பெருக்கச் சஞ்சலித்துக் கந்தல் உற்றுப் புந்தி அற்றுப் பின் பிழைப்பு அற்றும் குறைப்பு உற்றும்
பொது மாதர் ப்ரியப்பட்டு அங்கு அழைத்துத் தம் கலைக்குள் தங்கிடப் பட்சம் பிணித்துத் தம் தனத்தைத் தந்து அணையாதே
புரக்கைக்கு உன் பதத்தைத் தந்து எனக்குத் தொண்டு உறப் பற்றும் புலத்துக் கண் செழிக்கச் செந்தமிழ் பாடும் புலப் பட்டம் கொடுத்தற்கும்
கருத்தில் கண் படக் கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம் புரிவாயே
தருக்கிக் கண் களிக்கத் தெண்டனிட்டுத் தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புறச் சித்தம் தளர்வோனே
சலிப்பு உற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்துத் தன் சமர்த்தில் சங்கரிக்கத் தண்டிய சூரன்
சிரத்தைச் சென்று அறுத்துப் பந்தடித்துத் திண் குவட்டைக் கண்டு இடித்துச் செந்திலில் புக்கு அங்கு உறைவோனே
சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திருச் சிற்றம்பலத்து அத்தன் செவிக்குப் பண்பு உறச் செப்பும் பெருமாளே.
(நான்) மிகவும் மனக் கலக்கம் அடைந்து, ஒழுக்கக் கேடு உடையவனாக, நற்புத்தி இல்லாமல், பின்னர் பிழைக்கும் வழியும் இல்லாமல் குறைபாடு உற்றுப் போகும்படி, விலை மகளிர் (என்னை) அன்பு கொண்டு தங்களிடம் அழைத்து தங்களுடைய காமக் கலைக்குள் சிக்கும்படி பரிவு காட்டுவது போலப் பிணித்து, தங்களுடைய மார்பகங்களைத் தந்து தழுவாத வண்ணம், என்னைக் காப்பதற்காக உனது திருவடியைத் தந்து நான் தொண்டு செய்து உன்னைப் பற்றும்படியான ஞானக் கண் (அறிவு நிலை) செழித்தோங்கவும், செந்தமிழ் பாடும் புலவன் என்னும் பட்டத்தை (உலகோர்) கொடுப்பதற்கும், ஞானக் கண் பெறக் கிட்டும்படியான புகழைப் பெறுவதற்கும் அருள் மனம் கொண்டு உதவுவாயாக. உள்ளம் பூரித்து கண் களிக்கும்படி தண்டனிட்டு வணங்கி குளிர்ந்த (தினைப்) புனத்தில் செவ்விய குறப் பெண்ணாகிய வள்ளிக்கு அன்பு பெருக மனம் தளர்ந்தவனே, (தேவர்கள்) சோர்வு அடையச் செய்து, அங்கு வலிமையைக் காட்டி, கர்வத்துடன் எழுந்து (அத்தேவர்களைப்) பிடித்து அலைத்து, தன்னுடைய திறமையால் அவர்களை அழித்து வருத்திய சூரனுடைய தலையைப் போய் அறுத்து, பந்தடிப்பது போல் அடித்து, அந்த வலிய (கிரவுஞ்ச) மலையைக் கண்டு அதைப் பொடியாக்கி, திருச் செந்தூரில் புகுந்து அங்கு வாழ்பவனே, (அனைவரும்) மேம்பாடுற ப்ரணவமாகிய (நமசிவாய என்ற) ஐந்தெழுத்தின் பொருளை, தில்லையில் கூத்தாடும் தந்தையின் காதில் முறைப்படி உபதேசித்த பெருமாளே.
பெருக்கச் சஞ்சலித்துக் கந்தல் உற்றுப் புந்தி அற்றுப் பின் பிழைப்பு அற்றும் குறைப்பு உற்றும் ... (நான்) மிகவும் மனக் கலக்கம் அடைந்து, ஒழுக்கக் கேடு உடையவனாக, நற்புத்தி இல்லாமல், பின்னர் பிழைக்கும் வழியும் இல்லாமல் குறைபாடு உற்றுப் போகும்படி, பொது மாதர் ப்ரியப்பட்டு அங்கு அழைத்துத் தம் கலைக்குள் தங்கிடப் பட்சம் பிணித்துத் தம் தனத்தைத் தந்து அணையாதே ... விலை மகளிர் (என்னை) அன்பு கொண்டு தங்களிடம் அழைத்து தங்களுடைய காமக் கலைக்குள் சிக்கும்படி பரிவு காட்டுவது போலப் பிணித்து, தங்களுடைய மார்பகங்களைத் தந்து தழுவாத வண்ணம், புரக்கைக்கு உன் பதத்தைத் தந்து எனக்குத் தொண்டு உறப் பற்றும் புலத்துக் கண் செழிக்கச் செந்தமிழ் பாடும் புலப் பட்டம் கொடுத்தற்கும் ... என்னைக் காப்பதற்காக உனது திருவடியைத் தந்து நான் தொண்டு செய்து உன்னைப் பற்றும்படியான ஞானக் கண் (அறிவு நிலை) செழித்தோங்கவும், செந்தமிழ் பாடும் புலவன் என்னும் பட்டத்தை (உலகோர்) கொடுப்பதற்கும், கருத்தில் கண் படக் கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம் புரிவாயே ... ஞானக் கண் பெறக் கிட்டும்படியான புகழைப் பெறுவதற்கும் அருள் மனம் கொண்டு உதவுவாயாக. தருக்கிக் கண் களிக்கத் தெண்டனிட்டுத் தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புறச் சித்தம் தளர்வோனே ... உள்ளம் பூரித்து கண் களிக்கும்படி தண்டனிட்டு வணங்கி குளிர்ந்த (தினைப்) புனத்தில் செவ்விய குறப் பெண்ணாகிய வள்ளிக்கு அன்பு பெருக மனம் தளர்ந்தவனே, சலிப்பு உற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்துத் தன் சமர்த்தில் சங்கரிக்கத் தண்டிய சூரன் ... (தேவர்கள்) சோர்வு அடையச் செய்து, அங்கு வலிமையைக் காட்டி, கர்வத்துடன் எழுந்து (அத்தேவர்களைப்) பிடித்து அலைத்து, தன்னுடைய திறமையால் அவர்களை அழித்து வருத்திய சூரனுடைய சிரத்தைச் சென்று அறுத்துப் பந்தடித்துத் திண் குவட்டைக் கண்டு இடித்துச் செந்திலில் புக்கு அங்கு உறைவோனே ... தலையைப் போய் அறுத்து, பந்தடிப்பது போல் அடித்து, அந்த வலிய (கிரவுஞ்ச) மலையைக் கண்டு அதைப் பொடியாக்கி, திருச் செந்தூரில் புகுந்து அங்கு வாழ்பவனே, சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திருச் சிற்றம்பலத்து அத்தன் செவிக்குப் பண்பு உறச் செப்பும் பெருமாளே. ... (அனைவரும்) மேம்பாடுற ப்ரணவமாகிய (நமசிவாய என்ற) ஐந்தெழுத்தின் பொருளை, தில்லையில் கூத்தாடும் தந்தையின் காதில் முறைப்படி உபதேசித்த பெருமாளே.