பவனும் ஆன சோமநாதனுடைய ஊராகிய சோமநாதன்மடத்தில் வீற்றிருக்கின்ற முருகனே, போர் செய்த சூரர்களின் சேனை முறிபட்டு அழியவும், வடக்கு திசையிலுள்ள மேரு மலை பொடிபட்டு விழவும், சங்குகளைக் கொண்ட கடல் வெந்து வற்றவும் கோபித்தவனே, உன்னைத் துதிக்கும் அடியார்கள் கோடிக்கணக்கான குறைகளைக் கருதி உன்னிடம் முறையிட்டாலும், அவர்கள் எண்ணத்துக்கு மாறாக அவர்களைக் கோபிப்பது என்பதையே அறியாத தேவர் பெருமாளே.
ஒருவழிபடாது ... ஒரு வழியில் நிலைத்து நிற்க முடியாமல், மாயை யிருவினை விடாது ... மாயையும், என் நல்வினை, தீவினைகளும் என்னை விடாமல், நாளும் உழலும் ... தினந்தோறும் அலைச்சல் விளைவிக்கின்ற அநுராக மோக அநுபோகம் ... காம லீலையாகும் மோக அனுபவத்தில் ஈடுபட்டு, உடலுமுயிர் தானுமாய் ... என் உடலையும் என் உயிரையும் மட்டுமே எண்ணிக்கொண்டு, உனுணர்விலொரு காலி ராத ... நீ உள்ளாய் என்னும் உணர்ச்சி ஒருகாலும் இல்லாத உளமுநெகிழ்வாகு மாறு ... என் உள்ளமும் நெகிழ்ந்து கசிந்து உருகுமாறு அடியேனுக்கு இரவுபகல் போன ஞான பரமசிவ யோக ... அடியேனுக்கு, இரவும் பகலும் கடந்த ஞான பரமசிவ யோகம் தான் தீரமெனமொழியும் ... தைரியத்தைத் தர வல்லது என்று மொழிந்து காட்டுவதும், வீசு பாச கனகோப எமபடரை ... பாசக்கயிறை வீசும் மிகுந்த கோபங்கொண்ட யமதூதர்களை மோது மோன வுரையில் ... மோதி விரட்டியடிக்கக் கூடியதுமான, பேச்சில்லாத மெளன நிலையான உப தேச வாளை ... ஞானோபதேசம் என்ற வாளை எனதுபகை தீர நீயும் அருள்வாயே ... எனது உட்பகை, புறப்பகை யாவும் ஒழிய, நீ அன்போடு அருள்வாயாக. அரிவையொரு பாகமான அருணகிரி நாதர் பூசை ... தேவியை ஒருபாகத்தில் கொண்ட அருணாசலேஸ்வரர் பூஜையை அடைவு தவறாது பேணும் அறிவாளன் ... ஒழுங்கு தவறாமல் புரிந்து வருகின்ற அறிவாளியும், அமணர்குல காலனாகும் ... சமணர் குலத்துக்கு ஒரு யமனாகத் தோன்றியவனும், அரியதவ ராஜராஜன் ... அருமையான தவங்கள் பல செய்த தவராஜனும், அவனிபுகழ் சோமநாதன் மடமேவும் முருக ... இந்த உலகெல்லாம் புகழ்பவனும் ஆன சோமநாதனுடைய ஊராகிய சோமநாதன்மடத்தில் வீற்றிருக்கின்ற முருகனே, பொரு சூரர் சேனை முறிய ... போர் செய்த சூரர்களின் சேனை முறிபட்டு அழியவும், வட மேரு வீழ ... வடக்கு திசையிலுள்ள மேரு மலை பொடிபட்டு விழவும், முகரசல ராசி வேக முனிவோனே ... சங்குகளைக் கொண்ட கடல் வெந்து வற்றவும் கோபித்தவனே, மொழியுமடியார்கள் கோடி குறைகருதினாலும் ... உன்னைத் துதிக்கும் அடியார்கள் கோடிக்கணக்கான குறைகளைக் கருதி உன்னிடம் முறையிட்டாலும், வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே. ... அவர்கள் எண்ணத்துக்கு மாறாக அவர்களைக் கோபிப்பது என்பதையே அறியாத தேவர் பெருமாளே.