உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து இளகிப் புளகித் திடமாயே
உடை சுற்றும் இடைச் சுமை ஒக்க அடுத்து அமிதக் கெறுவத்துடன் வீறு தரம் ஒத்து உபயக் களபத் தள(ம்) மிக்க வனத் தருணத் தனம் மீதே
சருவிச் சருவித் தழுவித் தழுவித் தவம் அற்க விடுத்து உழல்வேனோ
அரி புத்திர சித்தசன் அக் கடவுட்கு அருமைத் திரு மைத்துன வேளே
அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த அசுரப் படையைப் பொருவோனே
பரிவுற்றவருக்கு அருள் வைத்து அருள் வித்தக முத்தமிழைப் பகர்வோனே
பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடிப் பதியில் குமரப் பெருமாளே.
மார்பில் பொருந்தி இரண்டு சிமிழ்கள் போல வட்ட வடிவு கொண்டு, குழைந்து புளகாங்கிதம் கொண்டு, வலிமை கொண்டு, ஆடை சுற்றி அணியப்படும் இடைக்குச் சுமையாக நன்கு பொருந்தி, அளவு கடந்த கர்வத்துடன் மேம்பட்டு விளங்கும் தன்மை கொண்ட, இரண்டு கலவைச் சாந்தும் செஞ்சாந்தும் நிரம்பிய அழகான, இளைய மார்பகங்கள் மீது, மிகப் பழகி தழுவித் தழுவி, தவ நிலையை வேரோடு விட்டுத் தள்ளி நான் திரியலாமோ? திருமாலுக்கு மகனான மன்மதன் என்னும் அந்தக் கடவுளுக்கு அருமையான, அழகிய மைத்துனனே, செவ்வேளே, வலிமை வாய்ந்த சேவல் என்னும் நல்ல கொடியைக் கட்டி, துன்பம் விளைவித்த அசுர சேனையுடன் சண்டை செய்தவனே, அன்பு வைத்த அடியார்களுக்கு கருணை வைத்து திருவருளைப் பாலிக்கும் ஞான மூர்த்தியே, முத்தமிழில் தேவாரப் பாக்களை (திருஞானசம்பந்தராக அவதரித்து) அருளியவனே, வயல்களில் பிரகாசிக்கின்ற முத்துக்களைக் கொண்ட எட்டிகுடி என்னும் பதியில் குமரப் பெருமாளே.
உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து இளகிப் புளகித் திடமாயே ... மார்பில் பொருந்தி இரண்டு சிமிழ்கள் போல வட்ட வடிவு கொண்டு, குழைந்து புளகாங்கிதம் கொண்டு, வலிமை கொண்டு, உடை சுற்றும் இடைச் சுமை ஒக்க அடுத்து அமிதக் கெறுவத்துடன் வீறு தரம் ஒத்து உபயக் களபத் தள(ம்) மிக்க வனத் தருணத் தனம் மீதே ... ஆடை சுற்றி அணியப்படும் இடைக்குச் சுமையாக நன்கு பொருந்தி, அளவு கடந்த கர்வத்துடன் மேம்பட்டு விளங்கும் தன்மை கொண்ட, இரண்டு கலவைச் சாந்தும் செஞ்சாந்தும் நிரம்பிய அழகான, இளைய மார்பகங்கள் மீது, சருவிச் சருவித் தழுவித் தழுவித் தவம் அற்க விடுத்து உழல்வேனோ ... மிகப் பழகி தழுவித் தழுவி, தவ நிலையை வேரோடு விட்டுத் தள்ளி நான் திரியலாமோ? அரி புத்திர சித்தசன் அக் கடவுட்கு அருமைத் திரு மைத்துன வேளே ... திருமாலுக்கு மகனான மன்மதன் என்னும் அந்தக் கடவுளுக்கு அருமையான, அழகிய மைத்துனனே, செவ்வேளே, அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த அசுரப் படையைப் பொருவோனே ... வலிமை வாய்ந்த சேவல் என்னும் நல்ல கொடியைக் கட்டி, துன்பம் விளைவித்த அசுர சேனையுடன் சண்டை செய்தவனே, பரிவுற்றவருக்கு அருள் வைத்து அருள் வித்தக முத்தமிழைப் பகர்வோனே ... அன்பு வைத்த அடியார்களுக்கு கருணை வைத்து திருவருளைப் பாலிக்கும் ஞான மூர்த்தியே, முத்தமிழில் தேவாரப் பாக்களை (திருஞானசம்பந்தராக அவதரித்து) அருளியவனே, பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடிப் பதியில் குமரப் பெருமாளே. ... வயல்களில் பிரகாசிக்கின்ற முத்துக்களைக் கொண்ட எட்டிகுடி என்னும் பதியில் குமரப் பெருமாளே.